Thursday 30 July 2015

மறைந்த மக்களின் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு பேக்கரும்பு பகுதியில் இறுதி அஞ்சலி - மோடி, ராகுல், பன்னீர் செல்வம், வை.கோ உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களது புகழுடல் ராமேஸ்வரம் பள்ளிவாசலுக்கு சிறப்புத் தொழுகைக்காக எடுத்துச் செல்லப்பட்டு தொழுகை முடிவடைந்து ஊர்வலமாக அடக்கம் செய்யப்பட உள்ள பேக்கரும்பு கிராமத்திற்கு வந்தடைந்தது. ஜனாஸா தொழுகை எனப்படும் முஸ்லிம் மக்களின் இறுதி தொழுகைக்காக கலாம் அவர்களின் உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அவர்களுடைய முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு மேலே அவர்களுடைய புனித ஆடை போர்த்தப்பட்டு இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிவடைந்த பின்னர் கலாம் அவர்களின் புகழுடல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக பேக்கரும்பு கிராமத்திற்கு வந்தடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்திற்கிடையில் ஊர்ந்து சென்றது கலாமின் புகழுடல். ராமேஸ்வரம் தீவே கண்ணீர் கடலில் தத்தளித்து வருகின்றது. ராமேஸ்வரம் தீவே மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருவதால், அஞ்சலி செலுத்த காரில் வருவோர் அனைவரும் மண்டபம் அருகேயே காரை நிறுத்தி விட்டு பஸ் மற்றும் ரயில்களில் செல்ல அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். குவியும் தலைவர்கள்: ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அரசு வாகனம் மூலமாக பேக்கரும்பு பகுதிக்கு கிளம்பியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட உள்ள பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள பேக்கரும்பு கிராமத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநர் ரோசையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு, குலாம் நபி ஆசாத், தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உட்பட பல்வேறு மத்திய, மாநில தலைவர்கள் குவிந்துள்ளனர். இறுதி மரியாதை: முப்படையினரின் இறுதி ராணுவ மரியாதையுடன் பேக்கரும்பு பகுதியில் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது கலாம் உடல். பிரதமர் நரேந்திர மோடி கலாம் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் கலாமின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரிசையில் நின்று ராகுல் காந்தி கலாம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். குலாம் நபி ஆசாத் மற்றும் ஷானவாஸ் ஹூசேன் ஆகியோர் கலாம் உடலுக்கு பாத்தியா ஓதி அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஈவிகே எஸ் இளங்கோவன், தமிழிசை, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், வைகோ திருநாவுக்கரசர் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமராமல் வைகோ, பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாசு, பட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி,  கலாம் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தினர் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment