Tuesday, 14 July 2015

காலத்தை வென்ற மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி. மறைவு - வைகோ இரங்கல்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
உலகின் தொன்மையான இசை தமிழ் இசை என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டும் விதத்தில் கலை உலகத்தில் இசைக்கருவிகளின் மூலம் நாத வெள்ளத்தைத் தேனருவியாகத் தமிழர்களுக்கு வழங்கிய மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி. அவர்கள், மெல்லிசை மன்னர் இராமமூர்த்தி அவர்களோடு இணைந்து இசை அமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களிலும், பிறகு எம்.எஸ்.வி. மட்டுமே தனித்து இசை அமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களிலும் இசை உலகின் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.
ஐம்பதுகளில் வெளிவந்த சோக காவியமான தேவதாஸ் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த இம்மேதை, அறுபதுகளில் வெளிவந்த நடிகர் திலகம் நடித்த பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, திரிசூலம், ராஜபார்ட் ரங்கதுரை, சாந்தி உள்ளிட்ட படங்களுக்கும், மக்கள் திலகம் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கும் இசைத்துத் தந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
போராட்டங்களே நிறைந்த என்னுடைய பொது வாழ்க்கையில் என் இதயத்திற்கு இதம் தருபவை இனிய பாடல்கள்தாம். காரில் பயணிக்கும்போதும், இரவு வேளைகளில் நான் தூங்கும்போதும்கூட பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலானவை எம்.எஸ்.வி. இசை அமைத்தவைதான்.
மண்ணுலகை விட்டு அவர் மறைந்தாலும், என் போன்றோருக்கு எந்நாளும் அவர் அருகில்தான் இருக்கின்றார், அவர் இசை அமைத்த பாடல்கள் மூலம்.
அழியாத புகழ் படைத்த மெல்லிசை மாமன்னர் அவர்கள் இசை அமைத்ததைப் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளில் நான் பேசியபோது, அவர் மெய்மறந்து நெகிழ்ந்து எனக்கு நன்றி சொன்னார்.

இசைச் செம்மல் எம்.எஸ்.வி. அவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment