Saturday, 26 September 2015

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு ‘ஆற்றல் மேலாண்மையில் மேன்மை’ விருது


இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு, ஹைதராபாத் சொராப்ஜி கோத்ரேஜ் பசுமை தொழில் மையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் ஆற்றல் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்கான விருதுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 265 தொழில் நிறுவனங்கள் போட்டியிட்டன.
கடந்த 3 ஆண்டுகளின் ஆற்றல் அளவீடு, புதிய ஆற்றல் சேமிப்பு திட்டங்கள், அதற்கான தரச்சான்று பெற்றவர்கள், பயனில்லாத பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தியவர்கள் எனப் பலவகைகளில் சிறப்பு பெற்ற நிறுவனங்களிலிருந்து 130 நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, ஹைதராபாத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த திறன்மிக்க நடுவர்கள் குழு முன்னிலையில் கருத்து விளக்கக்காட்சி நடத்தப்பட்டது.
அதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன முதுநிலை மேலாளர் (இயந்திரப் பிரிவு) மகேஷ், முதுநிலை மேலாளர் (ஆற்றல் பிரிவு) சுப்பிரமணியன், துணை மேலாளர் (இயந்திரப் பிரிவு) ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நடுவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பீரோ ஆப் எனர்ஜி எபிஷியன்சியின் பொது இயக்குநர் அஜய் மாத்தூர், ஆற்றல் மேலாண்மையில் மேன்மை விருதை டிஎன்பிஎல் அலுவலர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment