உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். இங்கே நாம் பேசப் போவது ‘உடலே மருந்து’ என்பதை தாங்களே
புரிந்து கொள்ளுங்கள்
‘‘உடல் எங்கேயாவது மருந்தாக செயல்படுமா? அதை என்ன கரைத்தா குடிக்க முடியும்?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடம்பைக் கரைத்துக் குடிக்க முடியாதுதான். நம்மால் மட்டுமல்ல… எந்த நோயாலும் நம் உடலையும் கரைத்துக் குடித்துவிட முடியாது. அந்த நோயை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி நம் உடலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. ஆஞ்சநேயர் போல தன் பலத்தை தானே அறியாமல் சோர்ந்திருக்கும் நம் உடலுக்கு அதன் பலத்தை நினைவுபடுத்த வேண்டியதுதான் நம் வேலை. மற்றவற்றை இயற்கையே பார்த்துக் கொள்ளும். இந்த புதுமை சிகிச்சைக்கு டாக்டரும் தேவையில்லை; மணிக்கணக்கில் காத்திருக்கவும் தேவையில்லை; பணமும் செலவழிக்கத் தேவையில்லை! உங்களுக்கு நீங்களே டாக்டர்…
அந்தக் காலத்தில் இன்றிருப்பது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஏது… மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஏது? தலைவலி, காய்ச்சல் என்றால், இஞ்சியையும் சுக்கையும் தட்டி வெந்நீரில் போட்டுக் குடித்து நிவாரணம் கண்டவர்கள் நம் முன்னோர். இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் என ஒன்றையும் விடவில்லை அவர்கள். தான் படைத்த எல்லாப் பொருளிலும் ஏதோவொரு மருந்தை மனிதனுக்காக வைத்திருந்தது இயற்கை. அந்த மருந்துகளுக்கெல்லாம் மாமருந்தை மனிதனின் உடலுக்குள் வைத்திருந்தது. அதைத்தான் இந்தத் தொடரில் நாம் தரிசிக்கப் போகிறோம்.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாருங்கள். அவர் அப்படி இயங்குவது நல்ல ஆரோக்கியத்தையே காட்டுகிறது. அந்த ஆரோக்கியம் உடலினுடையதா; அல்லது அதன் ஒரு பகுதியான மூளையினுடையதா? பிரித்தறியக் கஷ்டமாக இருக்கிறதா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளை மந்தமாக இருக்காது. மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் உடலின் பொலிவு மற்றும் இயக்கத்திலிருந்தே அதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொடர்பில்தான் அடங்கியிருக்கிறது உடல் மருந்தாவதன் ரகசியம்.
தொடர்பு என வருகிறபோது இருதரப்பை இணைக்கிற ஒரு கருவி அங்கு முக்கியமாகிறது. நம்புங்கள்… நமது மூளையும் உடலின் மற்ற பாகங்களும் தோலின் வெளிப்பகுதிகளில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் விரவியிருக்கும் சிறுசிறு புள்ளிகள் மூலம்தான் பரஸ்பரம் உறவைக் கொண்டுள்ளன. ‘அக்கு புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன அந்தப் புள்ளிகள். ‘எண்சாண் உடம்புக்கு தோல் அரண்’ என்றால் அந்த பார்டரில் நின்றபடி உடம்பைக் காக்கும் சிப்பாய்கள் இந்தப் புள்ளிகள். உள்ளங்கை, பாதம், காது மடல்களில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் பரவலாகவும் காணப்படுகிற இந்த அக்கு புள்ளிகள் நம் உடலில் சுமார் 900க்கு மேல் உள்ளன. ‘இந்தப் புள்ளிகளால் எந்த நோயையும் விரட்டலாம்’ என்பது நிரூபிக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.
‘அக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஊசியை வச்சுக் குத்துவாங்களே… அந்தச் சீன வைத்தியமா’ என்கிறார்கள் இங்கு. அக்கு புள்ளிகளை மெல்லிய ஊசிகளால் தூண்டி நோய்களுக்குத் தீர்வு காண்பது ‘அக்குபஞ்சர்’; ஊசிகளுக்குப் பதில் விரல்களைப் பயன்படுத்துவது ‘அக்குபிரஷர்’. இதெல்லாமே சீனாவின் கண்டுபிடிப்பு என்றே நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இங்கேயிருந்து – குறிப்பாக தமிழ் மண்ணிலிருந்துதான் – அங்கே போயிருக்கிறது. ‘ஏழாம் அறிவு’ படம் நினைவுக்கு வருகிறதா?
தமிழ் மரபின் 18 சித்தர்களில் போகர் பிரபலமானவர். முருகனுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த அவர், உயர்ந்த ரக சீனக் களிமண்ணுக்காக அங்கு சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அங்கு இனம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்திருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த பொன்னூசி வைத்திய முறையில் அவர்களில் சிலரைக் குணப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த சிகிச்சையில் கிடைத்த அற்புத நிவாரணம், சீனர்களை அதிசயிக்க வைத்தது. தங்களுக்கும் அதைச் சொல்லித் தரக் கேட்டிருக்கிறார்கள். போகரும் சொல்லித் தந்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலக அரங்கில் அதைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.
இன்றைய நிலவரப்படி சீன மக்களில் 70 சதவீதம் பேர் எந்த நோய்க்கும் அக்கு சிகிச்சையே எடுக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் உலகின் பல நாடுகளில் இன்று இந்த சிகிச்சை பலருக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. வரலாறுகளை அலட்சியப்படுத்தும் குணமுள்ள நாம், ‘இப்ப அதனால என்ன’ என்கிற கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டோம்.
சரி! விஷயத்துக்கு வருவோம்… தோல் என்னும் போர்வையில் பரந்திருக்கும் அக்கு புள்ளிகளை வெறும் விரல்களால் தூண்டி விட்டு நோயைக் குணப்படுத்தும் ‘அக்குபிரஷர்’ சிகிச்சை பற்றித்தான் வரும் வாரங்களில் பார்க்கப் போகிறோம். இதுவும் ‘தொடுவர்மம்’ என்ற பெயரில் இங்கிருந்து கிளம்பியதுதான். எந்தப் பிரச்னையும் அக்கு புள்ளிகளுக்கு பிடிபடாமல் போவதில்லை. ‘விரல்களால் அழுத்தி எப்படி நோயைச் சரிசெய்ய முடியும்’ என்பது சிலருக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். பெண்கள் கம்மல், மெட்டி போடுவதெல்லாம் ஒரு அழுத்தத்துக்காகவே என்ற உண்மையைச் சொன்னால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா தெரியாது! ஒரே அலுப்பாக இருக்கிறதென்று வீட்டில் மனைவியைக் கால் அமுக்கி விடச் சொல்கிறவர்கள், ஐந்து நிமிடம் நிம்மதியாகத் தூங்குவது எப்படி? இதெல்லாம் அக்குபிரஷருக்கு சிம்பிள் உதாரணங்கள்.
உடனே, அக்குபிரஷர் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கக் கிளம்பி விடாதீர்கள். இந்த சிகிச்சை ஒரு ‘விலையில்லா மருத்துவம்’. சில ஆரம்ப கட்ட அமர்வுகளுக்குப் பிறகு, வரும் முன் காப்பது, நோயைக் கண்டறிவது, முற்றிலும் குணப்படுத்துவது… எல்லாமும் நீங்களேதான்! அதாவது, நோயாளியான நீங்கள்தான் டாக்டரும்! ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஆர்வத்துடனேயே தயாராகுங்கள்.’
No comments:
Post a Comment