கோவை விமான நிலையத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அதானி குழுமத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் பெறப்படுவதாக எழுந்த புகாருக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் கொள்முதலில் டெண்டர் விடாமல் அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெறுவது ஏன்?. இது தொடர்பாக தமிழக அரசு முறையாக விளக்கமளிக்க வேண்டும். தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை கேட்கிறார். தமிழக முதல்வரின் உடல்நிலையை விளம்பரப்படுத்துவது சரியல்ல. இது கண்டனத்துக்குரியது.
கடலூரில் தி.மு.க. கூட்டத்தில் தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார். தி.மு.க. சொல்லும் ஊழல் புகார்கள் எல்லாம் அவர்கள் ஆட்சியிலும் இருந்தது.
அதானி ஒன்றும் பாரதிய ஜனதாவின் அங்கம் கிடையாது. அவர்களுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதானியை பாரதிய ஜனதாவின் கை பாவை என்பதை போல் குற்றஞ்சாட்டுவதை வைகோ, இளங்கோவன் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். வியாபம் ஊழல் புகாரில் குற்றமற்றவர்கள் நாங்கள் என்பதை நிரூபிப்போம். நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. விசாரணைக்கு தயார் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதில் எந்த குற்றமும் அற்றவர்கள் நாங்கள். அதை சட்டப்படி நிரூபிப்போம்.
தமிழக காய்கறிகளில் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக சொல்லி கேரளா அரசு காய்கறிகளுக்கு தடை விதிக்கிறது. அது தொடர்பாக பரிசோதனை நடத்தி அப்படி எல்லாம் இல்லை என நிரூபிக்க வேண்டிய தமிழக அரசு அதை செய்யாமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. ஏழை விவசாயிகள் அன்றாடம் பயிர் செய்யும் காய்கறிகளை விற்பதற்குண்டான முயற்சிகளை இனிமேலாவது தமிழக அரசு செய்ய வேண்டும்," என்றார்.
2016 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி பா.ம.க.வின் முன்னெடுப்புகள் குறித்தும், அன்புமணி முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக கேட்டபோது, "2016 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 2014 நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு பா.ம.க. ஒரு தொகுதியில் வென்றது. அதில் எல்லா கட்சிகளின் பங்கும் உள்ளது. அதை பா.ம.க. உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையில் திராவிட கட்சிகளின் ஆட்சியை அகற்ற வேண்டுமாயின் தே.ஜ.கூ.வில் பாமக இடம்பெற முயற்சிக்க வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அந்த கூட்டணியில் பலம் பெற்ற கட்சியாக இருந்து பாரதிய ஜனதா தலைமை தாங்கும்.
இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment