ம.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் இணைந்த நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி உள்பட 9 பேர் கலந்துகொண்டனர். 13 உறுப்பினர்களை கொண்ட உயர்நிலைக்குழுவில் பாலவாக்கம் சோமு, மாசிலாமணி கட்சியில் இருந்து விலகியதாலும், 2 பேர் தவிர்க்க முடியாத காரணத்தாலும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் கட்சியை விட்டு விலகியவர்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சில தினங்களுக்கு முன் நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும், மக்கள் நலன்காக்கும் கூட்டு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதை அத்தனை பேரும் ஏற்றுக்கொண்டார்கள்.
ம.தி.மு.க. தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி. ம.தி.மு.க.வை எவ்வளவு முயற்சி செய்து அழிக்க நினைத்தாலும் முடியாது. வாரிசு அரசியல், ஊழல் அரசியலை எதிர்த்து அண்ணாவின் கொள்கைகளை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். கம்யூனிஸ்டு கட்சியினர் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை அரசியல் இயக்கமாக கொண்டு செல்ல விரும்பினார்கள்.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரித்தது. மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கவில்லை. அவர்களை பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறோம். ம.தி.மு.க. வில் இருந்து விலகி சென்றவர்கள் நன்றாக இருக்கட்டும். தி.மு.க.வுடன் கூட்டணி என்ற முடிவுக்கு வராவிட்டால், ம.தி.மு.க.வினரை இழுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.
இந்த இயக்கத்தை நாங்கள் லட்சியரீதியாக கொண்டு செல்கிறோம். தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கிறது. திராவிட இயக்கத்தை பாதுகாக்க தவறிவிட்டோம் என்ற பழிக்கு நாங்கள் ஆளாகக்கூடாது. ஆகையால் இரண்டு கட்சிகளுடனும் கூட்டு சேரக்கூடாது என்று மிகச்சரியாக முடிவு எடுத்தோம். தேர்தலை சந்திக்கும் கூட்டணியாக மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
எங்கள் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. கருணாநிதி, மு.க. ஸ்டாலின் எங்கள் கட்சியை உடைக்க பார்க்கின்றனர். எங்கள் கட்சியை யார் நினைத்தாலும் உடைக்க முடியாது.
பதவி ஆசை, சுயநலத்திற்காக எங்கள் கட்சியை விட்டு சென்றிருக்கிறார்கள். ம.தி. மு.க. உயர்நிலைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் 22-ந் தேதி கலிங்கப்பட்டியில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment