Monday, 21 September 2015

பிரபல ரவுடியை போட்டுதள்ளிய வழக்கில் பிரபல ரவுடி மும்பையில் கைது - பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி மும்பையில் கைது



தி.மு.க. பிரமுகர் சுரேஷ் பாபு என்ற ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ‘அட்டாக்’ பாண்டி மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரையில் அப்போதைய மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ‘பொட்டு’ சுரேஷ், ‘அட்டாக்’ பாண்டி.
தி.மு.க. ஆட்சியின்போது வேளாண் விற்பனை குழு தலைவராகவும் ‘அட்டாக்’ பாண்டி பதவி வகித்தார். இதற்கிடையில் அவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன்பேரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் ‘அட்டாக்’ பாண்டிக்கு தி.மு.க.வில் மவுசு குறைய ஆரம்பித்து ‘பொட்டு’ சுரேஷ் மதிப்பு உயர்ந்தது. இது ‘அட்டாக்’ பாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவ்வப் போது ஒரு சில மோதல்களும் ஏற்பட்டு வந்தன.
தி.மு.க. ஆட்சி மாறியதும், மு.க.அழகிரியின் உதவியாளராக இருந்த ‘பொட்டு’ சுரேசும் ஓரம்கட்டப்பட்டார். அவரும் மு.க.அழகிரியை விட்டு மட்டுமின்றி, தி.மு.க.வை விட்டும் ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி 31–ந்தேதி மதுரையில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்தபோது ஒரு மர்ம கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் ‘பொட்டு’ சுரேசை சரமாரியாக வெட்டி தள்ளியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிகார போட்டியில் ‘அட்டாக்’ பாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை தேடினர். ‘அட்டாக்’ பாண்டியின் உறவினர்கள், கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டபோதும், முக்கிய குற்றவாளியான ‘அட்டாக்’ பாண்டி தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ‘அட்டாக்’ பாண்டியின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தனர். இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. இதற்கிடையில் ஜாமீன் கேட்டு ‘அட்டாக்’ பாண்டி சார்பில் பலமுறை மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் இனி கைதாவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அவரை பலரும் மறைந்து விட்ட நிலையில் இன்று மும்பையின் புறநகர் பகுதியில் ‘வசி’ என்ற இடத்தில் பதுங்கி இருந்த ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரை மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
‘அட்டாக்’ பாண்டி மும்பையில் கைது சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மும்பையில் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக காவல்துறை வரலாற்றிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment