Saturday 12 December 2015

முல்லைப் பெரியாறில் புதிய அணை! கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை




முல்லைப் பெரியாறில் புதிய அணை! கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
நேற்று (டிசம்பர் 11) டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராவிடில், புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
முல்லைப் பெரியாறில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால், அணை உடைந்துவிடும் என்று இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுக்கள், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பைப் பலமுறை ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், முல்லைப்பெரியாறு அணை வலுவாக இருக்கின்றது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி, இறுதித் தீர்ப்பு வழங்கிய பின்னரும், தமிழக அரசை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டநீதிக்குப் புறம்பானதும் ஆகும்.
பத்து பேர் அடங்கிய நிபுணர் குழு பரிந்துரையை ஏற்றுத்தான், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று 27.2.2006 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத கேரள அரசு மறுபரிசீலனை செய்யுமாறு தாக்கல் செய்த மனு ஜூலை 2006 இல் உச்ச நீதிமன்ற அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
மார்ச் 2006 இல் கேரள அரசு நிறைவேற்றிய கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தில், கேரளாவில் உள்ள அணைகளின் முழு கட்டுப்பாடு மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் அடாவடியாகக் கூறப்பட்டது.
இச்சட்டத்தை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்திட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிப்ரவரி 18, 2010 இல் உத்தரவிட்டது.
அதன்படி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்துபேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதித்தன்மை குறித்து பல கட்டங்களாக ஆய்வு நடத்தி, மார்ச் 25, 2014 இல் அறிக்கை தாக்கல் செய்தது.
கட்டுமான ரீதியிலும், தண்ணீரைத் தேக்கும் வகையிலும் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; எனவே அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்; சில பராமரிப்பு பழுதுகளைப் பார்த்த பிறகு நீர் மட்டத்தை மேலும் உயர்த்தலாம் என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, பி.சுதர்சன் ரெட்டி, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பற்றிய வழக்குகளை விசாரித்து மே 7, 2014 இல் இறுதித் தீர்ப்பு வழங்கியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயரம் உயர்த்தலாம் என்றும், கேரள அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், ரத்து செய்வதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து நீதிபதி ஆனந்த் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, அணையைப் பராமரிக்க மூன்றுபேர் கொண்ட குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மட்டும்தான் கேரள அரசின் கடமை என்பதை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment