பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்தவர்களில், இதுவரை 2,313 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர், "கடந்த வடகிழக்கு பருவமழை கால தாமதமாக 28.10.2015 அன்று துவங்கியது. ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கன மழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக பல மாவட்டங்கள், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின.
பருவமழை துவங்குவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடுக்கப்பட்டாலும், நூறாண்டுகளில் இல்லாத அளவு பெருமழை பொழிந்ததன் காரணமாக பாதிப்புகள் அதிகமாக இருந்தன.
இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் இதர துறையினர் என 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்கள், குடிசைகளை இழந்தோர், வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டோர், கால்நடைகளை இழந்தோர்,
பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், வல்லங்கள் போன்றவற்றை இழந்த மீனவர்கள் ஆகிய அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விலையேதுமின்றி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கும் ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இது வரை 2,313 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொழில் முனைவோர் அதிலும் குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர்க்கு,
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற சலுகைகளை பெற எனது அரசு உதவி செய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிக சிறு வணிகர்கள், பெட்டிக் கடை நடத்துவோர் ஆகியோர் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறும் வகையில் 5,000 ரூபாய் வட்டி ஏதுமில்லாமல் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் சிறு வணிகர்கள் பயன்பெறுவர்.
மேலும், 25 சதவீத மூலதன மானியத்துடன் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன், தகுதியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக, மழை பாதிப்பிலிருந்து அனைவரும் மீண்டுவிடுவர் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
No comments:
Post a Comment