Tuesday 14 July 2015

ஓடினாள்.. ஓடினாள்... திரை ரசிகர்களைப் பரவசப்படுத்திய வார்த்தைச் சித்தர் தி.மு.க தலைவர் கருணாநிதி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 92 வயதாகிறது. ஒரு மிகப் பெரிய அரசியல் கட்சி தலைவர், தமிழக முதலமைச்சராக 5 முறை அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமைக்கு உரிய கருணாநிதியின் இன்னொரு முகம் திரையுலக வாழ்வுடன் இணைந்தது. இன்றும் கூட அவர் கைவண்ணத்தில் ரோமாபுரி பாண்டியன் மற்றும் ராமானுஜர் போன்ற நாடகங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகின்றன. தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை. சிவாஜியின் பல படங்கள் வெற்றிபெற இவரின் அடுக்கு மொழி வசனங்களும் ஒரு காரணமாகும், திருகுவளையில் பிறந்தவருக்கு தமிழைச் சொல்லியாக் கொடுக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதி என்ற இவரின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி 1924 ம் வருடம் ஜூன் மாதம் 3 ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஊரில் முத்துவேலர்- அஞ்சுகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். முதன்முதலில் மாணவர் நேசன் மற்றும் முரசொலி போன்ற துண்டுப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார். இவர் முதன்முதலில் வசனம் எழுதிய படம் அபிமன்யு. அன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து இவர் எழுதிய அந்தப் படத்தை முதன்முதலில் தியேட்டருக்கு தனது மனைவியுடன் சென்று பார்த்தார். படத்தில் வசனம் என்று இவர் பெயரைப் போடவில்லை, அதற்காக வருத்தப் படவில்லை பேசாமல் வந்து விட்டார். அவருக்கும் ஒரு காலம் வந்தது அந்தக் காலம் தமிழ் சினிமாவிற்கு பல புகழ்பெற்ற வசனங்களை இவரின் கைவண்ணத்தில் கொடுத்தது. முதன் முதலில் எம்.கி.ஆர் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படத்தில் தான் கருணாநிதியின் பெயர் திரையில் வந்தது, 1947 ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் வெளியிட்டது. 1950 ம் ஆண்டு வெளிவந்தப் படம் மந்திரிகுமாரி குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றியிருந்தார் கலைஞர். படத்தில் இடம்பெற்ற இந்த வசனங்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. போன்னா போறே வான்னா வாறே நீ போக்குவரத்து மந்திரி, மந்திரி பதவி வந்ததும் தெரியலை போனதும் தெரியலை. போன்ற வசனங்கள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
பராசக்தி 1952 ல் வெளிவந்த பராசக்தி திரைப்படம் சிவாஜியின் நடிப்பிற்காக ஓடியதா கலைஞரின் வசனத்திற்காக ஓடியதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம், அந்த அளவுக்கு இருவருமே அவரவர் துறைகளில் பட்டையைக் கிளப்பி இருந்தனர். கருணாநிதியின் வசன ஆற்றலை முழுமையாக வெளிப் படுத்திய படம் பராசக்தி. ‘பராசக்தி' படத்தில், பணத்தையெல்லாம் இழந்த கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரோட்டோரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் வந்து, தட்டி எழுப்புவார். "டேய்.. நீ பிக்பாக்கெட்டா?" "இல்லை.. எம்ப்ட்டி (empty) பாக்கெட்" "ஏண்டா.. முழிக்கிறே?" "தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?" - இதுபோல அந்தப் படம் முழுவதும் நிறைந்திருந்தன ‘பளிச்' வசனங்கள். அதுபோன்ற வசனங்களைத்தான் இன்று ‘பஞ்ச் டயலாக்' என்று சவுண்ட் எஃபெக்ட் கொடுத்து முறுக்கேற்றுகிறார்கள். ‘பராசக்தி' யைப் படைத்த கலைஞரோ சர்வசாதாரணமாக இத்தகைய வசனங்களை அள்ளித் தெளித்திருப்பார். ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவாஜி மீது அந்த வீட்டுக்காரர் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுவார். அதற்கு சிவாஜி, "அப்படியே சோப்பு இருந்தா கொடுங்க. குளிச்சி நாலு நாளாச்சி'‘ என்பார். நகைச்சுவை கலந்த உடனடி பதிலடியை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இன்றுவரை கடைப்பிடிப்பவர் கலைஞர் மு கருணாநிதி. தமிழின் அழகை, வீச்சை, ஆளுமையைத் திரை உரையாடல்களால் வெளிப்படுத்தியவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது. "ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘ - என, பாமரர்கள் ரசிக்கும் சினிமாவில் இலக்கிய நயத்துடன் வசனம் எழுதி, படம் பார்க்கிறவர்களும் அதைத் திரும்பத் திரும்பப் பேசி ரசிக்கும் வகையில் தன் தனித் தமிழ் நடையால் வெற்றி பெற்றவர் கலைஞர்.
கோவில் வசனங்களில் பகுத்தறிவு கதாபாத்திரங்களின் பெயரிலிருந்து அவை பேசும் வசனங்கள் வரை அனைத்திலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் கலைஞர். அதனால்தான், "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என்ற வசனமும், "அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்ற கேள்வியும் 60 ஆண்டுகள் கடந்தபிறகும் உயிரோட்டத்துடன் உள்ளது.
மனோகரா நாம், திரும்பிப்பார், ராஜாராணி என கலைஞரின் எழுத்தாற்றலில் தொடர்ச்சியாக வெளியான படங்களும் வசனங்களால் வரவேற்பைப் பெற்றன. ‘மனோகரா' படம் அதில் ஒரு மைல்கல். ‘பொறுத்தது போதும்...பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள். அதுவரை சினிமா பாடல்கள்தான் பெருமளவில் கிராமபோன் இசைத்தட்டுகளாக வெளிவந்தன. கலைஞரின் திரையுலகப் பிரவேசத்திற்குப்பிறகு பராசக்தி, மனோகரா போன்ற படங்களின் வசனங்கள் ஒலித்தட்டுகளாக வெளியாகி பல இடங்களிலும் ஒலிபரப்பாயின. பாட்டுப்புத்தகங்கள் போல கதை-வசனப் புத்தகங்களும் வெளியாகி அமோகமாக விற்பனையாயின.
புரட்சியை உண்டாக்கிய பூம்புகார் வசனங்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும் விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்த இந்தப் படத்தில் தன் வசனங்களால் ஒரு புதிய புரட்சியையே உண்டு பண்ணியிருப்பார் கலைஞர். படத்தின் ஹைலைட்டே கலைஞரின் தூய தமிழ் வசனங்கள் தான் . யார் கள்வன் என் கணவன் கள்வனா அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை இது கோவலன்தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு வெண்கொற்றக் குடை எதற்கு?
அரசியலுக்கு அடித்தளமிட்ட நாம் திரைப்படம் "என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?" "ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை" பண்ணையாருக்கும் தொழிலாளிக்கும் இடையிலான ‘நாம்' பட வசனம் இது. தொழிலாளி குறிப்பிடும் அரிவாள் என்பது ஆயுதம் அல்ல. கம்யூனிச இயக்கத்தின் சின்னம்.

தொடர்ந்து 21 படங்களுக்கு பாடல்கள் மந்திரிகுமாரி தொடங்கி 21 படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார். பராசக்தி (பூமாலை நீயே.. புழுதி மண்மேலே...), பூம்புகார் (வாழ்ககையெனும் ஓடம்..), மறக்கமுடியுமா?(காகித ஓடம்.. கடல் அலை மீது) போன்ற பாடல்கள் இன்றும் நெஞ்சில் ரீங்காரமிடுபவை
100 ஆண்டு தமிழ் சினிமாவில் கலைஞரின் 70 ஆண்டு பங்கு நூறாண்டு காணும் இந்திய சினிமாவில் கலைஞரின் பங்கு 70 ஆண்டுகளுக்கு மேலானது. முதல்வராக இருந்த காலகட்டத்திலும் அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1980களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘பாலைவன ரோஜாக்கள்', ‘நீதிக்குத் தண்டனை', ‘பாசப்பறவைகள்' போன்ற பெருவெற்றிப் படங்களைத் தந்தார். 2011ஆம் ஆண்டில் தன் 88வது வயதில்கூட ‘பொன்னர்-சங்கர்' என்ற வரலாற்றுப் படத்திற்கு அவர் திரைக்கதை-வசனம் எழுதினார். கதை, திரைக்கதை, வசனம் என 75 படங்களில் அவரது பங்களிப்பு உள்ளது. மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலைஎழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரடக் ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் 29 படங்களைக் கலைஞர் தயாரித்துள்ளார். இந்த நாளில் நமது சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறலாம் தமிழ்க் கலைஞருக்கு....

நன்றி –

http://tamil.filmibeat.com/

No comments:

Post a Comment