Monday 21 December 2015

தமிழ்நாடு முழுவதும் ஆற்று மணல், தாது மணல், பாக்சைட், சுண்ணாம்புக் கல் போன்ற கனிமவளக் கொள்ளைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் ம.தி.மு.க உயர்நிலைக்கூட்டத்தில் தீர்மானம்




மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று (21.12.2015 திங்கள்கிழமை) காலை 09.00 மணிக்கும்,
மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10.00 மணிக்கும், கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1:
சென்னை மாநகரில் பெய்த பெருமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சென்னை முழுவதும் மூழ்கிப்போனது.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், இலட்சக்கணக்கான மக்கள் உடலில் ஒட்டியிருந்த உயிரைத் தவிர அனைத்தையும் துறந்துவிட்டு, வீடு வாசல்கள், உடைமைகளை இழந்து விட்டு வெளியேறி, உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் இன்றி, வீதிகளில் அலைந்த கொடுமை நூற்றாண்டு காணாத துயரம் ஆகும்.
வழக்கத்தைவிட மிக அதிகமாக மழையின் அளவு இருந்தது என்று கூறப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதுதான் இத்தகைய பேரழிவுக்குக் காரணம் ஆகும். நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முன்னுக்குப்பின் முரணாகக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றார். மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் சீர்குலைந்ததற்கும், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
மழை வெள்ளத்தால் சென்னை மட்டும் அன்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அரசுக் கணக்கின்படி மொத்தம் 347 பேர் உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனால், உண்மையில் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்தனர். பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய விளைபயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. இயற்கைப் பேரிடரால் தமிழகம் வரலாறு காணாத பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஒட்டுமொத்தச் சேத மதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் மத்திய அரசிடம் 10,560 கோடி ரூபாய் மட்டும் உதவி நிதியாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து வெள்ளச் சேதங்களை மதிப்பீடு செய்துள்ளது. எனவே மத்திய அரசு தமிழகத்தை இயற்கை பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரணத் தொகை ஒதுக்கித் தர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் பெரும் சீரழிவுக்கு உள்ளானதற்கு ஏரிகள், குளங்கள், நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பும், பல ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியப் போக்குமே காரணம் ஆகும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சுமார் 5 ஆயிரம் ஏரிகள் இருந்த நிலையில், தற்போது வெறும் 2600 ஏரிகள் மட்டுமே இருப்பதாகப் பொதுப்பணித்துறைப் பதிவு ஏடுகள் மூலம் தெரிய வருகிறது. அந்த ஏரிகளும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பெருகிக் கிடந்த ஏரிகள் தற்போது வெகுவாகச் சுருங்கி விட்டன. குறிப்பாக போரூர், வேளச்சேரி, புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேங்கைவாசல், செம்பரம்பாக்கம், ரெட்டேரி, புழல் ஏரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது.
சென்னையில் ஓடும் ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் செல்லும் பாதைகளில் குப்பைக் கூளங்கள் குவிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிசம்பர் 16 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா அடங்கிய முதல் அமர்வு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று டிசம்பர் 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இன்னொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏரிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கும், தூர் வாராமல் சீர்குலைந்து கிடப்பதற்கும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே காரணம். தி.மு.க. அரசு 2006 டிசம்பர் 30 இல் நீர்வழி புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளுக்குப் பட்டா வழங்கிட அரசு ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளவாறு தமிழகம் முழுவதும் நீர் ஆதாரப் பகுதிகளிலும் நீர்வழிப்பாதைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவித்தொகை எவ்விதத்திலும் போதுமானது அல்ல. முழுமையாகச் சேதடைந்த குடிசை வீடுகளுக்குக் குறைந்தது ரூ.25 ஆயிரம், பகுதி சேதம் அடந்த குடிசை வீடுகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள் இழப்புக்கு ஏற்ப நிவாரணத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
விவசாய நிலங்களில் சேதம் அடைந்த நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.5400 என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நெல், மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற விவசாயப் பயிர் இழப்புக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம், கரும்பு, வாழை, பருத்தி, சவுக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒன்றரை இலட்சம் தோட்டப் பயிர்கள் சேதத்திற்கு ஏற்ப முழு இழப்பீட்டுத் தொகை அளித்திட தமிழக அரசு முன்வர வேண்டும். வெள்ள நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்றடைய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 5:
தலைநகர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாக வேதனையின் விளிம்பில் நின்ற மக்களுக்கு உடனடி மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஆறுதல் கூறவும், தேவையான உதவிகள் செய்யவும் ஆளும் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் முன்வராதது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியினரின் இத்தகைய அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களிடம் மனிதநேயப் பற்று குறைந்து விடவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நிராதரவாக நின்ற சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ஆயிரக்கணக்கானோர் ஓடோடி வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், உணவு, குடிநீர் அளிக்கவும், மருத்துவ உதவி வழங்கவும் மனிதாபிமான உணர்வுடன் துடிப்புமிக்க இளைஞர்கள் களம் இறங்கியதும், பேருதவி புரிந்ததும் வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
வெள்ளப் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிடத் தமிழகம் முழுவதிலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனிதநேய அமைப்புகள், சமூக அரசியல் இயக்கங்கள் ஆகியவை காலத்தே செய்த பணி மக்கள் துயர் துடைக்க உதவியது. இவர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சென்னை, கடலூர் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிட வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து உதவிய மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 6:
காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டுக்கு 11.7.2011 அன்று தடை விதித்து அரசு ஆணை பிறப்பித்தார். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தி.மு.க., ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை நீக்க முயற்சிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மே 7, 2014 இல் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் பிரமாண்டமான மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாடுகளை ஈட்டிகளால் குத்திக் கொல்லுவதைப் போல அல்லாமல் தமிழக ஜல்லிக்கட்டுகளில் துள்ளி வரும் காளைகள் மீது எவ்வித வன்முறையும் நிகழ்த்தப்படுவது இல்லை. கட்டிளம் காளையர்கள் வெறும் கைகளால் ஒரு சில நொடிகளே திமிலைப் பிடித்துக் கட்டுப்படுத்துகின்றார்களே தவிர, வேறு எந்தவிதமான கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்ற வீர விளையாட்டு ஆகும். அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நிரம்ப உள்ளன.
எனவே, தமிழர்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிட மத்திய -மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 இல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பதுடன், ஆகம விதிகளின் படிதான் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று டிசம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தத் தீர்ப்பு, அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அனைவரும் சமம் என்ற சமூக சமத்துவ உரிமையைப் பறிப்பது மட்டும் அன்றி, தகுதி திறமையைக் கணக்கில் கொள்ளாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் சமூக நீதிக் கோட்பாட்டையும் தகர்த்து உள்ளது.
மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் பெயராலும் மனிதர்களிடையே வேறுபாட்டை வளர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து, தந்தை பெரியாரின் கனவை நனவாக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8:
மழை வெள்ளத்தால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நீர்ப்பாசனப் பயிர்கள் முழுமையாக அழிந்து விட்டதால், விவசாயிகள் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர். எனவே வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன்களையும் மத்திய - மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் தொகையை அரசே செலுத்துவதுடன், இத்திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வருமானத்தை இழந்துவிட்டனர். தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இவர்களுக்கும் வெள்ள நிவாரண உதவித் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கிட ஏதுவாக வட்டி இல்லாக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 10:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றது.
சட்ட ஆணையர் சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையில் கிரானைட் கனிம வளக் கொள்ளை மூலம் தமிழக அரசின் கருñலத்துக்கு ஒரு இலட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த இழப்புக்குக் காரணமான தி.மு.க., மற்றும் அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் பதவியில் இருந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆற்று மணல், தாது மணல், பாக்சைட், சுண்ணாம்புக் கல் போன்ற கனிமவளக் கொள்ளைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 11:
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) நடத்தும் நுழைவுத் தேர்வை இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் குஜராத்தி மொழியிலும் எழுதலாம் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
தொடர் மழையின் காரணமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கழகத்தின் 5ஆவது அமைப்புத் தேர்தல் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது

Friday 18 December 2015

கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ 21 ஆயிரத்திற்கு ஏலம்




ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய மக்களால் உலகெங்கும் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு விழா கரூர் நகரத்தார்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் அமைந்துள்ள இராணி சீதை ஆச்சி மஹாலில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு விழாவில் கரூர், புலியூர், கரிக்காலி, குளித்தலை, முசிறி, வேலாயுதம்பாளையம், முசிறி, வாங்கல், ஐயர் மலை என மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 800 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நகரத்தார் சங்க தலைவர் சுப.செந்தில் நாதன் நோன்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் கல்வி உதவித் தொகையாக 10 மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எடுத்த 8 மாணவ, மாணவிகளுக்கும் பரிசும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விநாயகர் கூட்டு வழிபாடு செய்து சமூக பெரியவர்கள் இழை (எனப்படும், 21 நாட்கள் நோன்பிருந்து ஒவ்வொரு நூல் இலைகளையும் திரித்து அதில் மாவினை கொண்டு) யினை   சுடரேற்றி சமூகத்தின் பெரியவர்கள் வழங்க அனைவரும் மாவினால் கொண்ட நூல் இழை எடுத்துக் கொண்டு உண்டு நோன்பு களைத்தனர்.
பின்னர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மங்கலப் பொருட்கள் ஏலத்தை மேலை.பழநியப்பன் நடத்தினார்., இதில் ஒரு கிலோ உப்பு ரூ 21,000 த்திற்கும், எழுமிச்சம்பழம் ரூ 7 ஆயிரம், தேங்காய் ரூ 5 ஆயிரத்திற்கும், குழந்தை சட்டைகள் ரூ 5 ஆயிரத்திற்கும், நாட்டுச் சக்கரை ரூ 3600 க்கும் விலை போனது. இந்த மங்களப் பொருட்களை ஏலத்தின் மூலம் எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம், வணிகம், குழந்தைப் பேறு ஆகியவனைகள் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் காலம் காலமாக இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக மேலை.பழநியப்பன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கு.ம.குமார், கரு.ரெத்தினம், விஷ்ணு மெய்யப்பன், லெட்சுமணன், மோகன், ஆறுமுகம், கைலாசம், உண்ணா ஆச்சி ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல் கரூர் திண்ணப்பா திரையரங்கு அருகில் உள்ள பி.எல்.ஏ ராம். ரெசிடென்ஸியிலும், பி.எல்.பழநியப்பன் – சேதுராமு ஆச்சி ஏற்பாட்டில் பிள்ளையார் நோன்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கும் இதே போல ஏராளமான சமூக மக்கள் கலந்து கொண்டு பிள்ளையார் அருள் பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடராஜா வள்ளியப்பன், வலம்புரி சோமு, எஸ்.கதிரேஷன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Thursday 17 December 2015

தொடர்ந்து பெய்த மழை இனி நமக்கு பாடமாக இருக்கட்டும் இனிமேலாவது நதிகளின் குறுக்கே அணை கட்டினால் இயற்கை சீற்றங்களை தடுக்கலாம் – காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் இராஜாராம் கோரிக்கை









காவிரி நதி ஜீவ நதி, மொழி வாரி மாநிலம் அமைந்ததால் காவேரியின் உற்பத்தியிஸ்தானம் கர்நாடகம் என அமைந்து விட்டது. கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மகிரி மலைத்தொடரில் பாக மண்டலத்திலிருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் தலைக்காவேரியில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகிறது.

இந்த காவிரி நதியானது கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் 81.155 சடுர கிலோ மீட்டர் பரப்பு காவேரி நீர்வரத்துபகுதி ஆகும். காவேரி கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 320 கி.மீட்டர் ஓடுகிறது. இதற்கு உபநதிகளாக ஹேரங்கி, ஹேமாவதி, லக்‌ஷ்மண தீர்த்தா, கபிணி. சொர்ணவதி ஆகும். இப்படி காவிரி நதியில் மட்டும் இத்தனை பாசனம் பெறும் நமக்கு இப்போது பெய்த பருவ மழை ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளம், நதிக்கு செல்லும் பாதையை புதுப்பித்து, ஆங்காங்கே நதிகளின் குறுக்கே அணையை கட்டி நாம் அந்த மழை நீரை சேமித்து ஒரு சொட்டு கூட கடலில் கலக்காமல் சேகரித்தால் தமிழகம் தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் இராஜாராம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தினமலர்.காம் இணையதளத்திற்கு கொடுக்கும் சிறப்பு பேட்டியாவது., காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம் (தமிழ்நாடு) 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. காவிரியின் பிரச்சினை கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் 1924 ம் வருட அங்கிகாரம் ரத்து என்று சொன்னதற்கு பிறகு அந்த உரிமையை மீட்டுத்தருவதற்காக இந்த சங்கம் அமைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது 17, 20 வருடங்கள் நடந்து, அதன் பிறகு உச்சநீதிமன்றம், இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு செய்கிறதா ? , இல்லையா ? என்று கேட்டதற்கு, மத்தியில் வி.பி.சிங், மாநிலத்தில் கருணாநிதி இருந்த போது நடுவர் மன்றம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த நடுவர் மன்றம் அமைத்து கொடுத்து அங்கீகாரம் வழங்கி கொடுத்த கருணாநிதிக்கு தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் காவிரி  கொண்டான் என்ற விருது எங்களது சங்கத்தின் மூலம் விருது வழங்கப்பட்டது. அந்த சமயம் கெசட் ஆகி விட்டது. அந்த கெசட்டில் போட வேண்டுமா ? என மத்திய அரசு தள்ளி போட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த பாடு பட்டு அதை கெஜட்டில் போட வேண்டும் என்று பாடுபட்டார். அதற்காக தஞ்சையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு தஞ்சையில் மாநாடு நடத்தி பொன்னியின் செல்வி என்ற விருதையும் வழங்கினோம். ஆக இந்த சங்கம் காவிரியின் உரிமை, கர்நாடகாத்திலிருந்து நமக்கு பெற வேண்டிய தண்ணிரை பெறுவதற்கு ஒரு வழக்கு போட்டு அதில் ஓரளவு சக்சஸ் ஆகி விட்டது. இப்போது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு என்ன ? சொல்லி இருக்கிறது என்றால், 419 டி.எம்.சி தமிழ்நாட்டின் பங்கு என சொல்லி இருக்கிறது. அந்த அளவு வரும் போது, 192 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் என சொல்லி இருக்கிறது. மிச்சம் சுமார் 210 டி.எம்.சி தண்ணீர் எப்படி வருகிறது என்றால் தமிழகத்தில் உள்ள அமராவதி, பவானி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் இருந்தும் கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்யும் மழைகளினால் தான், இந்த 220 டி..எம்.சி தண்ணீர் தான் நமது பங்கு என சொல்லி உள்ளமோ தவிர நாம் அந்த தண்ணீரை தேக்க எதாவது முயற்சி செய்கிறோமா ? என்றால் அது கிடையாது இந்நிலையில் கடந்த 1956 – 57 ம் ஆண்டு மதிப்பிற்குரிய காமராஜர் அவர்கள் ஆங்காங்கே அணைகள் கட்டினார், அமராவதி அணையும், பவானி அணையும் கட்டினார். மேலும் அதே காலத்தில் அதிகமாக மழைபெய்யும் போது காவிரி ஆற்றின் கரூர் மாவட்டத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் கட்டினார். தடுப்பணையும் கட்டினார். அதற்கு பிறகு யாரும் அணை கட்ட வர முன் வரவில்லை. நல்ல இன்ஜினியர்களை கொண்டு ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டினால் நல்லது என ஆங்காங்கே புத்தகங்கள் கொடுத்து போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் மாயனூர் கதவணை கட்டி அதில் 1.05 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்தோம். அதே போல அந்த கதவணையில் உள்ள கிரமாங்களில் சுமார் 5 கி.மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு விளைச்சலும் நன்கு உள்ளது. அது போல ஒரு மாதத்திற்கு முன்னர் 1 சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகா அரசு கூறியதையடுத்து கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் எங்கள் சங்கம் சார்பில் விஷேச வேள்வி நடத்தினோம். பிறகு நன்கு மழை பெய்தது, சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் மழை சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை செல்லும் பாதையை அபகரித்து கட்டிடம் கட்டியதால் தான் இந்த சேதம், ஆதலால், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் நீர்வழிப்பாதைகளை எடுக்கணும், இது போல செய்தால் எதிர்காலத்தில் நல்ல ஒரு தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும் தற்போது மாறியுள்ளது. இரு மாதத்திற்கு முன்னர் நாம் நதியிலிருந்து வரும் தண்ணீரை சேகரித்தால் போதும் தமிழகம் தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும், ஆதலால் விவசாயம் செழிக்கவும், இண்டஸ்ட்ரீஸ் போன்றவைகளின் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டுமானால் மத்திய, மாநில அரசு ஒன்றிணைந்து வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி ஆகியவற்றைகளை ஒன்றிணைத்து அணை கட்டினாலே போதும், உலகளவில் தமிழகம் தண்ணிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Wednesday 16 December 2015

தமிழக அளவில் 2016 சட்டமன்ற தேர்தலில் முதலில் முந்திய விவசாயிகள் ! விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்காததை அடுத்து அவர்களே போட்டியிட முடிவு – கரூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தை விவசாயிகள் துவக்கினார்



தமிழக அளவில் வரும் 2016 வருடம் கூட பிறக்காத நிலையில் 2016 சட்டமன்ற தேர்தல், அறிவிக்கப்படாத நிலையில் தங்களுடைய எந்த கோரிக்கையும், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் விவசாயிகளே தன்னந்தனியாகவும், விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கினார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலை, க.பரமத்தி, லட்சுமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை எளிய முறையில் எந்த வித கட்சி கொடி இல்லாமல் துண்டு பிரச்சூரங்களை மட்டுமே படித்த இளைஞர்களிடம், பொதுமக்களிடமும் கொடுத்ததோடு, படிக்காத பாமர மக்களிடையே எளிய முறையில் அறியும் படி எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மற்றும் பிரச்சூரத்தில் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் பெருந்தகையை மீறியும் சாயக்கழிவு கலந்த நீர் ஆற்று நீருடன் கலப்பதையும், நோயாளி, கடனாளி, போராளி இம்மூவரும் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தால் தான் இச்சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். அந்த அளவிற்கு சூழ்நிலையில் விவசாயிகளையும், பொதுமக்களையும் தள்ளியுள்ளதாகவும் அதில் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் கடைசியாக தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்றென்றும் உங்கள் நலன் காக்கும் விவசாய அமைப்பு என சொல்லி ஒட்டுக் கேட்கும் அந்த விவசாயிகளின் நூதன பிரச்சாரம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த பிரச்சார பயணத்தில் திருப்பூர் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நொய்யல் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான நொய்யல் இராமசாமி இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.

பேட்டி : நொய்யல் மா.இராமசாமி – தலைவர் – நொய்யல் பாசன விவசாயிகள் நலச்சங்கம்

Tuesday 15 December 2015

அறுபதுக்கு மேலும் ஆனந்த வாழ்க்கை ! லெட்சுமி விலாஸ் வங்கியில் பயிலரங்கம் - மேலை.பழநியப்பன் பங்கேற்பு




கரூர் லெட்சுமி விலாஸ் வங்கி பதிவு அலுவலகத்தில், பணியாளர்கள், பயிற்சி கல்லூரி சார்பில் வங்கிப் பணியில் ஒய்வு பெற உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒய்வினையொட்டிய பயிலரங்கு நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கில் திருக்குறள் பேரவை செயலாளரும், தமிழிசை சங்க செயலாளருமான மேலை.பழநியப்பன் கலந்து கொண்டு “அறுபதுக்கு மேலும் ஆனந்த வாழ்க்கை” என்ற தலைப்பில் பயிலரங்கை 3 மணி நேரம் நடத்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மேலை.பழநியப்பன் பேசியதாவது., பணி ஒய்வு என்பது வயதால், உடல் தளர்வை எண்ணி தரப்படுவது தவிர இனி எப்படி இருக்குமோ, எப்படி இருக்குமோ என்று தளராமல் எப்பொழுதும் போல் செயல்படுங்கள், ஆசைப்பட்டு சேமிப்பை தெரியாதவர்களிடமோ, மாய வார்த்தைகளுக்கு மயங்காமலோ பாதுகாப்பாக உங்கள் பெயரிலேயே சேமிப்பாக்குங்கள், உறவுகளிடம் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்துங்கள் நூல்கள் நிறைய படியுங்கள், உடற்பயிற்சியை பின் பற்றுங்கள், வளரும் தலைமுறைக்கு வங்கி, வங்கிப்பணி, வங்கி பயன்பாடு கற்றுக் கொடுங்கள், கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நல்ல எண்ணங்கள் சிந்தனைகளை நிறைய வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை நிறைய வாங்கிப் படித்து உங்கள் பெயரப்பிள்ளைகளுக்கு சேமிப்பாக்குங்கள், பணி நேரத்தை பயனுள்ள தன்னார்வ சேவைக்கும், வழிகாட்டுதலுக்கும் பயன்படுத்துங்கள். இயற்கையை நேசித்து. இயற்கை உணவை பின்பற்றி, கனிவான சொற்களை பயனுள்ள சொற்களைப் பேசி, பிடிவாதம் தளர்த்தி அன்பால் நூற்றாண்டுக்கு மேலும் ஆனந்தமாக, ஆரோக்கியமாக வாழலாம் என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பயிற்சிக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். பயிற்சி பட்டறைக்கு வந்த அனைவரையும் பேராசிரியை அன்புலதா வரவேற்றார். பேராசிரியர்கள் கார்த்திகேயினி, ரான்சம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஒய்வு பெறும் அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

ராமநாதபுரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி


ராமநாதபுரம் அருகே இறப்பிலும் இணைபிரியாத தம்பதியால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராமநாதபுரம் சிங்காரத் தோப்பைச் சேர்ந்தவர் வேதமுத்து ஆஸ்டின்(88). இவரது மனைவி பிரீடா ஆஸ்டின்(84). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராக வேதமுத்து ஆஸ்டின் பணியாற்றினார். அப்போது மதுரை லேடி டோக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக இருந்த பிரீடா ஆஸ்டினை காதலித்தார். இருவரும் 1956-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கனடா சென்று, அங்கு இருவரும் ஒரு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர்களாகப் பணியாற்றினர். அங்கு 48 ஆண்டுகள் தங்கியிருந்தனர். ஓய்வுக்குப் பின் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா திரும்பி உள்ளனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இருவரும் ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் உள்ள தம்பி ஸ்டீபன் ஜெயசீலன் குடும் பத்தினருடன் வந்து தங்கினர். இவர்களை ஸ்டீபன் ஜெயசீலன், அவரது மகன் சைமன், மருமகள் கீதா ஜாஸ்மின் ஆகியோர் பரா மரித்து வந்தனர்.
இருவரும் 80 வயதை கடந்த வர்களாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்து வந்துள்ளனர். வீட்டில் தங்க ளுக்காக உடற்பயிற்சி மையமும் வைத்திருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந் த பிரீடா ஆஸ்டின் கடந்த 12-ம் தேதி இரவு 8.30 மணிக்கு இறந்தார். இதனால் வேதமுத்து சோகத்துடன் இருந்தார். பிரீடாவின் சடலம் டிச.14-ம் தேதி அடக்கம் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில், மனைவி இறந்த சோகத்துடன் இருந்த வேத முத்து கடந்த 13-ம் தேதி இரவு 8.30 மணிக்கு இறந்தார். மனைவி இறந்த அதே நேரத்தில் குறிப்பாக 24 மணி நேரத்தில் கணவரின் உயிரும் பிரிந்ததால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.
வாழ்க்கையில் இணைபிரி யாமல் வாழ்ந்த இவர்கள் இறப்பிலும் ஒன்று சேர்ந்தனர். இருவரது சடலமும் ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
வேதமுத்து ஆஸ்டின், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அப்துல்லாவின் நண்பர். இவரது சகோதரர் ஸ்டீபன் ஜெயசீலன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் பள்ளித் தோழர். கலாம் ராமநாதபுரம் வரும்போதெல்லாம், ஸ்டீபன் ஜெயசீலனை சந்தித்துவிட்டுச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நிவாரணத்துக்காக கடந்த ஒரு வாரத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.111 கோடி குவிந்தது


முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடி குவிந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக  முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தலைமைச் செயலகத்தில் பலர் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் 15ந் தேதி (நேற்று) நிதியுதவி வழங்கினார்கள்.மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆர்.முத்து குமார், அந்த நாளிதழ்களின் சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.6 லட்சம்;

என்.ஏ.சி. ஜுவல்லர்சின் மேலாண்மை இயக்குனர் அனந்தபத்மநாபன் ரூ.25 லட்சம்; கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குனர் கே.வெங்கட்ராமன் அந்த வங்கியின் சார்பில் ரூ.2 கோடி, மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமான ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.3 கோடி;

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா (அய்யப்பன்) ரூ.3 கோடி; கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ரூ.2 கோடி;

சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பி.சி.துரைசாமி மற்றும் இயக்குனர் டி.சாந்தி ஆகியோர் ஒரு கோடி ரூபாய்; ஜி.ஆர்.டி. ஜு வல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள்  ஜி.ஆர். அனந்தபத்மநாபன் (ஆனந்த்) மற்றும் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய்;

நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிசான் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர் கியோம் சிகார் ஒரு கோடி ரூபாய்; கோயம்புத்தூர், பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு அண்டு சன்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் ரூ.12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15ந் தேதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 8ந் தேதியில் இருந்து முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்குவது, கடந்த 8ந் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday 14 December 2015

விளம்பரம் பிடிக்காத விஜயபாஸ்கர் கரூர் அ.தி.மு.க வின் உண்மை நிலை - ஒரிஜினலாக விஸ்வரூபமெடுத்தது அ.தி.மு.க







அண்ணன் வீட்டை விட்டு கிளம்பிட்டாரு ! அண்ணன் குத்துவிளக்கேற்றுகிறாரு ! அண்ணன் சாமி கோயிலில் சாமிகும்பிடுகிறார் ! இப்படி இருந்த அ.தி.மு.க தற்போது புகழ்ச்சியை விரும்பாமலும், ஏழை எளிய தொண்டன் என்கிற வார்த்தை மட்டுமே காதில் கேட்கிறது – மாவட்ட செயலாளர் மாற்றத்திற்கு பிறகு அ.தி.மு.க அபரீத வளர்ச்சி
நாடோடிகள் படத்தில் வருவது போல, அண்ணன் டீ கடை திறந்து வைக்கிறார். அண்ணன் மற்றவர்களுக்கு வாழ்வளித்த போது என விளம்பரம், விளம்பரம், பிளக்ஸ், உள்ளூர் தொலைக்காட்சிகளில் மட்டுமே பெருமை கண்ட கரூர் அ.தி.மு.க நிர்வாகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திடீரென அந்த விளம்பரத்தினாலும், விளம்பர பிரியனுமான செந்தில் பாலாஜியால் மிகுந்த பாதிப்படைந்த விஜயபாஸ்கர் என்பவரை தேர்ந்தேடுத்து அ.தி.மு.க மாவட்ட செயலாளராக அறிவித்தார். அதாவது எந்த ஒரு செயல் செய்யினும், அதில் புகழ்ச்சி ஏற்படாவிட்டாலும் கடையேனும் தொண்டனுக்கும் பயன்பெறும் வகையில் அமையாமல் வெறும் விளம்பரம் மட்டுமே தேடிக்கொள்ளும் செந்தில் பாலாஜி மத்தியில் அவரை வளர்த்த விட்ட பல மூத்த நிர்வாகிகளை மதிக்காமலும், அவர்களின் நிகழ்ச்சியை மறைத்து அவர்களை ஓரங்கட்டிய செந்தில் பாலாஜியை திடீரென மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா திடீரென மாற்றினார். இந்த நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள அடிப்படை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செந்தில் பாலாஜியால் பழி வாங்கப்பட்ட விஜயபாஸ்கரை திடீரென மாவட்ட செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில் கட்சி பதவி அறிவித்ததில் இருந்து எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சி சுமார் 7 மணி என்றால் 6.45 க்கே அங்கு சென்று பொதுமக்களிடையே அடிப்படை தொண்டர் போல் தான் எங்கும் சென்று வருகிறார். தற்போதைய மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், மேலும் எந்த நிகழ்ச்சிக்கும் பிளக்ஸ் பேனர் வைப்பதில்லை. அப்படி வைத்திருந்தாலும் கட்சி சின்னமும், கட்சி கலர் மட்டும் இல்லாமல் கட்சியின் சாதனையும் மட்டும் தான் உள்ளது. இவரின் பெயரை கரூர் மாவட்டத்தில் ஏதாவது பேப்பரிலும், டி.வியிலும் வந்தால் மட்டுமே. அப்படி பப்ளிசிட்டி பிடிக்காமல் செயலில் மட்டுமே முழு வீச்சில் ஈடுப்பட்டிருக்கும். விஜயபாஸ்கர் கோயிலில் அன்னதானம் என்று எடுத்துக் கொண்டால் அன்னதானத்தை துவங்கி வைப்பதோடு, அந்த அன்னதானத்திலும் பங்குபெறுவது தான் இவருடைய நோக்கம், மக்களோடு, மக்களாக இவர் ஒரு மாவட்ட செயலாளர் என்பதை கூறிக் கொள்வதை விட அம்மாவின் அடிப்படை எளிய தொண்டன் என்றே கூறி கொள்வார். மேலும் எந்த ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பொதுமக்களோடு, பொதுமக்களாக கலந்து கொண்டு எந்த ஒரு அடிப்படை தொண்டன் மற்றும் நிர்வாகி மட்டுமில்லாமல், அத்தனை பேரையும் சமமாக கருதி, தொண்டருக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் தனி நபர் துதி பாடுவது இல்லாமல் முழுக்க முழுக்க ஒன்லி அம்மா தான் என்ற வார்த்தை மட்டுமே இன்றும் கூறி வருகிறார். மேலும் இவரது வாழ்க்கையை பார்க்க பார்க்க நடிப்பு என்பது கூறாமல் முழு மனதோடு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். ஆனால் கரூர் மாவட்ட மக்களுக்கு திடீரென ஒரு கேள்வி எழுந்துள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், அப்படி, இப்படி என ஏக வசனம் கூறிய மாஜியின் பிளக்ஸ், பேனர்கள் விளம்பரம் மத்தியில் இப்படி ஒரு சாதாரண மனிதனை எப்படி பார்ப்பார்கள் என்பது தான்.
ஆனால் எந்த ஒரு கட்சி மீட்டிங் மற்றும் நி்கழ்ச்சியாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளை முழுமையாக அரவணைத்து கொண்டு, ஒட்டு மொத்தமாக கூட்டம் கூட்டமாக அ.தி.மு.க வினர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக குறித்து நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் இவரது நோக்கமாக உள்ளது என்கின்றனர் கட்சியினர். ஒன்லி விளம்பரம் இல்லாமல் எளிய தொண்டனாகவே கட்சியில் களம் கண்டு வந்து வருகிறார். கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த அ.தி.மு.க வினரிடையே மட்டுமில்லாமல் மாற்று கட்சியினரையும் இவருடைய செயல் கவர்ந்துள்ளது என்கின்றனர். மேலும் முன்னாள் மாஜி அமைச்சர் சின்னசாமியோ, இப்படி அ.தி.மு.க வில் நிகழ்ந்திருந்தாலோ, இவர் அன்றே மாவட்ட செயலாளராக இருந்தாலோ நான் ஏன் தி.மு.க வில் இணைகிறேன் என்று சொல்லாத குறையாக ஆங்காங்கே சொல்லி வருகிறாராம்.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்திலேயே தற்போது பெய்து மழை வெள்ளத்திற்கு கரூரிலிருந்து அ.தி.மு.க சார்பில் அவ்வளவு நிவாரண பொருட்களை கொடுத்த பெருமை அ.தி.மு.க விற்கு என்று நாம் சொன்னால். அது அம்மாவிற்கு மட்டும் தாங்க இந்த பெருமை என்று அமைதியாக பதில் சொல்லி விட்டு செல்லும் மாவட்ட செயலாளரை இது வரை கட்சியில் பார்த்திருக்க முடியாது என்கிறனர் முன்னாள் மாவட்ட செயலாளர்கள். எது எப்படியோ அ.தி.மு.க கட்சி அபரீத வளர்ச்சி பெற்றது என்றால் கரூர் மாவட்டத்தில் நூற்றிற்கு நூற்று 10 என்கிற மாதிரி கரூரில் பெரும் புத்துணர்ச்சியை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
மேலும் வார்டு கவுன்சிலராக போஸ்டிங் போட்டுவிட்டாலே போதும் இந்த காலத்தில் அவர்களுடைய அளப்பரையில் நாடு தாங்காது. என்கிற வகையில் காரை விட்டு காலில் இரங்காது என்று பார்த்து பார்த்து புளித்த மக்களிடையே இவர் ஒரு வித்யாசமானவர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக அனைத்து சொற்களையும் ஒட்டும் மொத்தமாக இவருக்கு பொருந்தும் என்றால் அதுவும் மிகையாகாது


கரூர் அருகே பட்டா நிலத்தை கையகப்படுத்திய பஞ்சாயத்து தலைவரை கண்டித்து திடீரென தீக்குளிக்க முயன்ற முதிய தம்பதிகளினால் பெரும் பரபரப்பு – போலீஸ் காரர்கள் குவிந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.



கரூர் அருகே உள்ள புன்னஞ்சத்திரம் பகுதியை சார்ந்தவர் பழனியம்மாள், இவரது கணவர் அமாவாசையுடன் அருந்ததியர் தெருவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவரான சுப்பிரமணி என்பவர் இவர்களது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களுடைய நிலத்தை கையாடல் செய்ததாக புகார் தெரிவித்து அந்த புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அந்த முதிய தம்பதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீடீரென தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீக்குளிக்க தீப்பட்டியை எடுக்கும் போது போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவதம் தடுக்கப்பட்டன. மேலும் அந்த பழனியம்மாள் என்ற பெண்மணி அங்கேயே ஒப்பாரி வைத்ததால் கூட்டம் கூடியது. இச்சம்பவத்தையடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தற்போது தொடர் கதையாக உள்ளதாக பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Saturday 12 December 2015

கூடங்குளத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்க வேண்டும்: தென்மண்டல மாநாட்டில் ஜெயலலிதா உரை


தென் மண்டல மாநிலங்களின் 26–வது கவுன்சில் கூட்டம் இன்று ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடந்தது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அந்த உரையில் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்புக்கு தமிழக அரசு 30 ஆயிரம் அவசர கால உதவி கோரும் கருவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கருவி மீனவர்களுக்கு படிப்படியாக இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.2 கோடி கொடுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கான 75 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு மீன்வளத்துறைக்கு மத்திய அரசு இன்னும் ரூ.203 கோடி நிதி தர வேண்டியதுள்ளது. சின்னமுட்டம், குளச்சல், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் துறைமுக பணிகளை முடிக்க இந்த நிதியை மத்திய அரசு உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 2 தடவை ஆம்லா ஆபரேஷன் ஒத்திகை நடத்தப்படுகிறது. அது போல தமிழக மீனவர்கள் 39,401 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கடலோர மண்டல கட்டுப்பாடு திட்டங்கள் தமிழக மீனவர்களின் நலனை பாதிப்பதாக உள்ளது. எனவே அதில் இருந்து தமிழக மீனவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான ரூ.1520 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் சந்திக்கும் முச்சந்தி வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை 2013–ல் காணப்பட்டது. தமிழக அரசு இது தொடர்பாக பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதனால் 5 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்க நீலகிரி மாவட்ட உள்ளூர் போலீசாருக்கு நவீன கருவிகள் வழங்கப்பட வேண்டும். எனவே மத்திய உள்துறை அமைச்சகம், நீலகிரி மாவட்டத்தையும் பாதுகாப்பு தொடர்பான செலவின பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாவோயிஸ்டுகளை அடக்கும் விதமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
மத்திய அரசு தயாரித்துள்ள சாலை போக்குவரத்து வரைவு மசோதாவானது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே அந்த வரைவு மசோதாவை தமிழக அரசு ஏற்காது. அதை அமல்படுத்தும் முன்பு மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் முதல் யுனிட் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி அங்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் தரப்பட்டது.
தற்போது 24.6.2015 முதல் பழுதுபார்ப்பு பணிக்காக கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அது போல கூடங்குளத்தில் 2–வது மின் உற்பத்தி பிரிவை விரைவில் தொடங்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் டெங்கு, சிக்கன்குன்யா போன்றவற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகமும் மற்ற மாநில அரசுகளும் உடனுக்குடன் தகவல் கொடுக்க தகவல் தொடர்பை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உரையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை! கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை




முல்லைப் பெரியாறில் புதிய அணை! கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
நேற்று (டிசம்பர் 11) டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராவிடில், புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
முல்லைப் பெரியாறில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால், அணை உடைந்துவிடும் என்று இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுக்கள், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பைப் பலமுறை ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப்பெரியாறு அணை வலுவாக இருக்கின்றது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி, இறுதித் தீர்ப்பு வழங்கிய பின்னரும், தமிழக அரசை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டநீதிக்குப் புறம்பானதும் ஆகும்.
பத்து பேர் அடங்கிய நிபுணர் குழு பரிந்துரையை ஏற்றுத்தான், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று 27.2.2006 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத கேரள அரசு மறுபரிசீலனை செய்யுமாறு தாக்கல் செய்த மனு ஜூலை 2006 இல் உச்ச நீதிமன்ற அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
மார்ச் 2006 இல் கேரள அரசு நிறைவேற்றிய கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில், கேரளாவில் உள்ள அணைகளின் முழு கட்டுப்பாடு மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் அடாவடியாகக் கூறப்பட்டது.
இச்சட்டத்தை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்திட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிப்ரவரி 18, 2010 இல் உத்தரவிட்டது.
அதன்படி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்துபேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதித்தன்மை குறித்து பல கட்டங்களாக ஆய்வு நடத்தி, மார்ச் 25, 2014 இல் அறிக்கை தாக்கல் செய்தது.
கட்டுமான ரீதியிலும், தண்ணீரைத் தேக்கும் வகையிலும் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; எனவே அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்; சில பராமரிப்பு பழுதுகளைப் பார்த்த பிறகு நீர் மட்டத்தை மேலும் உயர்த்தலாம் என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, பி.சுதர்சன் ரெட்டி, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பற்றிய வழக்குகளை விசாரித்து மே 7, 2014 இல் இறுதித் தீர்ப்பு வழங்கியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயரம் உயர்த்தலாம் என்றும், கேரள அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், ரத்து செய்வதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து நீதிபதி ஆனந்த் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, அணையைப் பராமரிக்க மூன்றுபேர் கொண்ட குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மட்டும்தான் கேரள அரசின் கடமை என்பதை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thursday 10 December 2015

கரூரிலிருந்து ம.தி.மு.க சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் சுமார் 7.80 லட்சம் மதிப்பிலான பொருட்களை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பினர்




கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சிக்கு அடுத்த படியாக ம.தி.மு.க கட்சி தான் செயல்படுகிறது. மக்களுக்கான போராட்டத்திலும் சரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய பரணி.கே.மணியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ நீக்கியதையடுத்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். மேலும் இந்த பணியிடம் வெற்றிடமாக இருக்க கூடாது என்றும் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்றும் ம.தி.மு.க நிர்வாகிகள் கூறியதையடுத்து தாந்தோன்றி ஒன்றிய செயலாளராக பணியாற்றிய கபினி.சிதம்பரத்தை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ, கரூர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கபினி.சிதம்பரத்தை நியமித்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ம.தி.மு.க வினர், ம.தி,மு.க கட்சி உருவான போது காட்டிய எழுச்சியை கட்சியில் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வரும் நிலையில் கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அப்பணியில் அ.தி.மு.க விற்கு அடுத்தபடியாக ம.தி.மு.க கட்சி ஒன்று மட்டுமே இருக்கிறது. ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியினர் கேட்கும் இடத்தில் நிவாரண பணிகளை தொழிலதிபர்கள் கொடுத்து வரும் நிலையில்  ம.தி.மு.க வினர் தங்களது சொந்த பணத்தை போட்டு, காலிகுடங்கள், பெட்சீட், பாய்கள், பிஸ்கட், கொசுவலை, புதிய துணி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர். கரூர் மாவட்ட ம.தி.மு.க அலுவலகமான தாயகத்தில் இருந்து முதல் கட்டமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று  கரூர் மாவட்ட .தி.மு. அலுவலகமான தாயகத்தில் கரூர் மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் கபினி.சிதம்பரம் தலைமையில் வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பினர். அருகில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா., மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா.பொன்னுசாமி, இளைஞரணி நிர்வாகிகள், சிபிராஜ், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக ஆஇந்த வெள்ள நிவாரணப் பொருட்களின் மதிப்பு சுமார் 7.80 லட்சம் ஆகும். இந்த பொருட்களை .தி.மு. பொதுச்செயலாளர் வை.கோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட கட்சி தி.மு.க வினரும், ஆளுகின்ற கட்சி அ.தி.மு.க கட்சியினர் மத்தியில் எந்த வித பலனும் கிடைக்காமல் ம.தி.மு.க கட்சியினர் செய்து வரும் இப்பணி அப்பகுதி பொதுநல ஆர்வலர்களிடம் மிகவும் வரவேற்பைப்பெற்றுள்ளது


வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் ஆபத்து: வைகோ பேட்டி


சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இன்று ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, துணிமணிகளை மக்கள் நல கூட்டணி சார்பில் வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்களை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் வழங்கினார்கள். ஏறத்தாழ 2 ஆயிரம் பேருக்கு நிவாரணம் பொருள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பூங்காநகர் ராமதாஸ், ஜீவன், அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இன்னும் 2, 3 நாட்களில் பெரும் தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட உள்ளது. எலிக்கடி நோய் கூட ஏற்படும். உடனடியாக தமிழக அரசு குப்பைகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் துப்புரவு தொழிலாளர்களை வரவழைத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரேற்று எந்திரம் மூலம் மழைநீரை அகற்ற வேண்டும்.
இந்த மழை வெள்ள பாதிப்புக்கு அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் கோளாறு தான் காரணம். செம்பரம்பாக்கம் ஏரி நீரை முழுமையாக தேக்காமல் படிப்படியாக திறந்து விட்டிருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்காது.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை போதாது. 50 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.
வெள்ள நிவாரண தொகையை பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கண்காணிப்பு குழுக்கள் மூலமாக வழங்க வேண்டும்.
வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு அரசு ஒதுக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் தொகை போதாது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
பயிர் சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 என்றும் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் என்றும் அறிவித்து உள்ளார்கள். அதனை ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.