வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் முட்லூர், வல்லம்படுகை, கடலூரை அடுத்த கேப்பர் மலை கிராமங்களில் 4 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
வாழை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு | 50 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. வாழைப் பயிரில் நோய்த் தாக்குதல் பெருமளவுக்கு ஏற்படுவதில்லை. எனினும், சூறாவளிக் காற்று பல நேரங்களில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரக்கழிகளை வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்து, காற்றில் விழுந்து விடாதவாறு பாதுகாக்கும் முறை, காலம் காலமாக விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கழிகள் வாங்க ஏக்கருக்கு | 20 ஆயிரம் செலவாகிறது. கயிறு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் கட்டுக்கூலி ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்க்கும்போது, ஏக்கருக்கு | 25 ஆயிரம் செலவாகிறது. இதற்காக வங்கிகள் ஏக்கருக்கு | 25 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றன. வாழை மரங்களை நைலான் கயிறுகளால் இணைத்துக் கட்டிவிடும் புதிய தொழில்நுட்பம், நல்ல பலனைத் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு வாழை மரத்தைச் சுற்றியும், ஒரு நைலான் கயிற்றை தொய்வாகக் கட்டிவிட்டு, அதில் இருந்து 4 புறமும் வாழைகளை நீண்ட நைலான் கயிறுகளால் இணைத்து, இறுதியாக மின்கம்பங்களுக்கு ஸ்டேவயர் கட்டுவதுபோல் நிலத்தில் இழுத்துக் கட்டிவிடும் புதிய முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
கழிகளை முட்டுக் கொடுக்கும் பாதுகாப்பு முறையைவிட, இவ்வாறு நைலான் கயிறுகளால் வாழைகளை பிணைத்துக் கட்டுவதால், சூறாவளிக் காற்றில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
கழிகளுக்கு ஆகும் செலவைவிட நைலான் கயிறுகளுக்கு செலவு குறைவாகவும், ஒருமுறை பயன்படுத்திய நைலான் கயிறுகளை, 8 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏக்கருக்கு | 13 ஆயிரம்தான் செல்வாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் முன்னோடி விவசாயியுமான ஞானசேகரன், தனது வாழைத் தோட்டங்களில் 3 ஏக்கரில் மட்டும் நைலான் கயிறுகளால் பிணைத்துக் கட்டும் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி இருக்கிறார்.
இதனால் இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் அடித்த சூறைக்காற்றில், 250 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்த போதிலும், தனது வாழை மரங்கள் முழுமையாகத் தப்பியதாக ஞானசேகரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை 3 ஏக்கரில் மட்டும் பயன்படுத்தியவர் ஞானசேகரன். பிற மாவட்டங்களில் தலா 30 அல்லது 40 ஏக்கரில் மட்டும் பிரபலமாகி இருக்கும் இந்த புதிய பாதுகாப்பு முறையை, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
மேலும் வாழைமரங்களின் பழங்கள், நார் ஆகியவற்றைக் கொண்டு, புதிய பொருள்களை உருவாக்கி விவசாயிகள் தங்கள் வருவாயை உயர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment