Monday, 14 September 2015

மதுரை அருகே நரபலி புகாரில் பி.ஆர்.பி. உரிமையாளருக்கு போலீஸ் சம்மன்


மதுரை மாவட்டம் மேலூர் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியோன் (வயது40) என்பவர் கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதித்த 4 பேர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். 

இதன்பேரில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் சகாயம், நரபலி தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்தார். சகாயத்தின் உறுதிமிக்க நடவடிக்கையால் நேற்று சர்ச்சைக்குரிய இடம் தோண்டப்பட்டு, ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

அந்த எலும்பு கூடுகளில் தேங்காய் மற்றும் காவி துணிகள் காணப்பட்டது. எனவே இது நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்ட உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இந்த எலும்புகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். கைப்பற்றப்பட்ட எலும்பு கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதாக சேவற்கொடியோன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, ஊழியர்கள் ஜோதிபாசு, அய்யப்பன், பரமசிவன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அதில், நாளை காலை 10 மணிக்கு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment