Wednesday 20 January 2016

மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை தேசியமயமாக்கக் கோரிக்கை: ஆளுநர் உரை...


1. மழை வெள்ளத்தின் போது மாநில முழுவதும் 7,244 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 23.51 லட்சம் மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.36 கோடி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தேவாயான 17,432 கோடி ரூபாய் நிதியுதவி கோரி மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. மறுசீரமைப்புப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்வதற்காகக் கோரப்பட்ட நிதியை உடனடியாக வழங்கிடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
3. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் மூலம் 105 பின்தங்கிய வட்டாரங்களில் 230 கோடி ரூபாய் செலவில் 445 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
4. அப்துல்கலாமின் நினைவிடம் அமைப்பதற்காக ராமேஸ்வரத்தில் 1.36 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் நாள் இளைஞர் எழுச்சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கைத் தமிழர்கள் மீது கடுங்குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட மத்திய அரசு தொடர்ந்து வற்புறத்த வேண்டும். மேலும், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, தமிழர்களுக்குரிய நிலங்களை திரும்ப அளித்து அவர்கள் அமைதியாக வாழ வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
6. ஆழ்கடல் மீன்படிப்பு மற்றும் அதற்கு தேவைப்படும் கட்டமைப்புக்கான நிதி  ரூ. 1520 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்.
7. குற்றச் செயல்களை தடுப்பதற்கு காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், சமூகவிரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு அனைத்து வகையிலான தீவிரவாதங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
8. முல்லைப்பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான  152 அடி உயரத்திற்கு நீர்மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது.
9. காவிரி நிதி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நிதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் தாமதமின்றி மத்திய அரசு அமைக்க வேண்டும்.
10. நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தீபகற்பக  நதிகளை இணைக்கும் திட்டத்தை, குறிப்பாக மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், பாலாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.
11. தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் ஏற்கெனவே சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள பம்பா-அச்சன்கோயில்-வைப்பாறு திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.
12. நாட்டின் நீர்வளத்தை உகந்த முறையில் பயன்படுத்திட மாநிலங்களுக்கு இடையே பாயும் அனைத்து நதிகளும் முன்னுரிமை அடிப்படையில் தேசியமயமாக்கப்பட வேண்டும்.
13. பொருள்கள் மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். நிதி சுயாட்சி மற்றும் நிரந்தர வருவாய் இழப்பு ஆகியவை குறித்த மாநிலங்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
14. ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பெற்று வரும் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (State Residents Data Hub) ஒரு பாரட்டத்தக்க முயற்சியாகும்
15. புதுமையான விரைவு பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ் இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமான பட்டா மாறுதல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
16. 2007-07 முதல் 2010-11 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் உணவுத் தானிய உற்பத்தியில் எட்டப்பட்ட உயர் அளவான 82.64 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சி, கடந்த 4 ஆண்டுகளில் மூன்று முறை 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்து மாநிலம் சாதனைப் படைத்துள்ளது.
17. இதுவரை திறக்கப்பட்டுள்ள 196 அம்மா மருந்தகங்கள் ஏழை, எளியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
18. மின் உற்பத்தியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது. மாநில மின்வழித் தொகுப்பில் 7,485 மெகாவாட் உற்பத்தித் திறனை இந்த அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது.
19. முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் 5,940 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் வீடுகள் கட்டுவதற்கு விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
20. பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி ஆணையம் உதவயிடுன் செயல்படுத்தப்பட்டு வரும் சுனாமிக்குப் பிறகான நிலையான வாழ்வாதாரத் திட்டம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுப்படுத்தப்படும்.
21. 2015-16 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி உதவியுடன் 3,831 கோடி மதிப்பில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ் 32 நகரங்களையும், திறன்முக நகரங்கள் திட்டத்தின் கீழ் 12 நகரங்களையும் சேர்க்க  வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
22. கடந்த நான்கரை ஆண்டுகளில் 468 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறனைக் கூடுதலாக இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
23. 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 13.27 லட்சம் பேரும், டாக்டர் முத்துலட்சமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 31.19 லட்சம் கர்ப்பிணிப் பெண்களும் பயனடைந்துள்ளனர்.
24. இடைநிலைக் கல்வியில் நிகர மாணவர் சேர்க்கை 94.71 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே முதன்மை நிலையை மாநிலம் எட்டியுள்ளது.
25. 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 39 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பாலிடெக்னிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment