Thursday 28 January 2016

அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்: சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க சதி - சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் பேட்டி


சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தலைமை நிலைய செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு உள்ளிட்ட 7 கட்சி நிர்வாகிகள் திடீரென விலகி பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த கட்சியின் துணைத்தலைவரும், நாங்குனேரி எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் டெல்லி சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலருடன் பா.ஜனதாவில் இணைந்து உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது கட்சியை உடைக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது தெரிகிறது. எனவே புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும், சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்கும் இன்றைய அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்களை தவிர அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், புது உத்வேகம் அளிக்கும் வகையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளோம்.
சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் அனைத்து தொண்டர்களுமே முதல்–அமைச்சராகவோ, மந்திரிகளாகவோ ஆகும் வகையில் வளர்க்கப்படும் கட்சியாகும்.
4½ ஆண்டுகளாக கட்சியில் இருந்து விட்டு பிரிந்து சென்றவர்கள் கட்சிக்காக என்ன செய்தோம் என்பதை மனசாட்சியுடன் நினைத்து பார்க்க வேண்டும்.
கேள்வி: தி.மு.க. அணியில் சேர்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஒவ்வொரு கட்சியும் எந்த திசையில் பயணிக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் கேட்கிறீர்கள்.
சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. அணியிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. தேர்தல் தொடர்பாக எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. எனவே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.
கே: அ.தி.மு.க.வுக்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி நீங்கள் வற்புறுத்தியதாக எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாரே?
ப: இது அப்பட்டமான பொய். நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் செய்து வந்த பணிகளை நான் எப்போதும் தடுத்தது இல்லை. இதற்கு மேலும் பதில் அளிப்பதற்கு அவர் ஒன்றும் பெரிய மனிதர் அல்ல. கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ்., பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், அரசியல் ஆலோசகர்கள் பன்னீர் செல்வம், வென்னிமலை, இளைஞர் அணி செயலாளர் மேத்யூ, வர்த்தகர் அணி செயலாளர் கே.ஜே.நாதன், மகளிர் அணி துணை செயலாளர் பாகிரதி, துணைப் பொதுச் செயலாளர் என்.எம்.சண்முக சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் சேவியர், கிச்சா ரமேஷ், என்.ஆர்.பி. ஆதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு வந்த சரத்குமாரை மகளிர் அணி நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்றனர். 70 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment