Wednesday, 20 January 2016

அரசின் தோல்விகளை ஆளுநர் உரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: வைகோ


அனைத்துத் துறைகளிலும் ஜெயலலிதா அரசின் தோல்விகளை ஆளுநர் உரை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் வழக்கம் போல முதல்வருக்குப் புகழாரம் சூட்டி உள்ளதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதிமுக அரசின் நான்கரை ஆண்டு காலச் செயல்பாடுகளை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் கடந்த கூட்டத் தொடர் வரையிலும் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110 இன் கீழ் 180 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டேதான் இருந்தார். எதுவுமே நிறைவேற்றப்படவில்லை; எல்லாமே வெற்று ஆரவார அறிவிப்புகளாகவே இருக்கின்றன.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்று பெரிய விளம்பரம் செய்தார்கள். அதற்குப் பிறகு அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லை.. அறிவிப்புகளும் இல்லை. காரணம், அதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த அரசிடம் இல்லை. ஆனால் அந்த அறிவிப்பையே ஒரு சாதனையாக, அதுவும் முதல்வரின் சாதனை என்று ஆளுநர் குறிப்பிடுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கின்றது.
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டபோது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்காமல், செயலற்றுக் கிடந்தனர். அரசு நிர்வாகம் முற்றாக முடங்கிப் போனது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஆளுநர் உரையில் அதற்காகவும் ஜெயலலிதா அரசுக்கு பாராட்டுரைப் வழங்கி உள்ளது நகைமுரணாக இருக்கிறது.
வெள்ள நிவாரண உதவித் தொகையை உயர்த்த வேண்டும்; கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூபாய் 4000 ஆக நிர்ணயிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் எதுவுமே ஆளுநர் உரையில் கண்டுகொள்ளப்படவில்லை.
உயர் கல்வித் துறை முற்றிலும் வணிக மயம் ஆனதைத் தடுக்காமலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமலும் அலட்சியமாக இருந்துவிட்டு, கல்விச் சேவையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்று ஆளுநர் குறிப்பிடுவதை எப்படி ஏற்க முடியும்?
நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பேணப்படுகிறது என்று ஆளுநர் உரை கூறுகிறது.தமிழ்நாட்டைச் சீரழித்து வரும் மதுக்கடைகளை மூட வேண்டும்; முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடக்கின்றன. மதுவின் கோரப்பிடியில் சிக்கித் தமிழகம் பாழாவது பற்றி ஜெயலலிதா அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதைத்தான் ஆளுநர் உரை எடுத்துக் காட்டுகிறது.
சமச்சீர் நிதியம் பற்றிய அறிவிப்பில் எவ்விதப் பயனும் ஏற்படப்போவது இல்லை. சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் பற்றி வெளிப்படையாக எந்தத் தகவலும் இல்லை.
தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பது அன்றாட நிகழ்வாக இருக்கின்ற நிலையில், தமிழகம் மின் மிகை மாநிலம் ஆகிவிட்டதாக ஆளுநர் கூறுவது எப்படி என்று தெரியவில்லை. நோக்கியா, பாக்ஸகான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும், சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளும் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தது குறித்து ஆளுநர் உரையில் எந்தக் குறிப்பும் இல்லை.
ஒட்டுமொத்தமாக, அனைத்துத் துறைகளிலும் ஜெயலலிதா அரசின் தோல்விகளை ஆளுநர் உரை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது'' என்று வைகோ தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment