Monday, 21 September 2015

விஷ்ணு பிரியா மரணம் தற்கொலை அல்ல கொலை: வைகோ பேட்டி


திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நெல்லை முத்துக்குமாரசாமி வழக்கு போல் இந்த வழக்கும் ஆகிவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தியும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணைபோகாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலின் முன்வைக்க வலியுறுத்தியும், மாவட்ட தலைநகரங்களில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசிய வைகோ " இலங்கை போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை ஏற்கத்தக்கது அல்ல. பன்னாட்டு விசாரணை அவசியம் வேண்டும். சுதந்திர தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 65 ஆயிரம் ஈழ தமிழர்களிடமும் அந்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அமெரிக்க தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க கூடாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பன்னாட்டு நீதி விசாரணை தீர்மானம் கொண்டு வர வேண்டும். முத்துக்குமார் இறந்தபோது மகன் மத்திய அமைச்சரவையில் இருந்ததால் மத்திய அரசு பற்றியும், பிரபாகரன் பற்றியும் வாய்திறக்காதவர் ராமதாஸ். மத்திய அமைச்சரவையில் சபையில் இடம்பெற்று இருந்ததால் தி.மு.க.வும் வாய்திறக்கவில்லை. துரோகிகளை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது" என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஈழத் தமிழர் படுகொலை குறித்து ஐ.நா. அமைத்த மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என அறிக்கை அளித்துள்ளது. இலங்கை மீதான பன்னாட்டு நீதி விசாரணையை மத்திய அரசு எதிர்க்கவோ நடுநிலை வகிக்கவோ கூடாது" என மத்திய அரசை கேட்டுக்கொண்டார். திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வைகோ, "டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தற்கொலை அல்ல, கொலை. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நெல்லை வேளாண்துறை முத்துக்குமாரசாமியின் வழக்கு போல் இந்த வழக்கும் ஆகிவிடக்கூடாது" என்றும் வைகோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment