Monday, 14 September 2015

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஜெ. அரசு தவறிவிட்டது: பட்டியலிட்டு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு



தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது என்று பட்டியலிட்டு ஜெ அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்பெருமை பேசி கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெங்காயம் விலை கடந்த 50 நாட்களாக அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.20&க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இப்போது 500% விலை உயர்ந்து  ரூ.100&க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகளும் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சென்னையில் ஒருகிலோ துவரம் பருப்பு ரூ.175, உளுத்தம்பருப்பு ரூ.165 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் தங்களது உணவில் பருப்பும், வெங்காயமும் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வெங்காயம் மற்றும்  பருப்பு வகைகள் விலை உயர்ந்ததற்கு அவற்றின் விளைச்சல் குறைந்தது தான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இது உண்மை தான் என்ற போதிலும், பதுக்கலும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உதாரணமாக, ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை சென்னையில் ரூ.175 ஆக இருக்கும் நிலையில்,  மும்பையில் ரூ.135&க்கும், தில்லி மற்றும் கொல்கத்தாவில் ரூ.130&க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், உளுத்தம்பருப்பு விலையிலும் சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் இடையே கிலோவுக்கு  ரூ.45 வரை வித்தியாசம் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பருப்பு வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. விளைச்சல் குறைவு என்றால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் விலை இருக்கும். ஆனால், சென்னையில் மட்டும் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் சென்னையில் பருப்பு வகைகள் அதிகமாக பதுக்கப்படுவது தான்.  வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களை விட சென்னையில் மிக அதிகமாக இருப்பதற்கும் பதுக்கல் தான் காரணமாகும்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் ரூ.35 ஆக இருந்த ஒருகிலோ வெள்ளைப் பொன்னி  அரிசியின் விலை இப்போது ரூ.55 ஆக உயர்திருக்கிறது. நல்லெண்ணை விலை 130 ரூபாயிலிருந்து  100% அதிகரித்து ரூ.260 ஆக உள்ளது. உளுத்தம் பருப்பு 55 ரூபாயிலிருந்து மும்மடங்கு அதிகரித்து ரூ.165 ஆக உள்ளது. துவரம் பருப்பு 52 ரூபாயிலிருந்து ரூ.175 ஆகவும், புளி ரூ.55 ரூபாயிலிருந்து ரூ.180 ஆகவும் அதிகரித்துள்ளது. மிளகாய் 72 ரூபாயிலிருந்து ரூ.180 ஆக உயர்ந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது இரு மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை.

பொதுவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்போது, அவற்றின் பதுக்கலைக் கட்டுப்படுத்துவது, நியாயவிலைக்கடைகளில் அதிகமாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ள வில்லை. குறிப்பாக நியாயவிலைக்கடைகளில் அனைவருக்கும் முறைப்படி பருப்பு வழங்கப்பட்டிருந்தாலே வெளிச்சந்தையில் பருப்பு விலை வீழ்ச்சியடைந்து இருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு தவறி விட்டது. வெளிச்சந்தையில் பருப்புவிலையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 107க்கும், முதல் ரக உளுத்தம்பருப்பு ரூ.112க்கும், இரண்டாம் ரகம் ரூ.99&க்கும் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இப்போது அந்தக் கடைகளில் இந்த விலையில் பருப்புகள் விற்கப் படுவதில்லை. பண்ணைப் பசுமைக்கடைகளில்  வெங்காயம் சற்று குறைந்த விலையில் விற்கப்படும் போதிலும், அத்திட்டத்தால் ஒரு சிறிய குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயனடைகின்றனர். தமிழகஅரசின் இப்போக்கால் வெங்காயம்  பருப்பு  போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஏழை, நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும்,  பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். 

No comments:

Post a Comment