Sunday 27 September 2015

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் வழக்கில் முழு உண்மையும் தெரிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் வைகோ பேட்டி


டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் முழு உண்மையும் தெரிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நீதிக்கு மரண தண்டனை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ் இனத்தையே படுகொலை செய்த ராஜபக்ஷே கூட்டத்துக்கு அமெரிக்க அரசும், இங்கிலாந்து அரசும் நீதியை குழி தோண்டி புதைக்கிற வகையில், இலங்கை அரசாங்கமே விசாரித்து கொள்ளலாம் என்று தீர்மானத்தை முன்வைத்து இருக்கிறார்கள்.
வருகிற 30–ந்தேதி மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் மேலை நாடுகள் இப்படி ஒரு செயலை இதுவரை செய்தது கிடையாது.
வேறு கேடு எதுவும் இல்லை
அமெரிக்க தீர்மானம், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தயாரித்த தீர்மானம். தமிழினத்துக்கு இதைவிட வேறு கேடு எதுவும் இல்லை.
இந்த சோகமும், வேதனையும் நிறைந்த இந்த நேரத்தில், தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, இனி நமக்கு நாமே நீதி தேடிக் கொள்ள வேண்டும். உலக நாடுகளிடம் இனி பிச்சைக்கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.
தமிழக இளைஞர்களுக்கு கடமை இருக்கிறது. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள். நாளைய தினம் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அதில் ம.தி.மு.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறேன். இந்த கொலைகார கூட்டத்தில் இந்தியாவும் உடந்தை. இலங்கையில் நடந்த இனப்படுகொலை குற்றத்தில் இந்தியாவும் ஒரு குற்றவாளி தான்.
சி.பி.ஐ. விசாரணை
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டார் அல்லது காவல்துறை அதிகாரிகளால் தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இந்த வழக்கை திசை திருப்பும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது. இதுவரை அரசு விஷ்ணுபிரியா இறப்புக்கு அனுதாபம் தெரிவித்திருக்கிறதா?. இந்த சம்பவத்தில் விஷ்ணுபிரியாவின் தோழி, டி.எஸ்.பி., மகேஸ்வரி போலீஸ் உயர் அதிகாரிகளின் தொல்லையால் தான், விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். உடனே அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்திருக்கிறது அரசு.
இந்த சம்பவத்தில் முழு உண்மையும் தெரிய வேண்டும் என்றால் அதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment