Tuesday 28 July 2020

பருப்பு விலை வரலாறு காணாத உயர்வு: பொது மக்கள் கடும் அதிர்ச்சி



தமிழ்நாடு : பருப்பு வகைகளின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில், போதுமான அளவு உற்பத்தி இல்லாததால், பருப்பு வகைகளுக்கு, வட மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. பருப்பு வகைகளின் மொத்த விற்பனை மார்க்கெட், சென்னை, சவுகார்பேட்டையில் இயங்கி வருகிறது.இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான பருப்பு வகைகள், லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊரடங்கு பிறப்பிக்கும் முன் மார்ச் வரை துவரம் பருப்பு கிலோ, 80 ரூபாய்; உளுத்தம் பருப்பு, 90 முதல், 100 ரூபாய்; கடலை பருப்பு, 70 ரூபாய்; சிறுபருப்பு, 75 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

ஊரடங்கு காலத்தில், ஏப்ரல் முதல் பருப்பு வகைகளின் விலை, 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தற்போது, சென்னையில் சில்லறை விலையில், கிலோ துவரம் பருப்பு, 135 ரூபாய்; உளுத்தம் பருப்பு, 170 ரூபாய்; கடலை பருப்பு, 120 ரூபாய்; சிறு பருப்பு, 155 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வருவாய் இன்றி தவிப்போருக்கு, இந்த விலை உயர்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கால், வடமாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் வரத்து குறைந்துள்ளதே, விலை உயர்வுக்கு காரணம் என, சென்னை பருப்பு மொத்த வியாபாரிகள் கூறி வருகின்றனர்.பருப்பு வகைகளின் விலையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment