Wednesday 30 September 2015

நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் தொடங்கியது: சரக்கு போக்குவரத்து பாதிப்பு




சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது. 

அக்டோபர் 1-ம் தேதி முதல் கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தது. இதில் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தது. நேற்று மாலை மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மோட்டார் காங்கிரஸ் நடத்தி வருகிறது. 

இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான லாரிகள் இயக்கப்படாமல், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், பால், காய்கனிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

இந்த போராட்டத்தால் தினமும் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு 1500 கோடி ரூபாய் வரையும், அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் இழப்பு ஏற்படும் என்று மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய சங்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில், அகில இந்திய டிரான்ஸ்போர்ட்டர்களை நல சங்கம் பங்கேற்கவில்லை. தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் பங்கேற்கவில்லை.

மரபுகளை மீறி செயல்படுகிறது தமிழக அரசு: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு



சட்டப்பேரவை மரபுகளை மீறி தமிழக அரசு செயல்படுவதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான நிதிக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பதே சட்டப்பேரவை மரபாகும்.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் கடந்த மார்ச் மாதம் முதல் 6 மாதங்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனவே, ஒரு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் திட்டங்களை 6 மாதங்களில் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. விதி 110-ன் கீழ் முதல்வர் புதிய திட்டங்களை அறிவிப்பதால் நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் இழந்துவிட்டது.
மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் மதுவின் மூலம் வரும் வருவாயை நுகர்வோர் குறைதீர்க்கும் நடைமுறைகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். இல்லையெனில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முழுக்க முழுக்க மரபுகளை மீறி தமிழக அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடற்படையில் இணைந்தது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான, 'ஐ.என்.எஸ்.,


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான, 'ஐ.என்.எஸ்., கொச்சி' இன்று (செப்டம்பர் 30ம் தேதி), கடற்படையில் இணைந்தது . மும்பை கடற்படைதளத்தில் நடைபெற்ற கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இதனை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
உள்நாட்டு தயாரிப்பில், இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., கொச்சியில், விண்ணில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் கொச்சி, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2வது மிகப் பெரிய போர்க்கலாகும். 7500 டன் எடை கொண்ட ஐஎன் எஸ் கொச்சி, போர் விமானங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடியதாகும்.
சுமார் ரூ4000 கோடிக்கு அதிகமான முதலீட்டில் இந்த போர்க்கப்பல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த போர்க்கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 வீரர்களும் பணியாற்ற உள்ளனர். உள்நாட்டில் தயாரானா ஐஎன்எஸ் கோல்கட்டா கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் கொச்சியை தொடர்ந்து 2016 ம் ஆண்டு இறுதியில் ஐஎன்எஸ் சென்னையும், 2018-2019 ம் ஆண்டில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினமும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. ஐஎன்எஸ் கொச்சி
இந்திய கடற்படைக்கு கூடுதல் பலமாக அமையும். இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும். என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரும் ஐஎன்எஸ் கொச்சி பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: இலவச தரிசனத்துக்கு 14 மணிநேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 14 மணிநேரம் ஆனது.

புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று, சனிக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பஸ்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாட்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் ஏழுமலையானின் மகிமைக்குச் சான்றாக விளங்குகிறது. இதனால், புரட்டாசி மாத சனிக்கிழமையில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. 3–ந்தேதி புரட்டாசி 3–வது சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும், வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

இந்தநிலையில் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 18 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தனர். அன்று ஒரேநாளில் மொத்தம் 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை - பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு



பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது


தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில் மின்வாரியத்திற்கு ரூ.415 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே மின்சாரக் கொள்முதலில் ஊழல் நடந்ததை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.
2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்சாரம் வாங்கியதில் ரூ.109.60 கோடி மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதே அளவு தொகை தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக கிடைத்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு எவ்வளவு, எந்தெந்த காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிடாமல் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தான் இந்த இழப்புக்கு காரணம் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிரூபிக்கலாம். உதாரணமாக, பவர் டிரேடிங் கார்ப்பரேசன்(Power Trading Corporation Limited-PTC) என்ற நிறுவனத்திடமிருந்து 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த மின்சாரம் போதாது என்று தோன்றியதால் 2011 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 2011 பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்றும், இரண்டாவது ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.6.75 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முதல் ஒப்பந்தப்படி 2011 மார்ச் மாதத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்ற விலையில் 2.02 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அதில் பாதியளவு, அதாவது 1.18 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே வழங்கியது.
அதேநேரத்தில் யூனிட் ரூ.6.75 என்ற விலையில் 1.37 கோடி யூனிட் வழங்குவதற்கு பதிலாக 2.08 கோடி யூனிட் மின்சாரம் வழங்கியிருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் இரு விலைகளில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை உரிய அளவில் வழங்காமல், அதிக விலைக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அதிக அளவில் வழங்கியிருக்கிறது. 2011 ஏப்ரல் மாதத்திலும் இதே நிலை நீடித்தது. இதனால் 2 மாதங்களில் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் ரூ. 7.94 கோடி இழப்பு ஏற்பட்டது.
2014 ஆம் ஆண்டு வரை இதே போல் இரு விலைகளில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அதிக விலையில் கூடுதல் மின்சாரம் வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் தான் ரூ.109 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வழங்கி முடித்த பிறகு தான் இரண்டாவது ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. மின் நிறுவனங்களின் தவறுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஈடுகட்டவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் அதன்படி மின்சாரம் வழங்கத் தவறினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 வீதம் இழப்பீடு வசூலிக்க முடியும். அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் குறித்த காலத்தில் வழங்காத 264.90 கோடி யூனிட்டுகளுக்கு ரூ.280.37 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பைசா கூட இழப்பீடாக வசூலிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, 2011 நவம்பர் முதல் 2012 ஜூன் வரையிலான காலத்தில் ஒப்பந்தப்படி மின்சாரம் வழங்காததற்காக தனியார் நிறுவனங்களிடம் இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடி காரணமின்றி திரும்பத் தரப்பட்டு விட்டது.
மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் சில தி.மு.க. ஆட்சியிலும், பல அ.தி.மு.க. ஆட்சியிலும் கையெழுத்திடப்பட்டவை. அதனால் அதில் நடந்த ஊழலுக்கு இரு கட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், வழங்கப்படாத மின்சாரத்திற்காக இழப்பீடு வசூலிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு தான் இருந்தது. அந்த அரசு தான் இழப்பீட்டை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், மின் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு இடையிலான பேரங்கள் காரணமாக இழப்பீடு வசூலிக்கப்படவில்லை; இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைத்தன என்பதே உண்மை. இதுதவிர தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரத்திற்கான கடன் உத்தரவாதக் கடிதத்தை மின்சார வாரியம் தராததால் சில நிறுவனங்கள் மின்சாரம் தர மறுத்து விட்டன. அதே மின்சாரத்தை வேறு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதால் கூடுதலாக அரசுக்கு ரூ.25.64 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடன்குடி மின்திட்டம் தொடர்பாக பெல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டிருந்த கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ரூ.21.64 கோடியும், நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி கருவிகளை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூ.29.79 கோடியும் இழப்பு ஏற்பட்டன. இந்த இழப்புகள் தவறுதலாக ஏற்பட்டவை கிடையாது; இவை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை என்பதால் இவற்றை ஊழலாகத் தான் கருத வேண்டும். எனவே, இந்த இழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இழப்புக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தி மிதிவண்டிப் பரப்புரை, மகளிர் மாநாடு: திருமாவளவன் அதிரடி





வரும் அக்.2 - தமிழகம் தழுவிய அளவில் கிராமந்தோறும் இலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் மிதிவண்டிப் பரப்புரை, அக்.31 - திருச்சியில் ‘மது ஒழிப்பு மகளிர் மாநாடு’ நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தினோம்.  ஆனால், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றுவிட்டது.  அரசு மதுபானக் கடைகளை மூட முடியாது எனவும், மக்களைத் திருந்தச் சொல்லுங்கள் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைக்கான அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.  அமைச்சரின் இந்தப் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.  

மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு மிகவும் பிடிவாதமாக நடந்துகொள்ளும் சூழலிலும் மதுஒழிப்புக் கோரிக்கையை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  கடந்த இரண்டு வார காலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!’ என்கிற முழக்கத்துடன், மதுஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்பியக்கத்தை மேற்கொண்டு வருகிறது.  வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கியும், வீதி நாடகங்களை நடத்தியும் தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.  

மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் தனது தோப்பிலிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள் முதல், மதுவிலக்குக் கொள்கையை தனது உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டு பரப்புரை செய்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாள் வரை நடைபெற்றுவரும் மதுஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்பியக்கத்தின் இறுதி நாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் மிதிவண்டிப் பரப்புரையை விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொள்கிறது.  தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் இப்பரப்பியக்கத்தில் இலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கிறார்கள்.  

அக்டோபர் 3ஆம் நாள் முதல் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் பெண்கள் அணியான மகளிர் விடுதலை இயக்கம், கிராமந்தோறும் மது ஒழிப்புப் பரப்பியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.  அக்டோபர் 31 அன்று மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருச்சியில்  ‘மது ஒழிப்பு மகளிர் மாநாடு’ நடைபெறவுள்ளது. பல்வேறு மகளிர் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அணி திரண்டு மதுக் கடைகளை மூட வலியுறுத்தியும் மதுஒழிப்புக் கொள்கையை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

நடிகர் சங்க தேர்தல்: ரஜினியிடம் ஆதரவு திரட்டிய சரத்குமார் அணியினர்


நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறது. 

சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். மேலும், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். நடிகர்கள் கார்த்தி, பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இரு அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல முன்னணி நட்சத்திரங்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் அணியினர் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டினர். 

இந்நிலையில் தற்போது, சரத்குமார் அணியினர் தங்களது அணிக்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், தியாகு, பாத்திமா பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது அணிக்கு ஆதரவு கேட்டனர். 

நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

மதிப்பற்ற மனித உயிர்களை காத்திட பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் - முதல்வர் ஜெயலலிதா


முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில்  கூறியிருப்ப தாவது:-

மனித உயிர்  காக்கும் ரத்த தானம்  குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம்  ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்  அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ  ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் ரத்தத் தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவி களுக்கும்  ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறது. 

தமிழகத்தில்  அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த  ஆண்டு 8,63,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ரத்த வங்கிகள் மூலம் மட்டும்  3,50,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளில் பெறப்படுகின்ற மொத்த ரத்த அலகுகளில் 99 விழுக்காடு தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் பெறப்படுகின்றன.  இதன் காரணமாக தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக   விளங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4118 ரத்த தான முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியின் தலை மையிலான அரசு தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஒரு ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும்,  இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்து சிறப்பிக் கிறது.  

நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும்,  விலை  மதிப்பற்ற மனித உயிர்களை  காத்திடவும், பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன். 
ரத்த தானம் செய்திடு வோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சியில் வை.கோ பேசுகிறார்



நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி
நேதாஜி இயக்கத்தின் சார்பில், நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி நாளை (01.10.2015) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் நேதாஜி இயக்கத் தலைவர் வைகோ, செயலாளர் தேபிபிரசாத் புருஷ்டி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்
இதற்காக ஏராளமானோர் நிகழ்ச்சியை காண ம.தி.மு.க வினர், நேதாஜி உணர்வாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஏராளமானோர் திரளுகின்றனர்.

ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம் - தலைமைக்கழகம் அறிவிப்பு



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலைகுழு உறுப்பினர்களாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன், விருது நகர் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முக சுந்தரம், அரியலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்

நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: ஐவருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் தண்டனை


2006ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம், இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தது.
அதில், மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 188 பேர் மரணம் அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என்று சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட் விவகார அவமதிப்பு வழக்கு: முதன்முறையாக சென்னை ஐகோர்ட் நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு




ஹெல்மெட் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பேரமர்வு விசாரிக்க பரிந்துரை 

ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிந்துரைத்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திரை வைத்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில், இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றியது இதுவே முதல் முறை.
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அப்போது, நீதிபதிகளையும் விமர்சனம் செய்தனர். மேலும் ஹெல்மெட் உத்தரவுக்கு எதிராக 12 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தர்மராஜ், தலைவர் என்ற பொறுப்பில் தீர்மானங்களில் கையெழுத்திட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவற்றை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழ்வாணன், "மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், செயலாளரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் பரிசீலிக்கப்படும். இல்லாவிட்டால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பேரமர்வு விசாரணைக்கு மாற்றலாம்" என்று பரிந்துரைத்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.
அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகம், விசாரணை நடைபெறும் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது கவனிக்கத்தக்கது. நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பான வழக்கு நடவடிக்கையை ஏராளமான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பார்த்தனர்.

குறைந்த விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் விற்பனை நீடிப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக உள்ள காரணத்தால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை மிகக் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  வழங்கப்பட்டு வருகின்றன.  துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை 30.9.2015 வரை  வழங்கிட நான் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தேன்.  

வெளிச் சந்தையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர் அளவில் உள்ளதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி நியாய விலைக் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தினை மேலும் ஓராண்டுக்கு அதாவது 30.9.2016 வரை நீட்டிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் படி ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு தலா 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கப்படும். 
நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இத்திட்டத்திற்கென தமிழக அரசுக்கு ஆண்டிற்கு 2,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பொய் வழக்கு போட்டு என்னை சுட்டுக்கொல்ல சதி: சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு யுவராஜ் எழுதிய பரபரப்பு கடிதம்







சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயரிங் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்மன் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள யுவராஜ் குடும்பத்தினரிடம் தரப்பட்டது.
இந்த நிலையில் யுவராஜ் வாக்குமூலம் என்ற பெயரில் 15 பக்க கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி, மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் யுவராஜ் கூறி இருப்பதாவது:–
என் மீதும் எனது பேரவையின் ஆட்கள் மற்றும் ஏகப்பட்ட நபர்கள் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பல வழக்குகள் திருச்செங்கோடு, நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்ட விரோத தொடர் டார்ச்சர்களினாலேயே திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் மனம் உடைந்து போனார். நேர்மையாக பணியாற்ற வந்த அவர் இவர்கள் செய்த தவறுகளால் பலிகடாவாக மாறி அவமானப்பட போகிறோம் என்ற நிலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார். எனவே, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒரு பெண்ணும், 23 வயது மதிக்கத்தக்க பையனும் சண்டையிட்டபடி இருந்தனர்.
நான் அந்த பையனையும், பெண்ணையும் என் அருகே வருமாறு சைகையை காட்ட இருவரும் எனது அருகே வந்தனர். அப்போது அந்த பெண் தனது பெயரை சுவாதி என்றும், அந்த வாலிபர் கல்லூரியில் படித்த தோழன் என்றும், நட்பாக பழகி வந்த என்னை இன்று கல்லூரியில் உள்ள பழைய பெண்கள், ஆண்கள் இன்று திருச்செங்கோடு மலைக்கு வருகின்றனர். நீ, வா மீண்டும் நாம் ஒன்றாக நண்பர்கள் அனைவரும் சந்திப்பது அரிது எனக்கூறவும் நான் வந்தேன். ஆனால், இங்கு யாரையும் காணோம்,
இவன் என்னை காதலிப்பதாக கூறுகிறான். நண்பர்கள் முன் வந்து காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகிறான் என்று கூறினாள்.
அதற்கு நான், உனது தந்தைக்கு போன் செய்து தெரிவிக்க வேண்டியது தானே என்றேன். பிறகு அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி உனது வீட்டுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டிருந்த வேளையில், எனது சைடில் நின்றுக்கொண்டிருந்த பையன் ஓடி மறைந்து விட்டான்.
பிறகு அந்த பெண்ணை வீட்டில் விட அழைத்தேன். அதற்கு அந்தப்பெண் வீட்டில் ஒருவரும் இல்லை என்றார்.
பிறகு மலையில் வேறு நண்பர்களுடன் பேசிக்கொண்டு உள்ளே இருந்தேன். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்.
மறுதினம் சக்கரபாணி ஆய்வாளர் கேட்கும்போது இந்த தகவலை தெரிவித்தேன். பிறகு மதியம் 2.45 மணியளவில் திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் என்னை மொபைலில் அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்க, நான் அலுவலகத்தில் சங்ககிரியில் இருப்பதாக கூறினேன்.
கோகுல்ராஜ் எங்கே என்றார். யார் அது என நான் கேட்க... அந்த சுவாதி பெண்ணிடம் இருந்து எதற்காக போனை பெற்று சென்றீர்கள் என கேட்டார்.
அதற்கு நான் பெற்று சென்றது தவறுதான். ஆனால், அதனை கொடுத்துவிட்டு வரச்சொல்லி அவர்களது வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என கூறினேன்.
இல்லை நீங்கள் பிடுங்கி செனறுவிட்டதாக அந்த பெண் கூறுகிறார் என கூறவும். அதிர்த்த நான் உடனே உங்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வருகிறேன் என்றதும் சரி வாருங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
சிறிதுநேரத்தில் எனது நண்பர்கள் சங்ககிரியில் உங்களது வீட்டில் திருச்செங்கோடு ஆய்வாளர் சக்கரபாணி தலைமையில் போலீசார் விசாரிப்பதாகவும், என்னை தேடுவதாகவும் எனது தாய், தந்தை, மாமியார், தம்பி, பேரவை ஆட்கள் என சிக்கிய அனைவரையும் பிடித்து செல்வதாகவும் கூறினார்கள்.
ஒரு செல்போனுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என சந்தேகம் அடைந்த நான் விசாரிக்கும்போது, அந்த மாணவன் ரெயில்வே ரோட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
எனது குடும்பத்தாரிடம், நான் கொன்று விட்டதாக கூறவும், பேரதிர்ச்சியடைந்த நான், எங்கோ தவறு நடக்கிறது. என்ன உண்மை என அறிய முயன்றபோது, இந்த இறப்பை வைத்து எனக்கு எதிராக அரசியல் காய் நகர்த்த சிலர் திட்டமிடுவதை அறிந்து, நான் உடனடியாக எனது செல்போனை அணைத்து விட்டு தோட்டத்திற்கு திரும்பி விட்டேன்.
அனைவரையும் பிடித்து சென்று விட்டதால், போனை ஆன் செய்யாமல் தோட்டத்தில் இருந்தேன்.
பின்னர் என்னை முதல் குற்றவாளியாகவும், எனக்கு கீழே அருண்குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஜோதிமணி, சந்திரசேகரன் ஆகிய 9 பேர் மீது அந்த இளைஞனை கடத்தி கொன்றதாகவும், தீண்டாமை வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப் பதிந்து வழக்கு ஆவணப்படி 6 பேரை 1.7.2015 அன்று கைது செய்தபோது நான் கொலைச்செய்ததாக வாக்குமூலம் அளித்தாகவும் ஆவணங்களில் உள்ளது.
இந்த பொய்யான, போலியான ஆவணங்களையும், மற்ற விவரங்களையும் நேர்மையான அதிகாரியான டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவை பெயரளவுக்கு மட்டும் விசாரணை அதிகாரியாக வைத்து மற்ற அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த சட்டவிரோத செயல்பாடுகளே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய காரணம் என்பதையும் என்னால் நிரூபிக்க முடியும்.
நான் குற்றவாளி இல்லை என்பதையும் என்னால் நிரூபிக்க இயலும். இதன் உண்மை தன்மையும் புலன் விசாரணை செய்தாலே நான் குற்றவாளி இல்லை என்பதும், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ள அவரது தலைமையை பயன்படுத்தி போலியாக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கே எனவும், ஆதாரபூர்வமாக அறிய முடியும்.
என் மீது தொடர்ச்சியாக எண்ணிடலங்காத பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. என்னை சுட்டுக் கொன்றுவிட்டு ஏதோ ஒரு கதையை கட்டமாட்டார்கள் என்பதற்கும், அப்படி எண்ணாமல் இருப்பதற்கு யாரேனும் உத்தரவாதம் தர இயலும் சூழ்நிலை உள்ளதா? நீங்களே எண்ணிப் பாருங்கள்.
காவல்துறை மூலமாக எனக்கு தடை ஏற்படுத்த உள்ள சூழ்நிலையை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்களது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

அரியலூர் அருகே சாமி கும்பிடுவதில் தகராறு 144 தடை உத்தரவு, இருதரப்பிலும் முன்னெச்சரிக்கையாக 156 பேர் கைது


அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தில் மீண்டும் பதட்டத்தை உருவாக்கும் விதமாக அவ்வூரில் உள்ள ஐயனார் கோவிலில் வழிபாடு செய்திவதில் இரு சமூக மக்களிடையே பிரச்சனை எழுந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று 9 மணிக்கு கோவிலில் நுழையபோவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்ததை தொடர்ந்து இரு சமூகத்தினற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ராஜகோபாலன் இன்று முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பதட்டம் காரணமாக கிராமத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோட்டாட்சியர் மற்றும் அறநிலையத்துறையினர் கோவிலுக்கு சென்று ஒரு சமூகத்தினரின் பூட்டை உடைத்துவிட்டு வேறு பூட்டை போட்டு சீல் வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தரப்பிலும் சுமார் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday 29 September 2015

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!

ஜாதி பாகுபாடு மாற்றம் பெற்றதற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செயல்படுவதற்கும் காரணம் தந்தை பெரியாரே!
தந்தை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் அளிக்காதது ஏன்?

சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கருத்துரை

சென்னை, செப்.29 ஜாதி ஒழிப்பு - இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் மலர்ந்திருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரே! தந்தை பெரியா ருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்; கொடுக்கப் படாதது ஒரு குறைபாடே என்று சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி உரையாற்றியபோது தந்தை பெரியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட போதெல்லாம் அரங்கமே அதிரும் அளவுக்கு நீண்ட கை தட்டல் கிடைத்தது. (28.9.2015)
சென்னை பல்கலைக் கழகத்தின் 158ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் 28ஆம் நாள் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் காந்தியார் - இராஜாஜி ஆகியோரது பேரனும், பல்லாண்டு காலம் இந்திய வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பு வகித்த கோபாலகிருஷ்ண காந்தி பட்டமளிப்பு பேருரை ஆற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டோர்  முனைவர் பட்டம் மற்றும் பிற பட்டங்களில் விருது மற்றும் பரிசுகளைப் பெற்றனர்.
பட்டமளிப்புப் பேருரை யானது சென்னை, தமிழ் நாட்டின் சிறப்பு, நாட்டு நிலைமை, பட்டம் பெறுவோர் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய கருத்துச் செறிவுடன், இலக்கிய நயத்துடன் இருந் தது. கோபாலகிருஷ்ண காந்தி தமது உரையின் பொழுது பல கட்டங்களில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு அவர் ஆற்றிய மிகப் பெரிய சமுதாயப் பணி மற்றும் அதன் தாக்கம் ஏற்படுத்திய மேம்பாட்டு விளைவு பற்றிக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியாரின் பங்களிப்பு
சென்னையின் சிறப்புக்கு பெருமை சேர்ந்தவர்கள் வரிசையில் சமூக தத்துவ விளக்கம் பற்றிய பங்களிப்பில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவிடும்  சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு அடிப்படைக் காரணம், ஜாதி அமைப்பு முறை மற்றும் ஜாதியால் மனிதரில்  ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்பட்டு வருவதே ஆகும். ஜாதி  பாகுபாடு ஒழிப்பில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் முற்போக்குக்குக் காரணம் தந்தை பெரியாரும் அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் தான் அடிப்படைக் காரணம். தந்தை பெரியாரின் சமுதாய மேம்பாட்டுப் பணி போற்றுதலுக்குரியது;
ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கிவிடும் வகையில் உள்ள இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு முறை தொடர்ந்திட தந்தை பெரியார் ஆற்றிய பணி மகத்தானது. இதிலும் தமிழ்நாடு முன் மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட மத நல்லிணக் கங்களும், சமய சார்பின்மையும் தமிழ்நாட்டில் அதிகமாக நிலவுகிறது. இதற்குக் காரணமான அரசியல், சமூக சீர்திருத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாரத ரத்னா பட்டம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அளிக்காதது குறைபாடே!
மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்த பெரு மக்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வரிசையில் இரு பெரும் தலைவர்கள் பெயர் விடுபட்டுப் போய் விட்டது. அவர்தாம் பெருமைக்கு உரிய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஆவார். இது வரை பாரத ரத்னா விருது  இரு  பெரும் தலைவர்களுக்கு வழங்கப் படாதது ஒரு பெரும் குறையே என ஆதங்கத்தோடு தமது பட்டமளிப்பு விழா பேருரையில் கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார்.

மோடி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டவரா? பா.ஜ.க.முதலமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (29.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :-

அக்டோபர், 1 : நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் :

நடிகர் திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் என பல்வேறு விருதுகளை பெற்று உலகப் புகழ் பெற்ற நடிகராக சிறப்பு பெற்ற சிவாஜி கணேசன் அவர்களின் 88 ஆவது பிறந்தநாள் விழா சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் 1.10.2015 அன்று மாலை 3.00 மணியள வில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இவ்விழாவின் சிறப்புரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. சு. திருநாவுக்கரசர், இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்த்த இருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைக்கிற வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்களை 'சாதக பறவைகள்" குழுவினர் இசையமைத்து பாட இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்பட காட்சிகளின் தொகுப்பு அகண்ட திரையில் ஒளிபரப்பப்படும். விழாவின் நன்றி உரையை திரு. எர்ணஸ்ட் பால் கூற இருக்கிறார். 

இவ்விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. இராஜசேகரன் அவர்களும், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்களும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்க காங்கிரஸ் இயக்கத்திற்கு எண்ணற்ற இளைஞர்களை தனது கலைத்துறை பணியின் மூலம் ஈர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழகத்தில் ஆட்சியை இழந்து 48 ஆண்டுகளாகியும் ஜீவனுள்ள இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று சொன்னால் அதில் சிவாஜி அவர்களுடைய பங்கு மகத்தானது.  காங்கிரஸ் இயக்கத்தில் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். காங்கிரஸ் கட்சியையும், சிவாஜியையும் பிரித்துப் பார்க்க முடியாது. அத்தகைய மாபெரும் நடிகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் விழா எடுப்பதில் மிகுந்த பெருமைப்படுகிறோம். 

தேசியம் வளர்த்த நடிகர் திலகத்தின் புகழ்பாடும் இவ்விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிவாஜி ரசிகர் மன்ற தோழர்கள் பெருமளவில் வருகைபுரிய இருக்கிறார்கள். இவ்விழாவுக்கு தமிழகத்திலுள்ள காங்கிரஸ் நண்பர்கள் பெருந்திரளாக வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.

அக்டோபர் 2 நிகழ்ச்சி:

அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள்; பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள். இந்நாளில் காலையில் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நண்பர்கள் பங்கேற்பார்கள். அன்று மாலை 4 மணியளவில் தமிழகமெங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் தயாரித்து அனுப்பப்பட்ட ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு” என்கிற துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடையே விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பிரச்சாரத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த பிரச்சாரத்திற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு?” என்கிற ஒலிநாடா நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படுவதோடு, வாகனத்தின் வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டு பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது. 

மத்தியசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. என். ரங்கபாஷ்யம் அவர்கள் சென்னை சூளை நெடுஞ்சாலை (இந்திராகாந்தி சிலை அருகில்) மாலை 4 மணியளவில் ஏற்பாடு செய்துள்ள ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு?” ஆதரவு பிரச்சாரத்தில் நான் பங்கேற்கிறேன்.

மதுவிலக்கை பொறுத்தவரை அதை வலியுறுத்துகிற தகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 1937 முதல் 1967 வரை மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை மூதறிஞர் ராஜாஜிக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் உண்டு. அதை வலியுறுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு ஆதரவு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோடியின் அவதூறு பிரச்சாரம்:

இந்தியாவின் பிரதமராக இதுவரை இருந்தவர்கள் உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையையும், கௌரவத்தையும் உயர்த்திப் பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு சுற்றுப் பயணங்களில் ஆற்றுகிற உரை இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது கலிபோர்னியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை கடும் ஆட்சேபனைக்கும், கண்டனத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே உரையாற்றிய மோடி, ஊழலைப் பற்றி வாய்கிழிய பேசி மறைமுகமாக அன்னை சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். 

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக சவால் விட்டு ஒரு கருத்தை கூற விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், இளந்தலைவர் ராகுல்காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் மீது இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா ? முதல் தகவல் அறிக்கையேனும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா ? இந்த தலைவர்கள் மீது பா.ஜ.க.வினர் ஆதாரத்தோடு உருப்படியாக இதுவரை ஊழல் குற்றச்சாட்டு கூறியதுண்டா ? உண்மை நிலை இவ்வாறிருக்க அந்நிய மண்ணில் இருந்து கொண்டு அவதூறு சேற்றை அள்ளி வீசுவதைவிட வெட்கக் கேடான அரசியல் அநாகரீகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? இதற்கு பதில் சொல்ல பா.ஜ.க.வினர் தயாரா ?

நரேந்திர மோடி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டவரா ? அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லையா ? பா.ஜ.க. முதலமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா ? 

மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. அரசு நிகழ்த்திய வியாபம் ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது குறித்து பா.ஜ.க. என்ன பதில் கூறப்போகிறது ? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும், லலித் மோடியும் இணைந்து நடத்திய ஊழல் உலகப் புகழ் பெற்று விளங்குகிறதே, அதற்கு பா.ஜ.க. என்ன பதில் சொல்லப் போகிறது ? பொது விநியோகத் துறையில் ஜார்க்கண்ட் அரசு ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறித்து நரேந்திர மோடியின் பதில் என்ன ? 

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும், லலித் மோடியும் இணைந்து ஊழல் செய்து நடத்திய முதலீடுகள் குறித்து நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன் ? எந்த ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும் நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கிற மிருகபல மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு அனைத்தையும் அமுக்கி, மறைத்து விடலாம் என்று நரேந்திர மோடி பகல் கனவு காணுகி;றார். ஆனால் நாட்டு மக்கள் 16 மாத ஆட்சியை கண்டு அலுத்துப் போயிருக்கிறார்கள். மக்கள் நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி செல்வாக்கை நரேந்திர மோடி இழந்து வருகிறார். அதை மூடி மறைக்கவே வெளிநாடு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

கோட்டையில் ஜெயலலிதா கார் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதியரால் பரபரப்பு!

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கொலைமிரட்டல் விடுவதாகக் கூறி, அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தன் மனைவியுடன் முதல்வரின் கார் நிறுத்துமிடம் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று சட்டமன்ற நடவடிக்கைகளை காண மக்கள் திரண்டு வந்திருந்தனர். சட்டமன்றத்தில் கலந்துகொள்ள முதல்வர் ஜெயலலிதா வந்தபின், அதிகாரிகள் பார்வையாளர்களை கண்காணித்தபடி இருந்தனர். அப்போது பகல் 12 மணியளவில் முதல்வரின் கார் நிறுத்தப்படும் போர்டிகோ அருகே ஒரு தம்பதி, திடீரென தங்களிடமிருந்த சிறிய கேனில் இருந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதைக்கண்ட காவல்துறையினர் பதறியடித்தபடி அவர்களை தடுத்து, அவர்களிடமிருந்து கேனை பிடுங்கி எறிந்தனர். உடனடியாக அவர்களை முதலுதவிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
விசாரணையில் அவர்கள் தருமபுரி மாவட்டம் மோளையாணுரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கவிதா தம்பதியர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரான அவரை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன், தனிப்பட்ட பகையின் காரணமாக கட்சிப்பதவியை பிடுங்கிவிட்டதோடு, தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மூலம்  ஊராட்சிமன்றத் தலைவர் பதவியிலிருந்தும் தகுதிநீக்கம் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனு அளித்ததற்காக அமைச்சரும், அவரது உறவினர்களும் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் இதுதொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே தீக்குளிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சட்டமன்ற நிகழ்வின்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், தன் மனைவியோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கரூரில் 5.50 ஏக்கரை போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்த தொழில் அதிபர்கள் இருவர் கைது




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூர் பகுதியை சார்ந்தவர் துரைசாமி (வயது 75), இவருக்கு 1926 ல் கரூர் அடுத்த சுங்ககேட் பகுதியில் உள்ள சிவசக்தி நகரில் சுமார் 9.58 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்த நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கொளரிபுரத்தை சார்ந்த அங்காளம்மன் எக்ஸ்போர்ட் உரிமையாளர் இராமசாமி, அவரது நண்பர் அண்ணாமலை எக்ஸ்போர்ட் உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், துரைசாமிக்கு சொந்தமான நிலத்திலிருந்து சுமார் 5.50 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட துரைசாமி சம்பவ இடத்திற்கு சென்று கேட்டதற்கு இந்த நிலம் எங்களுக்கு சொந்தம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமியின் நிலத்தை மீட்டு அவரிடமே ஓப்படைக்குமாறு உத்திரவிட்டதோடு, நிலத்தை அபகரித்த இரு தொழிலதிபர்களை கைது செய்யுமாறு உத்திரவிட்டார். இதனடிப்படையில் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு போலீஸார் அந்த இரு தொழிலதிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். பின்பு வழக்கை விசாரித்த நீதிபதி இந்த இருவருக்கும் தனிநபர் ஜாமின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார். மேலும் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் இராமசாமி முன்னாள் அ.தி.மு.க ஆட்சியில் தாந்தோன்றி மலை பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறதா ?




மும்பை: மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்றதும், தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கடந்த ஆண்டு, மகாத்மா காந்தியின்  பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் இத்திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு  பெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய அரசின் பிரசார பாடல் ஒன்றில், ராஜ்யசபா எம்பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர  வீரருமான சச்சின் குரல் கொடுத்துள்ளார். இசை அமைப்பாளர்கள் சங்கர்-ஈஷன்-லாய் கொண்ட மூவர் கூட்டணி இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளது.  இந்த பாடலை எழுத்தாளர் பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார். முகேஷ் பட் தயாரிக்கிறார். ஆனால் இதில் ஒரு சில வரிகளை மட்டுமே சச்சின்  பாடியுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஓராண்டு நிறைவு தினமான வரும் அக்டோபர் 2ம் தேதி இப்பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரபலமான சச்சின் மூலம் இந்த கீதம் பொது மக்களை எளிதில் சென்றடையும் என மத்திய நகர அபிவிருத்தி அமைச்சக அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். இதனிடையே ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் கூறியுள்ளார். இது  குறித்து அவர் மேலும் கூறுகையில், அனைத்து வகையான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் நம்முடைய வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன.

இன்னும் காலம் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்களில் ஏராளமான வசதிகள் வரும். மொபைல் போன்களின் வருகைக்கு பின்னால், தொலை தொடர்பு  மேம்படுத்தப்பட்டுள்ளது. பயணங்களின் போதும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது என்றார். மொபைல்போன்களின்  வருகைக்கு முன்னால், குடும்பத்தினரை தொடர்பு கொள்வது எவ்வளவு கடினமானது என்பதையும் சச்சின் நினைவு கூர்ந்தார்.

ரூ. 36 லட்சம் செலவில் திருக்குறள் கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை ஜெயலலிதா அறிவிப்பு


முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்க என்னால் ஆணையிடப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையி லும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படை யிலும், கொரியாவில் தமிழர் களும், தமிழகத்தில் கொரியர் களும், வாழ்ந்து வருவதைக் கருதியும் பார்போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். ’

இதற்கென, முப்பத்தாறு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், ஓரடியில் உலக மக்களுக் கேற்ற எளிய அற நெறிக் கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென, பதினைந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  
இந்த அறிவிப்புகள், தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறபட்டு உள்ளது

பத்திரிக்கையாளர் ஓய்வூதிய தொகையை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தினர் சார்பில் நன்றி....


தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பத்திரிக்கையாளர் பென்சன் 7500 8000 மாகவும், குடும்ப ஓய்வூதியத்தை,4500 லிருந்து 4750 ஆக உயர்த்தி பத்திரிக்கையாளர்களின் நலனில் மேலும் அக்கறை கொண்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் (CUJ) சார்பில் மூத்தபத்திரிக்கையாளரும், தலைவருமான வி.அன்பழகன் நன்றி  தெரிவித்து உள்ளார்