Wednesday, 2 September 2015

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை கண்மூடி தாக்குதல்! வைகோ கண்டனம்


மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம், பொதுத்துறை பங்குகள் விற்பனை போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, 12 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில், செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
தமிழ்நாட்டில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சிதம்பரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறியல் அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இன்று நண்பகல் 12 மணி அளவில் சிதம்பரம் புகை வண்டி நிலையத்தின் அருகில் மார்க்சிஸ்டு  கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும், ஏராளமான விவசாயத் தொழிலாளர்களும் மறியல் அறப்போராட்டத்திற்கு திரண்டனர்.
சிதம்பரம் புகை வண்டி நிலையத்திற்குள் சென்று மறியல் செய்ய முயன்ற கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்களைத் தடுத்து நிறுத்தி, கொடூர தடியடித் தாக்குதல் நடத்தி உள்ளனர். காவல்துறையினரின் அக்கிரம நடவடிக்கையால் நிலைகுலைந்து கீழே விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, சிதம்பரம் அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மறியல் போராட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, அவர்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது.
ஜனநாயகத்தில் அறவழிப் போராட்டத்தை அடக்குமுறை மூலம் நசுக்க நினைக்கும் ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கத் தோழர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment