முப்படைகளின் அணிவகுப்பு, மாணவிகளின் வண்ணமயமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 67-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆளுநர் கே.ரோசய்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் 67-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடந்தன. இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டு, தற்காலிக கொடிக்கம்பமும் அமைத்திருந்தனர்.
ஆளுநர் ரோசய்யா, முதலில் போர் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழா நடக்கும் இடத்துக்கு அவரை முப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வந்தனர். ஆளுநரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்.
அதன்பின், முப்படை அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதையடுத்து, ஆளுநர் ரோசய்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, மது ஒழிப்புக்கான உத்தமர் காந்தி விருது, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவில் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி கடற்கரை பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழா முடியும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment