தமிழக கூலி விவசாய தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20
அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். இப்படுகொலை தடயங்களை மறைப்பதற்காக, இந்தத் தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்றும், அதைத் தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கினார்கள் என்றும், அதில் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்றும் அப்பட்டமான கட்டுக்கதையை செய்தியாக்கினர்.
மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடுமையான அநீதியை எதிர்த்துப் போராடின. குறிப்பாக மனித உரிமைக்கான மக்கள் குடியமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சுரேஷ் தலைமமையில் உண்மை கண்டறியும் குழுவினரை அழைத்துச் சென்று சம்பவம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இடங்களைப் பார்வையிட்டு, நடந்தது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத படுகொலை என்ற அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட மூன்று முக்கிய சாட்சிகளான பாலச்சந்திரன், சேகர், இளங்கோ ஆகியோரை ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு நிறுத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
அனைத்தையும் ஆய்வு செய்ததில் சேசாசலம் பகுதியில் 20
அப்பாவி தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் கொலைசெய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்குகளை மத்திய குற்றப் புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை கோரி ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தற்காலிக தடையைப் பெற்றது.
தமிழகத்தின் 20 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டிப்பதற்கோ, இறந்துபோன தமிழர்களுக்காக ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவிப்பதற்கோ ஆளும் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்வரவில்லை.
ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் 20
தமிழர்கள் படுகொலை குறித்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேதச பரிசோதனை அறிக்கைகளை அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசை மேற்கொள்ளச் செய்வதற்காக ஜூலை 15
ஆம் தேதி அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, வழக்கறிஞர் அஜிதா, இயக்குநர் கௌதமன் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்திந்து கோரிக்கையை முன் வைப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டி நான் ஜூலை 15
ஆம் தேதி அன்று பிற்பகலில் முதலமைச்சர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பினேன்.
15 நாட்கள் ஆகியும் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. படுகொலை நடைபெற்று இன்றோடு
114 நாட்கள் கடந்துவிட்டன. தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டிக்கச் செய்யவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகÞட் 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11
மணிக்கு தாயகத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தை வைகோவும், ஹென்றி திபேன் அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு ம.தி.மு.க
பொதுச் செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்