விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்ற தமிழர்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானம் ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி நீதியின்பால் நம்பிக்கைகொண்ட அனைவருக்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் பங்களிப்புச் செய்து தமிழர்களை கொன்று குவிக்கத் துணை நின்ற சர்வதேச நாடுகள் இன்று நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பக்கபலமாய் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேசச் சமூகம் நீதியை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது.
2009–ம் ஆண்டு நடை பெற்றது இனப்படுகொலை என்றால் இப்போது நடை பெறுவது நீதியின் படுகொலை. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அமெரிக்கா முன்மொழிந் திருக்கும் தீர்மானத்தில் உள் நாட்டு விசாரணை, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை என்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஏற்பாடுகளும்கூட முழுமையாக நடந்தேறும் என நாம் நம்ப முடியவில்லை.
இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தமிழ்ச்சமூகம் விழிப்போடிருக்க வேண்டும். வாய்ப்புள்ள அரங்குகளிலெல்லாம் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திட தமிழக சட்டப் பேரவையில் இரண்டு முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐ.நா.வில் நடக்கப்போகும் அநீதியை முன்னுணர்ந்து தமிழக அரசு சிறப்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்துடன், நமது கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு எண்ணிவிடக் கூடாது. கண்துடைப்பு விசாரணை தான் என்றாலும் தொடர்ந்த கண்காணிப்பின் மூலம் அதை சக்திவாய்ந்ததாக தமிழ் மக்கள் மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவிருக்கும் விசாரணை அமைப்பின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், ஈழத் தமிழர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வை நடை முறைப்படுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், வெளியுறவுத் துறை வல்லுநர்களைக் கொண்ட பொறியமைவு ஒன்றை தமிழக அரசே உருவாக்க வேண்டும் எனவும், அந்த அமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வுகளை உருவாக்கி இந்தியப் பேரரசின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உதவிட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தமிழக முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment