Tuesday 14 July 2015

ராஜஸ்தான் அணிக்கு தடை

முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு ஆயுள் கால கிரிக்கெட் தடையை விதித்து நீதிபதி ஆர். எம்.லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் மெய்யப்பன் நடந்து கொண்ட விதம், செயல்பாடுகள் குறித்தும் அது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

அவரது செய்கைகள் காரணமாகவும், அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் வைத்திருந்த தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தாலும் கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட அவருக்கு ஆயுள் கால தடை விதித்துள்ளது லோதா கமிட்டி.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் பெயரையே கெடுத்து விட்டார் மெய்யப்பன் என்றும் லோதா கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டி கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது பெருமளவில் மேட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் நடந்தது அம்பலமாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த சர்ச்சையின் முக்கிய நாயகர்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் விளங்கின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீனிவாசனின் அணியாகும். அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர்.

அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும். குருநாத் மெய்யப்பனும், ராஜ் குந்த்ராவும், இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்தது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில ராஜஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் குறித்து வெளிப்படையாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விசாரணையை முடித்த நிலையில் தற்போது நீதிபதி லோதா தனது தீர்ப்பை அறிவித்துள்ளார். இந்தக் கமிட்டி குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோரது பங்கு குறித்து விசாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 22ம் தேதி இந்தக் கமிட்டியை உச்சநீதிமன்றம் அறிவித்தது. அக்கமிட்டியில் நீதிபதி லோதா தவிர முன்னாள் நீதிபதிகள் அசோக் பான், ரவீந்திரன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். கமிட்டி தலைவராக லோதா செயல்பட்டார்.



No comments:

Post a Comment