Thursday, 3 September 2015

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி- தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தாமிரபரணி பாசன விவசாயிகளின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள முதியவரும் தியாகியுமான நயினார் குலசேகரன் அவர்கள் என்னைச் சந்தித்து, நாங்கள் தொடர்ந்து போராடியும் இன்று வரை இருக்கும் அரசுகள் திருவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியை மேற்கொள்ளவில்லை.
நீங்கள்தான் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்து, இந்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் மூலம் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரச் செய்தேன்.
தூர் வாரும் பணியை அணைக்கட்டு பகுதியிலிருந்து தான் தொடங்க வேண்டும். பக்கவாட்டில், நீள வாட்டில் தூர்வாராமல், அகல வாட்டில் தான் தூர் வார வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் நான் வலியுறுத்தியதால் நீதியரசர் ஜோதிமணி என் வாதத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு பொதுப் பணித்துறையினரும் அவ்விதமே வேலையைத் தொடங்க வேண்டும் என ஆணையிட்டார். பொதுப் பணித்துறையின் அதிகாரிகளும் அப்படியே நடந்து கொள்வோம் என உறுதி அளித்தனர்.
திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியில் என்னிடம் கொடுத்த வாக்குறுதியின்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை.
தூர் வாரும் பணியை அணைக்கட்டிலிருந்து தொடங்க வேண்டும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். நயினார் குலசேகரன் போன்ற விவசாய சங்கத் தலைவர்களுக்கு சுயநலம் இருக்காது. அப்படிப்பட்டவர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.
திருவைகுண்டம் அணைப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் நம்பிக்கையும், உத்தரவாதமும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தமிழக அரசு சந்தேகங்களுக்கு இடம் அளிக்காத வகையில் அணைக்கட்டிலிருந்து அகல வாட்டில் தூர் வாரும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment