ஏற்கனவே ஓக்கேனக்கல் பரிசல் விபத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலாத்துறை தற்போது கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கன வெள்ளம் காரணமாக ஒகேனக்கல்லில் குளிக்க தடை விதித்துள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அருவி பக்கம் செல்லாத வகையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கயிறுகளை கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக–கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், காவிரியில் வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கர்நாடகா அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேராக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8339 கன அடியாக இருந்து.
இன்று மேலும் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் அதிகரித்து அணைக்கு விநாடிக்கு 15080 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. நேற்று 66.54 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 66.66 அடியாக உள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா மாவடங்களின் பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment