Thursday 10 December 2015

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் ஆபத்து: வைகோ பேட்டி


சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இன்று ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, துணிமணிகளை மக்கள் நல கூட்டணி சார்பில் வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்களை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் வழங்கினார்கள். ஏறத்தாழ 2 ஆயிரம் பேருக்கு நிவாரணம் பொருள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பூங்காநகர் ராமதாஸ், ஜீவன், அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இன்னும் 2, 3 நாட்களில் பெரும் தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட உள்ளது. எலிக்கடி நோய் கூட ஏற்படும். உடனடியாக தமிழக அரசு குப்பைகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் துப்புரவு தொழிலாளர்களை வரவழைத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரேற்று எந்திரம் மூலம் மழைநீரை அகற்ற வேண்டும்.
இந்த மழை வெள்ள பாதிப்புக்கு அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் கோளாறு தான் காரணம். செம்பரம்பாக்கம் ஏரி நீரை முழுமையாக தேக்காமல் படிப்படியாக திறந்து விட்டிருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்காது.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை போதாது. 50 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.
வெள்ள நிவாரண தொகையை பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கண்காணிப்பு குழுக்கள் மூலமாக வழங்க வேண்டும்.
வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு அரசு ஒதுக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் தொகை போதாது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
பயிர் சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 என்றும் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் என்றும் அறிவித்து உள்ளார்கள். அதனை ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment