சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயரிங் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்மன் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள யுவராஜ் குடும்பத்தினரிடம் தரப்பட்டது.
இந்த நிலையில் யுவராஜ் வாக்குமூலம் என்ற பெயரில் 15 பக்க கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி, மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் யுவராஜ் கூறி இருப்பதாவது:–
என் மீதும் எனது பேரவையின் ஆட்கள் மற்றும் ஏகப்பட்ட நபர்கள் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பல வழக்குகள் திருச்செங்கோடு, நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்ட விரோத தொடர் டார்ச்சர்களினாலேயே திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் மனம் உடைந்து போனார். நேர்மையாக பணியாற்ற வந்த அவர் இவர்கள் செய்த தவறுகளால் பலிகடாவாக மாறி அவமானப்பட போகிறோம் என்ற நிலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார். எனவே, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒரு பெண்ணும், 23 வயது மதிக்கத்தக்க பையனும் சண்டையிட்டபடி இருந்தனர்.
நான் அந்த பையனையும், பெண்ணையும் என் அருகே வருமாறு சைகையை காட்ட இருவரும் எனது அருகே வந்தனர். அப்போது அந்த பெண் தனது பெயரை சுவாதி என்றும், அந்த வாலிபர் கல்லூரியில் படித்த தோழன் என்றும், நட்பாக பழகி வந்த என்னை இன்று கல்லூரியில் உள்ள பழைய பெண்கள், ஆண்கள் இன்று திருச்செங்கோடு மலைக்கு வருகின்றனர். நீ, வா மீண்டும் நாம் ஒன்றாக நண்பர்கள் அனைவரும் சந்திப்பது அரிது எனக்கூறவும் நான் வந்தேன். ஆனால், இங்கு யாரையும் காணோம்,
இவன் என்னை காதலிப்பதாக கூறுகிறான். நண்பர்கள் முன் வந்து காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகிறான் என்று கூறினாள்.
அதற்கு நான், உனது தந்தைக்கு போன் செய்து தெரிவிக்க வேண்டியது தானே என்றேன். பிறகு அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி உனது வீட்டுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டிருந்த வேளையில், எனது சைடில் நின்றுக்கொண்டிருந்த பையன் ஓடி மறைந்து விட்டான்.
பிறகு அந்த பெண்ணை வீட்டில் விட அழைத்தேன். அதற்கு அந்தப்பெண் வீட்டில் ஒருவரும் இல்லை என்றார்.
பிறகு மலையில் வேறு நண்பர்களுடன் பேசிக்கொண்டு உள்ளே இருந்தேன். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்.
மறுதினம் சக்கரபாணி ஆய்வாளர் கேட்கும்போது இந்த தகவலை தெரிவித்தேன். பிறகு மதியம் 2.45 மணியளவில் திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் என்னை மொபைலில் அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்க, நான் அலுவலகத்தில் சங்ககிரியில் இருப்பதாக கூறினேன்.
கோகுல்ராஜ் எங்கே என்றார். யார் அது என நான் கேட்க... அந்த சுவாதி பெண்ணிடம் இருந்து எதற்காக போனை பெற்று சென்றீர்கள் என கேட்டார்.
அதற்கு நான் பெற்று சென்றது தவறுதான். ஆனால், அதனை கொடுத்துவிட்டு வரச்சொல்லி அவர்களது வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என கூறினேன்.
இல்லை நீங்கள் பிடுங்கி செனறுவிட்டதாக அந்த பெண் கூறுகிறார் என கூறவும். அதிர்த்த நான் உடனே உங்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வருகிறேன் என்றதும் சரி வாருங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
சிறிதுநேரத்தில் எனது நண்பர்கள் சங்ககிரியில் உங்களது வீட்டில் திருச்செங்கோடு ஆய்வாளர் சக்கரபாணி தலைமையில் போலீசார் விசாரிப்பதாகவும், என்னை தேடுவதாகவும் எனது தாய், தந்தை, மாமியார், தம்பி, பேரவை ஆட்கள் என சிக்கிய அனைவரையும் பிடித்து செல்வதாகவும் கூறினார்கள்.
ஒரு செல்போனுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என சந்தேகம் அடைந்த நான் விசாரிக்கும்போது, அந்த மாணவன் ரெயில்வே ரோட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
எனது குடும்பத்தாரிடம், நான் கொன்று விட்டதாக கூறவும், பேரதிர்ச்சியடைந்த நான், எங்கோ தவறு நடக்கிறது. என்ன உண்மை என அறிய முயன்றபோது, இந்த இறப்பை வைத்து எனக்கு எதிராக அரசியல் காய் நகர்த்த சிலர் திட்டமிடுவதை அறிந்து, நான் உடனடியாக எனது செல்போனை அணைத்து விட்டு தோட்டத்திற்கு திரும்பி விட்டேன்.
அனைவரையும் பிடித்து சென்று விட்டதால், போனை ஆன் செய்யாமல் தோட்டத்தில் இருந்தேன்.
பின்னர் என்னை முதல் குற்றவாளியாகவும், எனக்கு கீழே அருண்குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஜோதிமணி, சந்திரசேகரன் ஆகிய 9 பேர் மீது அந்த இளைஞனை கடத்தி கொன்றதாகவும், தீண்டாமை வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப் பதிந்து வழக்கு ஆவணப்படி 6 பேரை 1.7.2015 அன்று கைது செய்தபோது நான் கொலைச்செய்ததாக வாக்குமூலம் அளித்தாகவும் ஆவணங்களில் உள்ளது.
இந்த பொய்யான, போலியான ஆவணங்களையும், மற்ற விவரங்களையும் நேர்மையான அதிகாரியான டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவை பெயரளவுக்கு மட்டும் விசாரணை அதிகாரியாக வைத்து மற்ற அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த சட்டவிரோத செயல்பாடுகளே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய காரணம் என்பதையும் என்னால் நிரூபிக்க முடியும்.
நான் குற்றவாளி இல்லை என்பதையும் என்னால் நிரூபிக்க இயலும். இதன் உண்மை தன்மையும் புலன் விசாரணை செய்தாலே நான் குற்றவாளி இல்லை என்பதும், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ள அவரது தலைமையை பயன்படுத்தி போலியாக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கே எனவும், ஆதாரபூர்வமாக அறிய முடியும்.
என் மீது தொடர்ச்சியாக எண்ணிடலங்காத பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. என்னை சுட்டுக் கொன்றுவிட்டு ஏதோ ஒரு கதையை கட்டமாட்டார்கள் என்பதற்கும், அப்படி எண்ணாமல் இருப்பதற்கு யாரேனும் உத்தரவாதம் தர இயலும் சூழ்நிலை உள்ளதா? நீங்களே எண்ணிப் பாருங்கள்.
காவல்துறை மூலமாக எனக்கு தடை ஏற்படுத்த உள்ள சூழ்நிலையை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்களது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment