Wednesday 30 September 2015

ஹெல்மெட் விவகார அவமதிப்பு வழக்கு: முதன்முறையாக சென்னை ஐகோர்ட் நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு




ஹெல்மெட் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பேரமர்வு விசாரிக்க பரிந்துரை 

ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிந்துரைத்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திரை வைத்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில், இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றியது இதுவே முதல் முறை.
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அப்போது, நீதிபதிகளையும் விமர்சனம் செய்தனர். மேலும் ஹெல்மெட் உத்தரவுக்கு எதிராக 12 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தர்மராஜ், தலைவர் என்ற பொறுப்பில் தீர்மானங்களில் கையெழுத்திட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவற்றை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழ்வாணன், "மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், செயலாளரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் பரிசீலிக்கப்படும். இல்லாவிட்டால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பேரமர்வு விசாரணைக்கு மாற்றலாம்" என்று பரிந்துரைத்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.
அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகம், விசாரணை நடைபெறும் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது கவனிக்கத்தக்கது. நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பான வழக்கு நடவடிக்கையை ஏராளமான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பார்த்தனர்.

No comments:

Post a Comment