Tuesday 7 July 2015

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் ஜெ. இரட்டை வேடம் போடுகிறார்: வைகோ திட்டவட்டம்

மதுரை: விடுதலைப்புலிகளால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு தற்போது புலிகளால் ஆபத்து இல்லை என்று திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்தது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுவதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தை கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய வைகோ, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலம் பேரிடியாகத் தமிழர்கள் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் பொது நிறுவனங்களுக்கு, தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் முல்லைப்பெரியாறு போன்ற நீர்த்தேக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று மத்திய அரசின் உள்துறை தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான அபாண்டமான புகார்களைக் கூறி புலிகள் அமைப்புக்குத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் தற்போது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் கோருவதாகத் தெரிவித்து இருப்பது அக்கிரமம் ஆகும். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், விடுதலைப்புலிகளால் பெரியாறு அணைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார். இதனை ஜெயலலிதாவிற்கு தெரிந்துதான் உச்சநீதிமன்றத்தில் கூறினார்களா, அல்லது தெரியாமல் கூறினார்களா. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். கேரள அரசியல் கட்சிகளே அணையை உடைத்து விட்டு, நக்சலைட்டுகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும், ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதும் பழிசுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழியைத் தமிழக அரசே ஏற்படுத்திக் கொடுப்பது மன்னிக்க முடியாத செயல் ஆகும். அறியாமல் செய்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறித் தப்பிக்க முடியாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment