Sunday 24 January 2016

டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்


டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்; டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அடைமழையால் வெள்ள பாதிப்பு, கடும் வெயிலால் வறட்சி பாதிப்பு, இதுதான் தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை. இப்பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்தான். ஏற்கனவே மேட்டூர் அணை காலம் கடந்து திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியை கூட செய்ய இயலவில்லை என விவசாயிகள் நொந்து நூலாகிப் போயினர். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போனதால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உரிய முறையில் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்பட்டிருந்தால் டெல்டா விவசாயிகளின் பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கும். இயற்கை இடற்பாடுகளால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கிடைக்கும் மகசூலை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக, அதாவது பாதிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தமிழக அரசு நெல் கொள்முதல் விலையாக மோட்டா ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,460 ரூபாய் என்றும், சன்னரக நெல்லுக்கு 1,520 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளது கட்டுபடியாகவில்லை என்றும், அதனால் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அளிக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே அதிமுக அரசு நெல்கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி வழங்கவேண்டுமென தேமுதிக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு, அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லையென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கமான எண்ணிக்கையில் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லையென்றும், மிகக்குறைந்த எண்ணிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கிடையே, அறுவடை செய்த நெல்லை எடுத்துக்கொண்டு கிராமம் விட்டு கிராமமாக அலைந்து, திரிந்து, அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய சென்றால், அங்கே நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி, நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும், அரசு 20 சதவிகித ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமென உத்தரவிட்டு இருந்தாலும், அது நடைமுறை படுத்தப்படவில்லையென விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நெல் மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வீட்டிலோ, வயல்வெளியிலோ வைத்து பாதுகாக்க முடியாது என்ற சூழ்நிலையில், “பட்ட காலிலேயே படும், கெட்டகுடியே கெடும்” என்பதைப்போல, அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல், நெல் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் மிககுறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளின் பெயரில் பாராட்டும், புகழுரையும் சூட்டிக்கொண்டு, பூரித்து, புளகாங்கிதம் அடைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல், “உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியும்” என்பதை மனதில்கொண்டு, விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment