Wednesday 23 September 2015

ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசப் பேச்சு


சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி, காங்கிரஸ் சார்பில் இன்று(புதன்) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், " டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா துணிச்சலான, நேர்மையான, போலீஸ் அதிகாரியாக செயல்பட்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அவரது மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை, சி.பி.சி.ஐ.டி விசாரணையே போதும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

ஒரு பெண் அதிகாரி தற்கொலை சாதாரணமானதா? அவர் என்ன விபத்தில் இறந்தாரா? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பெண் போலீசார் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 216 பேர் இறந்து இருக்கிறார்கள்.

போலீசார் 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இதனால் அவர்களால் சுறு சுறுப்புடன் செயல்பட முடியவில்லை. அவர்களது பணியை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானதாக பேசப்பட்டது. இன்று துதிபாடும் போலீசாக விளங்குகிறது. உயர் அதிகாரிகள் 4, 5 பேர் தவிர மற்றவர்கள் வேதனையுடன் உள்ளனர்.

வேளாண் அதிகாரி தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகியபோது,  டி.எஸ்.பி தற்கொலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும், பெண்களுக்காக, தலித்துகளுக்காக போராடும். தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்" என்றார்.
 

No comments:

Post a Comment