Monday 30 November 2015

கரூரில் தமிழக முதல்வரின் செயல்திட்டங்களை வெளிப்படுத்தி ஓளிபரப்பும் கேபிள் தொலைகாட்சி நிர்வாகம் மெத்தனம் – அம்மாவையும், அம்மா சார்ந்த அரசையும் காக்க மாவட்ட ஆட்சியரிடம் மூத்த பத்திரிக்கையாளர் மனு


தலையை மிஞ்சும் தலைமைக்கழக பேச்சாளர் – கரூர் கேபிள் டி.வி அடாவடி – முதல்வரை பற்றியோ, பொதுச்செயலாளரை பற்றியோ அவதூறாக டி.வியில் விட்டு விடுகிறார்.
மாஜியை பற்றியோ, மாஜியின் தம்பியை பற்றியோ டி.வியில் வந்தால் தனியார் தொலைக்காட்சியை துண்டிக்கிறார் – ஊடக நிருபர்கள் அடிமைகள் போல வாழ வைக்கும் அரசு கேபிள் டி.வி எம்.எஸ்.ஓ வை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கரூரில் தமிழக முதல்வரின் செயல்திட்டங்களை வெளிப்படுத்தி ஓளிபரப்பும் கேபிள் தொலைகாட்சி நிர்வாகம் மெத்தனம் – அம்மாவையும், அம்மா சார்ந்த அரசையும் காக்க மாவட்ட ஆட்சியரிடம் மூத்த பத்திரிக்கையாளர் மனு
கரூர் மாவட்ட தனியார் தொலைகாட்சி நிருபராக பணியாற்றி வருபவர் ஆனந்தகுமார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.,
பொருள் : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சாதனையை விளக்கும் கேபிள் டி.வி யில் உள்ள குளறுபடி, கேபிள் டி.வி வருவாயை முடக்கும் தனிநபர் துதி பாடும் கேபிள் டி.வி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து மாண்புமிகு அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூற வலியுறுத்தி
மேன்மைமிகு மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களுக்கு.,
இந்த மனு மூலம் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை மற்றும் நூதன முறையில் கேபிள் டி.வி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கொள்ளை திட்டத்தை அம்பலப்படுத்த விரும்புகிறேன்.
மேற்கண்ட முகவரியில் வசிக்கும் நான் கடந்த 1997 முதல் கரூர் மாவட்ட நிருபராக நாளிதழ்கள், தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க, தி.மு.க என ஆட்சி மாறி மாறி வருவதும் எனக்கு தெரியும்., அதனால் மக்கள் பெறும் நன்மைகள், தீமைகளும் எனக்கு தெரியும், ஆகவே கடந்த 4 ½ ஆண்டுகளாக நாடு போற்றும் நல்ல சாதனைகளை உலகறியச்செய்யும், அம்மாவின் விசுவாசிகள் நிறைந்த உலகில் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுடைய செய்தி தவறாக ஒளிபரப்பினால் அந்த தனியார் கேபிள் டி.வி யை துண்டிக்காமல் அப்போது இருந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி தவறாக ஒளிபரப்பினால் உடனே கேபிள் டி.வி யை துண்டிக்கும், கைய வஞ்சகம் வாய்ந்த கேபிள் டி.வி எம்.எஸ்.ஓ வை பற்றி மாண்புமிகு அம்மாவின் கவனத்திற்கும் நான் எடுத்துச் சென்றுள்ளேன். இந்நிலையில் அவர் பதவியில் இருக்கும் போது.,
அமைச்சர் அண்ணன் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்., அண்ணன் அமைச்சர் வந்து விடுவார், அமைச்சர் அண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமைச்சர் அண்ணன் கோயிலில் சாமி கும்பிடுகிறார். அமைச்சர் அண்ணன் கோயிலில் குத்துவிளக்கேற்றுகிறார். என அண்ணன் அமைச்சர் என்று தான் அரசு டி.வியான TACC T.V செயல்பட்டு வந்ததே தவிர அம்மா, அம்மா என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய் விட்டது. இருப்பினும் அமைச்சர் பதவி பறிக்கபட்ட பின்னர் அந்த டி.வியையே முடக்கினார்கள். ஏனென்றால் அமைச்சர் பதவிதான் இல்லையே அப்புறம் எதற்கு அரசு டி.வி என்ற வகையில் கரூர் எம்.எஸ்.ஓ நிர்வாகம் செயல்பட்டு வந்தது. பின்னர் தற்போது மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக கழக பணி மட்டுமில்லாமல் அரசு நிகழ்ச்சிகளிலும், சட்டென்று உரிய நேரத்தில் கலந்து கொள்ளும் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், ஆங்காங்கே அரசு கேபிள் டி.வியில் ஒளிபரப்பாகும் டேக் டி.வி என்பதை கரூரில் மட்டும் தான் காணப்படுகிறதே தவிர குளித்தலை, இலாலாபேட்டை, சித்தலவாய் ஆகிய பகுதிகளி காணப்படுவதில்லை. ஆகவே நாடு போற்றும் நான்காண்டு சாதனைகளை விளக்கி எடுத்துக்கூற டேக் டி.வி முழுவதும் அம்மாவின் செயல்பாடுகளையும்., அ.தி.மு.க வின் செயல்பாடுகளையும் ஒளிபரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் மதுபானக்கடைகளையும், மணல் குவாரிகளையும் முற்றுகையிட சென்றாலே, அல்லது அந்நியர் தலையீடு இருந்தாலோ எப்படி உடனே கைது நடவடிக்கை எடுக்கிறோர்களோ, அப்படி அரசு கேபிளில் வரும் வருமானத்தில் கையை வைக்கும் எம்.எஸ்.ஓ வையும் கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பத்திரிக்கை மற்றும் நாளிதழ்களை எரிக்க முயற்சி செய்யும் நபர்களை எப்படி கைது செய்கிறீர்களோ, அதே போல தனியார் தொலைக்காட்சிகளை வேண்டுமென்றே அந்த நிமிடத்தில் துண்டிக்கும் எம்.எஸ்.ஓ வையும் கைது செய்ய வேண்டுகிறேன்.
மேலும் கேபிள் எம்.எஸ்.ஓ என்பவர் தலைமைக்கழக பேச்சாளர் எனக்கூறப்படுகிறது. கேபிள் எம்.எஸ்.ஓ திரு அண்ணன் சந்திரசேகரன், தலைமைக்கழக பேச்சாளர் திரு அண்ணன் ஜெயம் மூர்த்தி ஆகியவர்கள் இருவரும் ஒருவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றில் மாற்றுப்பெயர் வைத்தாலும், ஐ.பி கொடுத்தவர்கள் தான் அ.தி.மு.க விற்கு செல்ல முடியும் என எதிர்க்கட்சியினர் எளனம் செய்வதை அம்மாவின் கவனத்திற்கு எடுத்து செல்ல என இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன். மேலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் செயல்களையும், திட்டங்களையும் மேலும் தொடர்ந்து கரூர் மாவட்ட எம்.எஸ்.ஓ தொடர்ந்து புறக்கணித்தாலும், கேபிள் டி.வி.யை துண்டித்தாலும் நீங்கள் நடவடிக்கை எடுத்து அம்மாவையும், அரசையும் காக்க வேண்டுகிறேன். நாடு போற்றும் நான்காண்டு சாதனைகளை கேபிள் டி.வி மூலம் ஒளிபரப்பி அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவே இந்த மனு. மேலும் தமிழகத்தில் குறிப்பாக கரூரில் தமிழ் சேனல்கள் துண்டிக்கப்படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என அம்மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாஜியின் கட்டுப்பாட்டில் தான் இன்னும் கேபிள் டி.வி நிர்வாகம் இயங்குகிறது. ஏற்கனவே சுமார் 10 க்கும் மேற்பட்ட கேபிள்கள் இயங்கிய நிலையில் அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளரும், கேபிள் டி.வி சக்கரவர்த்தியாக விளங்கும் ஜெயம் மூர்த்தி என்கின்ற சந்திரசேகரன் என்பவரது கட்டுப்பாட்டில் தான் இன்றும் இயங்குகிறது. அரசு செய்திகளும், அ.தி.மு.க செய்திகளும் இவர் கைஅசைத்தால் மட்டுமே உள்ளூர் தொலைக்காட்சிகளில் போடப்படுவதாகவும், ஏற்கனவே இவர் ம.தி.மு.க வில் சங்கொலி மூர்த்தி என்ற அழைக்கப்பட்டு , பின்னர் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டு பின்னர் மாஜியின் அப்போதைய எம்.எல்.ஏ காலம் கட்டத்தில் கேபிள் டி.வி ஆரம்பித்து சுமார் பல கோடி ரூபாய்களை அரசுக்கு நஷ்டக் கணக்கு காட்டி புது புது உள்ளூர் தொலைக்காட்சிகளை நடத்தியவர் ஆவார். மேலும் தலைமையை மிஞ்சும் தலைமைக்கழக பேச்சாளராக கரூர் மாவட்டத்தில் காணப்படுவதாகவும், அப்போதைய மாஜி செந்தில் பாலாஜி முதல்வர் கனவு கண்டார் எனில் இவர் தமிழக கேபிள் டி.வி கார்ப்பேரஷன் தலைவராகவும், அந்த துறை அமைச்சராகவும் கனவு கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ சிறப்பான செயல்திட்டங்களை செயல்படுத்தும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பார்வை கரூரில் பட்டு கேபிள் டி.வி யையும், அதன் வருமானத்தையும் முடக்கி இருக்கும் ஜெயம் மூர்த்தி மீது எதாவது நடவடிக்கை எடுப்பாரா ? என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்


Sunday 29 November 2015

தொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது? வெள்ளை அறிக்கை வேண்டும் பா.ம.க நிறுவனர் இராமதாசு அறிக்கை





தொலைநோக்கு திட்டம் - 2023 என்ன  ஆனது? வெள்ளை அறிக்கை வேண்டும் பா.ம.க நிறுவனர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்)&2023 வெளியிடப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தொலைநோக்குத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை. வெற்று அறிவிப்புகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
ஒளிமயமான தமிழகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கப் போவதாக கூறி தொலைநோக்குத் திட்டம்&2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வறுமையே இருக்காது; வளமையும், செழுமையும் பொங்கி வழியும் என்றெல்லாம் ஜெயலலிதா முழக்கமிட்டார். இந்த வெற்று அறிவிப்புகளை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ இவற்றையெல்லாம் ஜெயலலிதா மறந்து விட்டார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்த இரண்டாம் கட்ட அறிக்கையை 22.02.2014 அன்று வெளியிட்டதைத் தவிர இதுவரை வேறு எந்த நடவடிக்கையையும் ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.
அதனால், தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதில் சிறிய முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. உதாரணமாக...
* தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 5 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதேபோல், தனிநபர் வருமானம் நடப்பாண்டு இறுதிக்குள் ரூ.2.16 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியான ரூ. 1 லட்சத்தைக் கூட தாண்டவில்லை.
* எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், 2012 ஆம் ஆண்டில் 73 லட்சமாக இருந்த வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை இப்போது 86 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
* குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை நடந்தது.
* மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.6 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை. இதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் இந்தியாவில் 17-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
* ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக கூறப்பட்ட போதிலும் ஒரு தொழிற்சாலைக்கு கூட இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.
* கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் விடப்படும் அவலம் தான் ஏற்பட்டிருக்கிறது.
* மனித வளத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற அளவுக்குத் தான் மனித வளம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
* பாரம்பரிய கட்டிடக் கலையும், சூழலியலும் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
* இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி எந்தளவுக்கு காப்பாற்றப் பட்டது என்பதற்கு கடலூர், சென்னை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் சாட்சி.
* அரசு நிர்வாக அமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களை நியமித்து தகவல் ஆணையம் முடக்கப்பட்டிருக்கிறது. லோக் அயுக்தா, பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வர முடியாது என தமிழக அரசே திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
தொலைநோக்குத் திட்டம் -2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதாகக் கூறி பொது மக்களை முட்டாள்களாக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி என்று கூறும் தமிழக அரசு, தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரை உடனடியாக அகற்றவேண்டும். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவேண்டும். மழைவெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தாமதமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நலக்கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், முன்னாள் எம்.பி.அப்பாத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெற்கு&முரசுதமிழப்பன், மாநகர் செல்வக்குமார், வடக்கு கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுகவின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் வரவேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தை ஆண்டுவருபர்களும், ஏற்கனவே ஆட்சி புரிந்தவர்களும் இயற்கை வளங்ளை பாதுகாக்க தவறியதின் விளைவினாலே இதுமாதிரியான இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட மழைக்கால பேரழிவுக்கு பின்பு இந்த 2015ம் ஆண்டு தான் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவிற்கு மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய அரசின் நிவாரணக்குழு பார்வையிட வரவில்லை. இவர்களை பார்வையிட வருமாறு மாநில அரசும் வலியுறுத்தவில்லை. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தான் செய்யவேண்டிய கடமையை செய்யத் தவறியதை எடுத்துரைக்கவே மக்கள்நலக் கூட்டணி மூலமாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்கள் தங்களுக்கான நிவாரணங்களை அரசு தராத நிலையில் அதனைக்கேட்டு அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக அப்பாவி மக்கள் மீது இந்த அரசு காவல்துறையை ஏவிவிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்த அரசானது விமர்சனத்தை ஏற்க விரும்புவதில்லை, ஏதாவது விமர்சனம் செய்தால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும், அவதூறு வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு சகிப்புத்தன்மை இல்லாதது தான் காரணமாகும். இருந்தபோதும் தமிழக அரசு மழைக்கால நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையை வரை படத்தில் உள்ளபடி குறுகலாக இல்லாமல் அகலமாக கட்டவேண்டும், உப்பாற்று ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கொம்பாடி ஓடையில் வீணாகும் தண்ணீரை தடுத்து சேமித்திட தடுப்பணை கட்டுவதற்கு இந்த அரசை வலியுறுத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை, குறிபிட்டபடி அணை கட்டுவதற்கு இந்த அரசிற்கு காலஅவகாசம் இல்லை, ஏனெனில் வரும் தேர்தலோடு இந்த அரசிற்கு முடிவு கட்டப்பட்டு விடும். 

பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் மாநில அரசு நீர்நிலைகளை பராமரிக்க முன்வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் மணலை அள்ளும் நோக்கத்தில் தான் இந்த அரசு தூர் வாரும் பணிகளை மேற்கொண்டது குறித்து நாங்கள் பசுமைத்தீர்பாயத்தில் எடுத்துரைத்தோம். இதன்மூலமாக தீர்ப்பாயம் அணையின் முதல், 2வது ரீச்களில் மட்டும் அமலைச்செடிகள் மற்றும் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.ஒன்றரை லட்சமும், நெல்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரமும், மானாவாரி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.25ஆயிரமும், ஒரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரமும், இறந்த மாடுகளுக்கு ரூ.50ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10ஆயிரமும், கோழிகளுக்கு ரூ.500 வீதம் நிவாரணம் வழங்கிடவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்த அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில் சேதாரங்களை கணக்கிட்டு அதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்திடவேண்டும். தமிழக மழைவெள்ள சேதத்தினை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.10ஆயிரம் கோடி நிதி வழங்கிடவேண்டும் என்று நாங்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கேற்ப மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானபடி சென்று சேர்ந்திட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்கள், விவசாயசங்க பிரதிநிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்திட வேண்டும். அவர்களின் கண்காணிப்பிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் தவறுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கமுடியும்.

தூத்துக்குடி மாநகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்
தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவேண்டும், மறியல்
செய்ததற்காக பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அடையாளமாக திகழும் மக்கள் நலக்கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டத்தினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக தான் மாறிமாறி ஆட்சி அமைக்கும் என்ற பார்மூலா எங்களால் இனி உடைபட்டுவிடும். வரும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக நிர்வாகிகள் காசிராஜன், நிஜாம், ராசேந்திரன், எரிமலைவரதன், தனபால்ராஜ், வரதராஜன், சிவஞானவேல், வி.சி.நிர்வாகிகள்
தமிழ்இனியன், பூலான்பாண்டியன், செல்வகுமார், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராஜா, பேச்சிமுத்து, சங்கரன், பெருமாள், ரவீந்திரன், முத்து, பூமயில் உட்பட மக்கள் நலக்கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்துரை!



நெல்லை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரவியம் (எ)கணேஷ்குமார் அவர்களின் மகன் அருண்குணசிங், பிரியதர்ஷினி ஆகியோரின் திருமணத்தை சங்கரன்கோவில் கிருஷ்ணா மகாலில் தலைவர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். கழக நிர்வாகிகள் பொதுமக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் மீண்டும் மழை ! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: 24 மணி நேரத்தில் கன மழை


வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த நிலை, மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் நேற்று நிலைக்கொண்டிருந்த தாழ்வு நிலை, தற்போது வங்க கடலின் தென்மேற்கே இலங்கை கடற்கரையோரம் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலுக்கு தென்கிழக்கே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.  இது மேலும் வலுவடைந்து வங்கக் கடலின் தென்மேற்கே ஒரு புதிய தாழ்வழுத்த மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வரும் 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறினார்.
மேலும், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாள்களும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என வானிலை மைய செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரியில் குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியில் 4 செ.மீ, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை அருகேயுள்ள காட்டுப்பாக்கம் மற்றும் மகாபலிபுரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பெரியாறு, அமராவதி அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


பெரியாறு மற்றும் அமராவது அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாயக்கால்களின் கீழ் உள்ள ஓரு போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாயக்கால்களின் கீழ் உள்ள ஓரு போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக 30.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 30.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா

பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி


பாரிசில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவநிலை மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த மாநாட்டில் 147 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளன.

இந்த மாநாடு வரும் டிசம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் வெப்பமயமாதலை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு என்பது குறித்து பிரதமர் மோடி  உரையாற்ற உள்ளார்

புதுவைக்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்



முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:–
புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் புதுவைக்கு மழை சேதமாக ரூ.182.45 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தேன். அதனை ஏற்று தற்போது மத்திய குழுவினர் புதுவையில் மழை சேதங்களை பார்வையிட வந்துள்ளனர். அவர்கள் சேதங்களை பார்வையிட்டு சேத மதிப்புகளை மத்திய அரசிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அதன் அடிப்படையில் புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி அளிக்கும் என நம்புகிறேன். புதுவையில் மழையால் சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புதுவைக்கு மழை சேதத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் புதுவைக்கும் மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதி அளிக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு நிதி அளிக்கும் பட்சத்தில் புதுவையில் மழை நிவாரணம் உடனடியாக வழங்கப்படும் என தெரிகிறது.

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 1.77 கோடி உண்டியல் காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 15 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 816 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 15 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 9 அறைகளில் காத்திருந்து 4 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். 300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 1.77 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Saturday 28 November 2015

தமிழினத்தலைவர் மேதகு பிரபாகரனின் 61 வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி




தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (27.11.2015) மாலை 7.00 மணியளவில் கரூர் மாவட்ட ம.தி.மு. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க பொறுப்புக்குழு தலைவர் கபினி.சிதம்பரம் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஈழப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கமும், அஞ்சலியும் செலுத்தும் வண்ணம் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா, மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா.பொன்னுசாமி, இணையதள நிர்வாகி கரூர் சித்தார்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் செங்காந்தல் மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு



தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றசாட்டியுள்ளார்.  

மேலும் இது குறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு  புதுக்கோட்டையில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்தியாவின் முன்னணி பொருளாதார ஆய்வு இதழான இந்தியா ஸபென்ட் தனிநபர் கடனில் தமிழகம் முதலிடம் பெற்றது. இது ஜெயலலிதாவின் புதிய சாதனை. அவர் மது விற்பனையில் முதலிடம் என பல சாதனைகளை செய்தவர்கள். முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஓயமாட்டேன் என ஜெயலலிதா சபதம் நிறைவேற்றியுள்ளார். சபதம் நிறைவேற்றும் வகையில் பல வகையில் முதலிடத்தை தமிழகத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து வெளியிட்டுள்ள அந்த இதழ் 2014 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பது தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தனிநபர் சரசாரியாக ரூ 29 ஆயிரமாக உள்ளது.  இது 15-16 ம் ஆண்டில் வாங்கப்பட்ட கடனை சேர்த்தால் தமிழகத்தில் தனிநபர் கடன் சுமை 31132  ஆகும். பொதுத்துறை கடன் 2. 01 லட்சம் கோடி கணக்கில் கொண்டால் தனிநபர் கடன் தமிழக மக்கள் ஒவ்வொருக்கும் 60766 ஆயிரம் மாகும்.  இது ஒட்டுமொத்த தனிநபர் கடன் . கடந்த 5 ஆண்டுகளில் 108 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20110 -11 முதல் 14-15 வரை கடந்த 5 ஆண்டுகளில்  92 சதவீதம் உயர்ந்திருப்பதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது. வருவாயில் பெரும் பகுதியை வட்டியாக செலுத்தும் நிலை ஏற்படுத்தியது தான் 50 ஆண்டுகளான திராவிட கட்சிகளின் நிலை. தமிழகத்தில் பொருளாதார நிலை மோசமாக உள்ளதே தவிர ஆட்சியாளர்களின் நிலைமை செழிப்பாக உள்ளது. 

முதல்வர் தோழி சசிகலா இளவரசி குடும்பத்தினர் சென்னையில் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளார்கள். அதே போன்று தமிழகத்தில் பல திரையரங்குகளை வாங்குவதற்கு விலை பேசி உள்ளார். தமிழக அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் கர்நாடகம் கேரளம் ஆகிய மமாநிங்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். 18 மிகப்பெரிய ஊழல் பட்டியல் கவர்னரிடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஐகோர்ட்டில் வழ்ககு தொடர்ந்துள்ளோம். இது இப்படியிருக்க ஒரு அ மைச்சர் பேசறார் . நகர செயலாளரே 100 கோடி சொத்து வைத்துள்ள நிலையில் முதல்வர் ஆயிரம் கோடி சொத்து குவித்திருப்பது பெரியவிஷயமாக என்கிறார். ஊழலுக்கு ஊடகங்கள் துணை போக கூடாது. ஆனால் துணை போகிறார்கள். தமிழகத்தில் வெள்ள நீரை வெளியேற்று வதற்காக காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. தற்போது அதனை சாக்கடையாக மாற்றி வருகிறது. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும். 

கடந்த பெங்களூரில் சட்டசமசோதாவை மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பெங்களூரில் தொழிலகங்கள் வீடுகளில் கழிவுநீர் காவிரியில் வெளியேற்றப்படுவதாக தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தமிழகம் சார்பிலல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது  கடந்த சிலவாரங்களாக காவிரியில் கழிவுநீரை திறந்து உள்ளனர். இதனால் மேட்டூர் அணை மீன்கள் செத்து மிதந்தன. துõர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால் சென்னை கூவம் போல் காவிரி மாறும் அபாயம் ஏற்படும். ஆற்றுப்படுகை பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் காவிரி 25 லட்சம் ஏக்கர் பாசன ஆதராம் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. 

இத்தகையை பெருமை கொண்ட காவிரியிலர் கழிவுநீர் கலப்பது பாவசெயலாகவும். கங்கை ஆற்றில் சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு 2100 கோடி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் காவிரியை தூய்மைப்படுத்தவும் கர்நாடகம் தமிழகம் இருமாநிலங்களிலும் காவிரி யில் கழீவுநீர் கலப்பதை தனிசிறப்பு திட்டதிதை உருவாக்க வேண்டும். கங்கை தூய்மைக்கு தனி ஆணையம் ஏற்படுத்தியிருப்பது போல் காவிரிக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இந்த பகுதியில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் கங்கையம்மாள், சொக்கலிங்கம் ஆகியோர் தாங்கள் பகுதி பிரச்னைக்காக அமைச்சரை சந்தித்து உள்ளனர்.   

முத்தரையர் சேர்ந்தவர்களை அவர்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெண் பாராமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனை கண்டித்து கடந்த 5ம் தேதி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முத்தரையர் சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போராட்டத்திற்கான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவமரியாதைக்குள்ளான சொக்கலிங்கம் கங்கையம்மாள் கட்சியில் இருந்து நீக்கத்திற்குள்ளானார். இது சமூக அமைதிக்கு வழிசெய்யாது. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தி சென்னையில் உலா வந்து கொண்டிருக்கிறது. மதுரை க்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.தமிழகஅரசின் அலட்சியம் காரணமாக கடந்த போட்டிக்ள நடத்தப்பட வில்லை. பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமனத்தில் சட்டச திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய குழு வெள்ள பகுதிகளை முறையாக பார்வையிட வில்லை. ஆனால் அவர்களை சந்திப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. 940 கோடி போதுமா 20 ஆயிரம் கோடி தேவை என பாமக வலியுறுத்தி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான உண்மையான நிலவரத்தை மத்திய குழுவுக்கு காட்டவில்லை. அவர்களிடம் காட்டி அதிக நிதியை வாங்க வேண்டும். 

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக குரல் கொடுப்பார். ஜெயலலிதா கடிதம் பிரதமருக்கு போவதுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர்கள் கூறியதால் நிதி ஒதுக்கீடு செய்யதார்களே தவிர வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர்கள் செயல்பாடுகள் சைபர். மக்கள் நல கூட்டணியின் செயல்பாடு போக போக தெரியும். 

பாமக வைபொறுத்தவரை எங்கள் தலைமை ஏற்று  திமுக அதிமுகவை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தேமுதிக வந்தால் சேர்த்துக்கொள்ளலாம். மெகா கூட்டணி அமைக்கிறேன் கூறினேர்களே ஜனவரியில் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் கட்சியில் அங்கம் வகித்துள்ளோம். தொகுதி உடன்பாடு தான் தமிழகத்தில் வைத்துள்ளோம். தேர்தல் முடிந்தவுடன் அது முடிந்து விடும். குறைந்த பட்ச செயல்திட்டத்தின் கீழ் மத்தியில் கூட்டணி கட்சிகள் செயல்பட்டன. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எழுத்தாளர்கள் கலைஞர்கள் விஞ்ஞானிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர். சிந்தனையாளர் ஒருவர் கர்நாடகவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போன்ற நிலைமை இந்தியாவில் எப்போதும் இருந்ததில்லை. இன்டாலரன்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.மக்களை ஒருங்கிணைக்காது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு குழுக்கள் சமயங்கள் மதங்கள் சமூக நல்லிணக்கம் சமூக ஒருமைப்பாடு பேணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பேட்டியின் போது பா.ம.க தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

தனிநபர் கடனில் தமிழ்நாட்டை முதலிடம் பிடிக்க வைத்தது தான் அதிமுக சாதனையா? பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி ?





பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழ்நாட்டில் பொருளாதார நிலை மற்றும் கடன்சுமை குறித்து இந்தியா ஸ்பெண்ட் (India Spend) என்ற பொருளாதார இதழ் வெளியிட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. தனிநபர் கடன் சுமையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக அந்த இதழ் தெரிவித்திருக்கிறது.
2010&11 முதல் 2014&15 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களின் கடன் அளவு, பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய அளவில் அதிக கடன் வைத்திருக்கும் மாநிலம் மராட்டியம் ஆகும். அம்மாநிலம் ரூ.3.38 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் பரப்பளவிலும், மக்கள் தொகை அளவிலும் மாறுபடுவதால் தனிநபர் கடனை அடிப்படையாகக் கொண்டு தான் மாநிலங்களின் கடன்சுமை அளவிடப்படுகிறது.
அதன்படி பார்த்தால் மராட்டியம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுமே சராசரியாக ரூ.29,000 கோடி தனிநபர் கடன்சுமையை வைத்திருக்கின்றன. அதேபோல், மற்ற மாநிலங்களின் கடன்சுமை சராசரியாக 66% அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் கடன்சுமை மட்டும் ஆய்வுக்கான 5 ஆண்டுகளில் 92% அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தின் வட்டிசுமையும் அதன் செலவில் 10.50% என்ற அளவிலிருந்து 11.60% ஆக அதிகரித்துள்ளது.
இவை அனைத்துமே 2014&15 வரையிலான கணக்குகள் ஆகும். 2015&16 வரையிலான ஐந்தாண்டு கணக்கைப் பார்த்தால் தமிழகத்தின் தனிநபர் கடன்சுமை ரூ.31,192 ஆக அதிகரிக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் கணக்கில் கொண்டால் தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.60,766 ஆக அதிகரிக்கும். அதேபோல், தமிழகத்தின் வட்டி சுமையும் 12.52% ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் 108% ஆக அதிகரித்துள்ளது. அதிமுக அரசு பத்வியேற்கும் போது ஒரு லட்சத்து 1710 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமை இப்போது ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.31,192 கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் சேர்த்தால் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதான கடன்சுமை ரூ.60,766 ஆக உயர்ந்திருக்கும்.
2011& ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக,பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து ரூ.1,01,710 கோடி கடன் வாங்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளில் மட்டும் அதைவிட அதிகமாக ரூ.1,09,773 கோடி கடன் வாங்கி தமிழகத்தை மீளாக் கடன் துயரில் ஆழ்த்தியது தான் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும்.
ஒரு மாநில அரசு கடன் வாங்காமல் செயல்பட முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால், கடனாக வாங்கப்படும் தொகை மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் கடனாக வாங்கப்பட்ட ரூ.1,09,773 கோடி மூலதன செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் கண்ணுக்கு தெரியும்படியாக எந்த பெருந்திட்டமும் செயல்படுத்தப் பட்டதாக தெரியவில்லை.
அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஊழல்கள், அவற்றை மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்க அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்கள் ஆகியவை தான் தமிழகத்தின் கடன் சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம் ஆகும். இந்தக் கடனுக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.17,856.65 கோடியை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது பள்ளிக்கல்வித்துறை தவிர மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மிக அதிகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, வட்டி செலுத்துவதற்காகவும், இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூ.30,446.68 கோடியை கடனாக வாங்கியிருக்கிறது. இவ்வாறு வட்டியைக் கட்ட கடன் வாங்கும் அவலநிலையில் தான் தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது.
இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கடனாளியாகவே பிறந்து கடனாளியாகவே உயிரிழக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் தமிழகத்தை இவ்வளவு கடன்சுமை கொண்ட மாநிலமாக மாற்றிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை வரும் தேர்தலில் செய்து முடிக்க தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசன நேரம் மேலும் 1 மணி நேரம் நீட்டிப்பு





சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக சுவாமி தரிசனம் செய்யும் நேரம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ம் தேதி நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் புதிய மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்று வருகிறது.
இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலையில் 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனிமேல் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கேரள போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் தரிசன முன் பதிவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் முன் பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆன்லைன் தரிசன முன் பதிவு முற்றிலும் இலவசமாகும். இவ்வாறு முன் பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்கள் வழக்கமான பக்தர்களின் வரிசையில் காத்து நிற்காமல், வலிய நடை பந்தலில் உள்ள சிறப்பு வரிசை மூலமாக விரைவில் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்கள், பம்பையில் உள்ள சிறப்பு சேவை மையத்தில் முன் பதிவு செய்து, பதிவிறக்கம் மூலம் பெறப்பட்ட சான்று நகலை காட்டி சிறப்பு கூப்பன் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் மழைக்கு வாய்ப்பு - வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரம் மழை வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகள் சிலவற்றில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா இன்று கூறும்போது, "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்துக்கு, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார் ஸ்டெல்லா.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கனமழை நீடித்த நிலையில், சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. இதனால், இயல்பு வாழ்க்கை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

சரக்கு சேவை வரிவிதிப்பு மசோதா: காங்கிரசின் 3 நிபந்தனைகளில் இரண்டை மோடி ஏற்றார்


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2016) ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் இந்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதால் அந்த மசோதா இன்னமும் பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் உள்ளது. பாராளுமன்ற மேல் சபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற இயலாது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, சரக்கு சேவை வரி நிறைவேற 3 முக்கிய நிபந்தனைகளை விதித்தார். இதையடுத்து காங்கிரசை சமரசம் செய்ய அருண்ஜெட்லியும், வெங்கய்யா நாயுடுவும் முயன்றனர். ஆனால் காங்கிரஸ் சமரசம் ஆகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டனர். அப்போது சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறை வேற்ற உதவி செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
உடனே மன்மோகன்சிங், ‘‘இது பற்றி சோனியாவிடம் பேசி சமரசம் செய்கிறேன்’’ என்று மோடியிடம் உறுதியளித்தார். அதன் பிறகே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்தன. திட்டமிட்டப்படி நேற்று மாலை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மோடி வீட்டுக்கு சென்று சோனியா சென்றார்.
மோடியும், சோனியாவும் சுமார் ஒரு மணி நேரம் பல முக்கிய விவரங்கள் குறித்து பேசினார்கள். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உடனிருந்தனர். பேச்சு வார்த்தையின் போது சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா தொடர்பாக 3 நிபந்தனைகளை சோனியா தெரிவித்தார்.
அந்த 3 நிபந்தனைகள் வருமாறு:–
1.சரக்கு சேவை வரி விதிப்பு 18 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
2. உற்பத்தி மாநிலங்களுக்கு 1 சதவீத வரி விதிப்பை விலக்க வேண்டும்.
3. சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா கவுன்சில் அமைப்பிலும், மாநில இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
சோனியா பின் இந்த 3 முக்கிய நிபந்தனைகளில் முதல் 2 நிபந்தனைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா கவுன்சில் அமைப்பில் மாற்றங்கள் செய்ய பிரதமர் மோடி தயக்கம் காட்டுகிறார். எனவே அந்த ஒரு விஷயத்தில் மட்டும் இன்னமும் பா.ஜ.க..வுக்கும், காங்கிரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாக வில்லை.
இதன் காரணமாக சரக்கு சேவை வரி விதிப்பு மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் காங்கிரஸ் இறுதி முடிவை தெளிவாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசி விட்டு, பதிலை தெரிவிப்பதாக சோனியா கூறியுள்ளார். பெரும்பாலும் அவர் சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற ஒத்துழைப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய சந்திப்பின் போது மற்ற மசோதாக்களை நிறைவேற்றுவது பற்றியும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை இடையூறு இல்லாமல் சுமூகமாக நடத்துவது பற்றியும் பேசப்பட்டது. அப்போது மோடி வேண்டுகோளை சோனியா ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற கூட்டம் அமைதியாக நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சரக்கு சேவை வரி விதிப்பு தொடர்பாக சோனியாவை மீண்டும் அழைத்து பேச மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அருண் ஜெட்லி உறுதி செய்தார்.
அருண் ஜெட்லி கூறு கையில், பாராளுமன்றம் சுமூகமாக நடக்கவும், மசோதாக்கள் நிறைவேற்றவும் யாரிடம் வேண்டுமானாலும் பேச்சு நடத்த மோடி தயாராக உள்ளார்’’ என்றார். பாராளுமன்ற விவாதங்களின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க வெங்கய்யா நாயுடுவும், மல்லிகார்ஜுன கார்கேயும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மூலம் பாராளுமன்றத்தில் நிலவி வரும் முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Friday 27 November 2015

இரண்டு நாட்களில் மட்டும் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்


தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மட்டும் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்த ஆண்டு தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெருமழை பெய்ததையொட்டி மழைக்கால தொற்றுநோய் அதிகம் வர வாய்ப்பு உள்ளதை அறிந்த முதல்வர், தமிழ்நாடு முழுவதும் 1112 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனைகளும் சிகிச்சையும், நிலவேம்பு குடிநீரும் வழங்க உத்தரவிட்டார். மழைக்கால மருத்துவ முகாம்களிலும் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மழைக்கால தொற்றுநோய் பரவாமலிருக்க முதல்வரின் உத்தரவுப்படி, மேலும் கூடுதலாக அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுகள் மூலம் 1061 இடங்களில் தமிழ்நாடு முழுவதும் 25.11.2015 முதல் 29.11.2015 வரை (5 நாட்கள்) நிலவேம்பு குடிநீர் வழங்க முகாம்கள் நடைபெற்று வருகிறது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் வழங்கி முகாமினை 25.11.2015 அன்று தொடங்கிவைத்தார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் (25.11.2015 முதல் 26.11.2015) வரை சுமார் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கியுள்ளனர். 

25.11.2015 அன்று 1,56,878 ஆண்களும், 1,48,221 பெண்களும், 49,494 குழந்தைகளும் ஆகமொத்தம் 3,54,593 பேரும், 26.11.2015 அன்று 11,89,387 ஆண்களும், 1,80,508 பெண்களும், 7,338 குழந்தைகளும் ஆகமொத்தம் 4,43,278 பேரும், இரண்டு நாட்களில் 7,97,771 பேர் நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைந்துள்ளனர். இந்த முகாம் 29.11.2015 (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. 

பொதுமக்கள் தாங்கள் நிலவேம்பு குடிநீர் பருகியதோடு மட்டுமல்லாமல் பாத்திரங்களை எடுத்துவந்து தங்கள் குடுபத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்ட, வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று நிலவேம்பு குடிநீரை பருகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை நிலவேம்பு குடிநீர் பருகி பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு மடங்காக நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் வரை வந்து நிலவேம்பு குடிநீர் பருகி செல்கின்றனர். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் மறுபடியும் வந்தாச்சு!

கரூர் பூமி வாயிலாக ஆசிரியர் தெரிவித்துக் கொள்வது.,

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.

நவம்பர் 23-ம் தேதி மாலை முதல் முடக்கப்பட்டிருந்த ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம்(https://www.facebook.com/anandavikatan/) மீண்டும் வந்தாச்சு. எந்த முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்ட விகடன் பக்கத் தடை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது முறைப்படியான பதில் எதுவும் இல்லை. ஆனால், விகடனின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் குறித்து வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வந்தீர்கள்.


இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) மதியம் முதல் விகடனின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. 

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும்.

ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்!
நன்றி..

ஜெயலலிதாவின் சர்வதிகார நடவடிக்கை அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! வைகோ கண்டனம்




எதேச்சதிகாரத்தின் மூலம் ஜனநாயக உரிமைகளை அழிக்க முயன்ற அனைத்து கொடுங்கோலர்களும் இருந்த இடம் தெரியாமல் அதிகாரத்தையும் இழந்து நிர்மூலமாகிப் போனார்கள் என்ற வரலாற்றின் படிப்பினையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உணரவே இல்லை.
1975 இல் இந்திரா காந்தி அம்மையார் ஏவிய நெருக்கடி நிலை சர்வதிகாரத்தால் அனைத்து மக்களின் கோபத்துக்கும் ஆளாகி, 1977 இல் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்ற படிப்பினையை முதலமைச்சர் ஜெயலலிதா யோசிக்கவே இல்லை என்பதால்தான், ஆனந்த விகடன் பத்திரிகையை தனது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டலாம், ஏன் முடக்கவும் முயலலாம் என்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த நாலரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, அமைச்சர்களின் தவறான நடவடிக்கைகளை ஆனந்த விகடன் வார ஏடு ‘மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் கடந்த இருபத்து ஒன்பது வாரங்களாக விமர்சனக் கட்டுரைகளாக தமிழக நலனைக் கருதி வெளியிட்டது.
நவம்பர் 25 ஆம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் “என்ன செய்தார் ஜெயலலிதா?” என்று முகப்பு அட்டையில் தலைப்பிட்டு முப்பதாவது கட்டுரையாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற அலங்கோலங்களை ஆணித்தரமான ஆதாரங்களோடு ஆனந்த விகடன் கட்டுரை படம்பிடித்துக் காட்டியது.
“என்னையே விமர்சிப்பதா?” என்ற ஆத்திரத்தில் ஆனந்த விகடன் பத்திரிகை ஆசிரியர் மீதும், வெளியீட்டாளர் மீதும், பதிப்பாசிரியர் மீதும் முதலமைச்சர் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கை ஆனந்த விகடன் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும்போது, ஆனந்த விகடன் கட்டுரைகளில் எழுத்தப்பட்டவை அனைத்தும் அப்பட்டமான உண்மைகள் என தமிழக மக்கள் அறிந்துகொள்ளத்தான் போகிறார்கள்.
ஆனந்த விகடன் ஏடு 1930 களில் எÞ.எÞ.வாசன் அவர்களால் தொடங்கப்பட்டு, கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பணியாற்றிய உன்னதமான ஏடாகும். விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு தமிழ்நாட்டின் அரசியல், சமுதாயம், இலக்கியம், கலைகள் அனைத்துக்கும் அரிய சேவை செய்து தமிழக மக்களால் போற்றப்படுகிற ஏடாகும்.
விகடனின் முகநூல் (Facebook) பக்கமும் கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. தற்போது விகடன் நிர்வாகம் புதிய முகநூல் பக்கத்தைத் தொடங்கிவிட்டது. இதனால் விகடன் முகநூல் வாசகர்கள் எண்ணிக்கை முன்னைவிட அதிகமாகும்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆனந்த விகடன் இதழில் வந்த கட்டுரை துண்டுப் பிரசுரமாக தினமலர் உள்ளிட்ட நாளேடுகளின் நடுப்பக்கத்தில் வைத்து அனுப்பப்படக்கூடும் என்று எண்ணி, தமிழ்நாட்டின் பல இடங்களில் 25 ஆம் nதி அதிகாலையிலேயே தினமலர் ஏடுகளை எடுத்துச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஆளும் கட்சியினரும், காவல்துறையினரும் சோதனை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தினமலர் ஏஜெண்டுகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆளும் கட்சியினுடைய செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் காவல்துறையினரின் பக்க பலத்தோடு நாளிதழ் பார்சல்களைப் பிரித்து அத்துமீறி நடந்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஆளும் கட்சியினரும், காவல்துறையினரும் விற்பனையாளர்களை மிரட்டி தினமலர் நாளிதழ்களை மொத்தமாக வாங்கிச் சென்றுள்ளனர். நெருக்கடி நிலை காலத்தில் பத்திரிகைகளின் குரல் வளையை நெறித்தது போன்ற அக்கிரமமான நடவடிக்கைதான் இந்த அராஜகச் செயலாகும்.
பெருமழை பெருவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயரத்தைப் போக்கும் விதத்தில் உரிய கடமை ஆற்றாத தமிழக அரசு, அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் மீது அடக்குமுறையை ஏவி இருப்பது, நடப்பது ஒரு பாசிச ஆட்சி என்பதை நிருபிக்கிறது.
இதற்கு முன்னரும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க அடக்குமுறையை ஏவி, விமர்சிப்போரை சிறையில் அடைத்து, அதன் விளைவாக ஆட்சியையே பறிகொடுத்த பின்னரும் அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் திருந்தவே மாட்டார் என்பதற்கு சாட்சியம்தான் தற்போதைய முதல்வரின் நடவடிக்கைகள்.
ஜனநாயகத்தை நசுக்க முனைந்த அனைவரும் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். அத்தகைய விபரீதத்தை முதலமைச்சர் விலைகொடுத்து வாங்குகிறார். தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், பத்திரிகைகளின் மீதான மிரட்டலை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.