Saturday, 16 January 2016

என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கி தேர்தல் பணியாற்றுவீர்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்



"இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள்" என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசியல் மற்றும் கலை உலகின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் பெரும்பாலான ஆண்டுகள் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் ஆண்டுகளாகவே கடந்திருக்கின்றன. அதற்கு காரணம் அரசியலிலும், கலைத் துறையிலும், தனது கடின உழைப்பாலும், தன்னலம் மறந்த பொதுநலம் நோக்கிய செயல் திட்டங்களாலும் அவர் செய்து முடித்த சாதனைகளேயாகும்.
எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த கொள்கைகள் தமிழகத்தில் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாகத் திகழும். கலைத் துறையிலும், அரசியலிலும், மக்களுக்கு பணியாற்றும் பொதுத் தொண்டுகளிலும் என்னை ஈடுபடுத்தியது எம்.ஜி.ஆர்.தான். அதற்குத் தேவையான பயிற்சிகளையும், பாடங்களையும் எனக்கு அளித்தார். எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எம்.ஜி.ஆரை நான் மனதாரப் போற்றி வருகிறேன். அவரைப் பின்பற்றி தமிழக மக்களுக்காகஎன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன்.
இரட்டை இலக்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நாம் கொண்டாடும் இறுதி ஆண்டு இந்த ஆண்டு. இனி வரும் பன்னெடுங் காலங்களுக்கு அவருடைய பிறந்த நாள் மூன்று இலக்க ஆண்டுகளாகக் கொண்டாடப்படும். அடுத்து வரும் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டாக அமையப் போகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும், அவர் கண்ட மக்கள் பேரியக்கமான 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்னுடைய தலைமையில் ஆட்சி நடத்தும் இயக்கமாகத் திகழப் போகிறது என்பது நம் இதயமெல்லாம் இனிக்கும் செய்தி.
இந்த ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இதற்கு முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருந்த வெற்றிகள் எல்லாவற்றையும் விட சிறப்பான வெற்றியைப் பெற்றிட வேண்டும். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு வெற்றியை வேறு எந்த அரசியல் இயக்கமும் பெற்றதில்லை என்று பார் போற்றும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது எம்.ஜி.ஆர். புகழுக்கு பொன்மகுடம் சேர்க்கும்.
இப்பொழுது என்னுடைய தலைமையில் நடைபெற்று வரும் அரசு, தமிழக மக்களுக்கு ஆற்றி இருக்கும் தொண்டு அத்தகைய வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு, `வீடு உயர்ந்தால் நாடு உயரும், நாடு உயர்ந்தால் உலகம் உயரும்' என்ற தீர்க்கமான பாதையில் என் அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை இட்டுச் செல்கிறது.
இருள் மண்டிய தீய சக்தியின் ஆட்சிக் காலத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தின் அடிப்படைகளையே வேரறுக்கும் வகையில் "என் குடும்பம் மட்டும் எல்லாமும் பெற வேண்டும்; என் மக்களே எந்நாளும் ஆள வேண்டும்'' என்ற கயமையும், கீழ்மைத்தனமும் கொண்ட சிந்தனையுடைய தீய சக்தியும், அதன் நச்சு விழுதுகளும் இயங்குவதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது.
எம்.ஜி.ஆரின் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றிக் கனியை, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலிலும் பரிசளிக்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். அப்பரிசினைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவருடைய தேர்தல் பணியும் அமைய வேண்டிய நேரமிது என்பதை மறவாதீர்கள்.
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள்.
பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவு பெற்ற என் அரசுக்கு உங்கள் களப்பணி சிறப்பினை சேர்க்கட்டும். அது, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை நோக்கிய நமது பயணத்தை இந்திய தேசத்தின் திருவிழாவாக மாற்ற வேண்டும் என்பது எனது ஆவல்.
எனவே, என்னுடைய அன்புக் கட்டளையை ஏற்று, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து, தேர்தல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் இப்பொழுதே தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment