Sunday 24 January 2016

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு




பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவராக ஒன்றரை ஆண்டு காலமாக பதவி வகித்த ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பா.ஜனதாவின் புதிய தலைவராக 50 வயது அமித் ஷா நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் பதவி காலம் சனிக்கிழமையுடன் (ஜன.23) முடிவடைந்தது. இதனையடுத்து டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டனர். குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் பட்டேல், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா உள்பட பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் போட்டியின்றி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாரதீய ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், சமீபத்தில் நடந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. பீகார் மாநிலத்தில் அதிகமான வாக்குகளை பெற்று இருந்தது.  இருப்பினும், மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த பின்னர் நடைபெற்ற, மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதில் அமித் ஷாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

பி.எஸ்.சி பட்டதாரியான அமித் ஷா, 1964–ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். பின்னர் இவரது குடும்பம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு இடம் பெயர்ந்தது. 1982–ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்ட அமித் ஷா, 1983–ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் சேர்ந்தார். பின்பு 1986–ல் பா.ஜனதாவில் இணைந்தார். 1997, 1998, 2002, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சர்கெஜ் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012–ம் ஆண்டு நரன்புரா சட்டசபை தொகுதியில் வெற்றி கண்டார். 

நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக பதவி வகித்தபோது, அவரது வலது கரம் போல் திகழ்ந்தார். மாநிலத்தின் உள்துறை மந்திரி பதவி உள்பட பல முக்கிய பொறுப்புகளை அவருக்கு மோடி வழங்கினார்.

No comments:

Post a Comment