பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
சவுதி அரேபியாவில் மெக்கா நகரத்திற்கு அருகிலுள்ள மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 725 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த சம்சுதீன் என்பவரும் மொகிதின் பிச்சை என்ற இன்னொருவரும்அடக்கம் என்பதை கேட்டதும் துக்கம் அதிகரித்து விட்டது.
இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் புனிதக்கடமைகளில் ஒன்று. இத்தகைய புனிதக் கடமையை நிறைவேற்றச் செல்லும் போது நெரிசலில் சிக்கி உயிரிழப்பது பெரும் சோகமாகும். இறை வழிபாட்டுக்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசல் சமாளிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்; புனிதக் கடமையாற்ற செல்பவர்கள் இயல்பாகவோ அல்லது வதந்திகளை நம்பியோ சுய கட்டுப்பாட்டை இழந்து விடக் கூடாது என்பதையே இந்த சோக விபத்துக் காட்டுகிறது. மெக்கா நெரிசல் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெக்கா விபத்தில் உயிரிழந்த சம்சுதீன், மொகிதின் பிச்சை ஆகிய இருவரின் உடல்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், ஹஜ் பயணம் மேற்கொண்டு மெக்காவில் சிக்கித் தவிக்கும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment