மேகதாது திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசையும் கலசா – பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசையும் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
கன்னட அமைப்புகளின் சார்பாக நடக்கும் இந்த பந்த்தால் தமிழக – கர்நாடக மாநிலத்திற்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தினமும் 54 பஸ்களை பெங்களூர், ஹப்ளி போன்ற நகரங்களுக்கு பஸ்களை இயக்குகிறது.
இந்த பஸ்களில் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. காலை 6 மணி, 8 மணி, 9 மணி, 10 மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய இந்த 4 பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போல கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய 4 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து, ஓசூர் வரை இயக்கப்பட்டன. 8 பஸ்கள் இன்று காலையில் புறப்பட்டுச் சென்றன.
மாலை 6 மணிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று கர்நாடக பஸ் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கர்நாடகாவில் நிலைமை மோசமாக இருந்தால் பஸ் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment