தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் அங்குள்ள தமிழர்களுக்கு மறுகுடியமர்த்தல், உரிய சலுகைகள், வசதிகள் முழுமையாக வழங்கப்படாத நிலையில் இலங்கை அரசு 47 நாடுகளுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை செய்து கொள்கிறோம் என்ற இலங்கையின் கருத்து ஏற்புடையதல்ல.
இந்தியாவும் இலங்கையின் இந்த கடிதம் தொடர்பாக உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு சர்வதேச விசாரணையை மட்டுமே ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் அமெரிக்கா வரைவு தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கைக்கு ஆதரவான அம்சங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை அரசின் தூதர் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
எனவே ஐ.நா. சபை அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தையும், அதுகுறித்த இலங்கை தூதரின் கருத்தையும் கவனத்தில் கொள்ளாமல், சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணையை உடனடியாக அமைத்திட வேண்டும். இதன் அடிப்படையில் உலக நாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி போர்க்குற்றம் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்திட வேண்டும்.
அதன் மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டணையை பெற்றுத்தர வேண்டியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கடமையாகும்.
எனவே இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு இந்தியா இலங்கையை வற்புறுத்த வேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த மத்திய பா.ஜ.க அரசுக்கு தமிழக அரசு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment