பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
‘‘சுமை கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’’ என்பதைப் போல கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு 2 ஆயிரத்து 868 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். ஏதேனும் நெடுஞ்சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment