Tuesday, 21 July 2015

கொடைக்கானலில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு - போதகர் மகன் உள்பட இருவர் கைது - போதகர் மகன் என்பதால் அங்கிருந்த கிறிஸ்துவ தேவாலயம் மீது தாக்குதல் - கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது. கொலையாளி போதகர் மகன் என்பதால் போதகர் நடத்தி வந்த தேவாலயத்தையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி பொதுமக்கள் ஆவேசம். மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் அந்த ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் மற்றும் இவரது நண்பர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நகைக்காகவும் பணத்திற்காகவும் கொலை செய்ததாக தெரிய வந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர். இந்நிலையில் கொலையாளி போதகரின் மகன் என்பதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பிரகாஷின் வீட்டையும் அவரது உறவினரின் வீட்டையும் அடித்து நொறுக்கியதோடு போதகரான அவரது தகப்பனார் நடத்தி வரும் தேவாலயத்தையும் அடித்து நொறுக்கினர். மேலும் ஒன்று கூடிய பொதுமக்கள் இந்த கொலைக்கு மது போதையே காரணம் என்பதால் அந்த கிராமத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் அதிமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணனை கைது செய்வதோடு இவர் சட்ட விரோதமாக நடத்தி வரும் மதுபானக் கடையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாலயம் மற்றும் போதகரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் மலைக் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.





No comments:

Post a Comment