காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்ப முடியவில்லை.
விஷ்ணுபிரியா நாணயமானவர். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர். ஏழ்மை நிலையில் கூட சொந்த ஊருக்கு பஸ்சில்தான் பணம் செய்வார்.
தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பெண் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 266 போலீசார் மர்மமான முறையில் இறந்து உள்ளனர். இதில் பெண் போலீசாரும் அடங்குவார்கள்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் கட்டுப்பாட்டில் 9 போலீஸ் நிலையங்கள் ஒப்படைத்து பணி செய்யுமாறு வேலைப்பளு கொடுத்து உள்ளனர்.
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவையில்லை. சி.பி.ஐ. விசாரணையில்தான் உரிய தீர்வு கிடைக்கும். விஷ்ணுபிரியா தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் தந்தை ரவி வாக்குமூலத்தை சாட்சியாக வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் தலித் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் குறித்து அனுதாபமோ, இரங்கலோ தெரிவிக்கவில்லை. துணை நடிகை பரவை முனியம்மாவுக்கு காட்டிய பரிவு கூட காட்டவில்லை.
தலித் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், விஷ்ணுபிரியா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியும் சென்னை அண்ணாசாலையில் நாளை (23–ந்தேதி) காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் அதன் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விஷ்ணுபிரியா மரணத்தில் நியாயம் கிடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போலீசார் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதே இல்லை. காவல் துறையில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment