இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது என்று பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கிறது. இத்தீர்மானம் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இது தமிழர்களுக்கு நிச்சயம் நீதி பெற்றுத் தராது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையம், அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து பன்னாட்டு பிரதிநிதிகளும், இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இது போதுமானதல்ல... இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்கா தாக்கல் செய்த முதல் வரைவுத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான அம்சங்களே இடம் பெற்றிருந்தன. அதற்கு தமிழர்களிடம் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானமும் தமிழர்களுக்கு எதிராகவே அமைந்திருப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத் தன்மையுடன் கூடிய உள்ளக விசாரணை நடத்த இலங்கை முன்வந்திருப்பதை வரவேற்றுள்ள அமெரிக்கா, இந்த விசாரணை அமைப்பில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இடம் பெற வேண்டும் என்று மட்டும் அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு அதன் விருப்பப்படி, அதற்கு ஒத்துவரக்கூடிய சில வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு நடத்தி முடித்துக் கொள்ள அமெரிக்கா அனுமதித்திருக்கிறது.
மேலும், இந்த தீர்மானத்தில் பத்திக்கு பத்தி இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு மழை பொழிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஈழத்தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சிவில் நிர்வாகங்களை மேம்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட இலங்கை அரசின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை என்று அமெரிக்காவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், வடக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களால் இன்னும் நிம்மதியாக வாழ முடியவில்லை. 6 தமிழர்களுக்கு ஒருவர் வீதம் வடக்கு மாநிலத்தில் லட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் போர்ப்படைத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
இத்தகைய சூழலில் வடக்கு மாவட்டத்தில் தமிழர்கள் அமைதியாக வாழவும், தமிழருக்கு அதிகாரம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை கூறுவதை அமெரிக்கா நம்புவதும், வரவேற்பதும் மகிழ்ச்சியைத் தரவில்லை; மாறாக வேதனை கலந்த நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது.
இலங்கை பிரச்சினை தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களில் எந்த விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கையில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இப்போது எல்லா விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கை இருப்பதாக கூறுகிறது. ஆட்சி மாற்றத்தின் காரணமாகத் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. இலங்கையில் ஆட்சி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களை ஒழிப்பது மட்டும் தான் ஒரே இலக்கு. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கைக்கு சாதகமாக செயல்படுவதன் மூலம் இன்னொரு இனப்படுகொலை நடப்பதற்கான அடித்தளத்தை அமெரிக்கா அமைத்து தருவதாகவே கருதவேண்டியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா நீதி பெற்றுத் தராது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அந்தக் கடமை மற்றும் பொறுப்பை இந்திய அரசு ஏற்க வேண்டும். உண்மையில் இலங்கை போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா தான் இருக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் பெரும்பாலானவை தயாராக உள்ளன. இச்சிக்கலில் இனியும் இந்தியா தயக்கத்துடன் செயல்படக்கூடாது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் இந்திய அரசே கொண்டு வர வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. நான் ஏற்கனவே கூறியதைப் போல, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இது குறித்து வலியுறுத்த வேண்டும்.
தமிழக அரசும், மத்திய அரசும் தங்களின் கடமையை நிறைவேற்றாவிட்டால் இலங்கையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்'' என அன்புமணி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment