Sunday, 24 January 2016

மது விலக்கால் வருவாய் குறையும் என்பதை ஏற்க முடியாது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


மதுவிலக்கு கொண்டுவந்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்று தமிழக அரசு சொல்வதை ஏற்கமுடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
 ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் 131-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் முத்துக்கடை காந்தி சிலை அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். 
 கட்சியின் மாநிலப் பொருளாளர் நாசே.ஜே.ராமச்சந்திரன், மாநில எஸ்.சி.,எஸ்.டி. துறை மாநிலத் தலைவர் கே.செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நாசே. ஆர்.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.அண்ணாதுரை வரவேற்றார்.
 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: 
 ரூ. 100 கோடியாக தமிழகத்தின் நிதி நிலை இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் உள்ளபோது, மதுவிலக்கை கொண்டு வர முடியாது எனக் கூறுகின்றனர். இதுகுறித்து கேட்டால், மதுவிலக்கு கொண்டு வந்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கரை இல்லை. எனவே மக்கள் விரோத சக்திகளை தூக்கி எரிய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment