Friday, 1 January 2016

ஜனவரி 26-ல் மதுரையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு: கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவிப்பு


ஜனவரி 26-ல் மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாநாடு நடைபெறும் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிக் கிடக்கிறது. திமுக, அதிமுகவுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு அதிகரித்து வருகிறது. மாற்று அணி அரசு அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதன் அடிப்படையில்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
எந்த கூட்டணியும் செய்யாத அளவுக்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டு மக்களை சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி மட்டும்தான். மக்கள் நலக் கூட்டணிக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. ஊழல் இல்லாத கூட்டணி அரசே மக்கள் நலக் கூட்டணியின் ஒரே நோக்கம். அந்த இலக்கை நோக்கியே எங்கள் பயணம் அமையும்.
மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுரையில் ஜனவரி 26-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியலின் மாற்றத்துக்கு நுழைவாயிலாக இருக்கும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி உட்பட மக்கள் நலக் கூட்டணியின் மாநில தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம். தமிழகத்தில் 65 சதவீத வாக்காளர்கள் கட்சி சார்பற்றவர்கள். அவர்களின் ஆதரவோடு நாங்கள் வெற்றி பெறுவோம்.
மதிமுகவை சிதைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. எங்கள் கட்சியினரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்கள் அழைத்துச் செல்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிந்தே இவை நடக்கின்றன. எங்கள் கட்சியிலிருந்து எத்தனை பேரை திமுக இழுத்துச் சென்றாலும், மதிமுகவை அழிக்க முடியாது" என்றார் வைகோ.
ஆம் ஆத்மியைப் போல் வெல்வோம்:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய வைகோ ஆம் ஆத்மியைப் போலவே தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

No comments:

Post a Comment