Sunday 3 January 2016

விவசாய, நகைக் கடன்களை ரத்து செய்யக்கோரி 74 விவசாய சங்கங்கள் ஜன.10-ல் திருச்சியில் உண்ணாவிரதம்: ஒருங்கிணைப்புக் குழு முடிவு



வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10-ம் தேதி திருச்சியில் 74 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஈரோடு தெய்வசிகாமணி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்கள், நகைக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு 50 சதவீதம் லாபத்துடன் கூடிய விலை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி பாதிக்காத வகையில் அரசின் ஏற்றுமதி- இறக்குமதி கொள்கைகளை அமைக்க வேண்டும்.
காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். நீர்நிலைகளுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தூர்வார வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். வன விலங்குகளால் நேரிடும் உயிரிழப்பு, பயிர் சேதத்துக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும். வன எல்லையைத் தாண்டி விலங்குகள் வெளியே வராத வகையில் அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்புகளை உடனே கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மீத்தேன், எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும். 58 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூ.15,000 வழங்க வேண்டும். விவசாயத்துக்கென தனி நிதி நிலை அறிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டியின்போது பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, விசுவநாதன், கள்ளக்குறிச்சி கோபால கிருஷ்ணன், ஈரோடு காசியண்ணன், பாலசுப்பிரமணியன், கோவை கே.ஏ.சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment