Thursday, 3 September 2015

1 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளில் மரங்கள் நட்டு தோட்டம் அமைக்கப்படும் -ஜெயலலிதா அறிவிப்பு


முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை யில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். - அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நகரப் பகுதிகளின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் உருவாகும் குப்பைகளை,  மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து, முறையாக அப்புறப் படுத்துதல் மிகப் பெரிய சவாலாக அமைந்து உள்ளது.  கிராமங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கு எனது அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.  கிராம ஊராட்சிகளில் கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் எனது அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  முதற்கட்டமாக 2,000 கிராம ஊராட்சிகளில் ‘தூய்மை காவலர்களை’ கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டம் மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சி களுக்கு விரிவுபடுத்தப்படும் என்பதையும்;  இதற்கென 300 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக 30 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
ஊரக பகுதிகளை பசுமை மயமாக்கும் வண்ணம் ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் அமைக்கப்பட்ட  சாலைகள் ஆகிய சாலைகளின்  இரு  மருங்கிலும்  மரக் கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 2,000 கி.மீ நீளமுள்ள சாலைகளின் இரு மருங்கிலும்,  47 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மரக் கன்றுகள் நடப்பட்டு ஊரகப் பகுதிகள் பசுமை மயமாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
ஊரகப் பகுதியில்  சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், தனி நபர் இல்லத்தில் பலன் தரும்  பழக் கன்றுகள்,  மரக் கன்றுகள் வளர்த்திட வழிவகை செய்யும் நோக்கிலும், 2015-16 ஆம் ஆண்டில் 54,000  இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டப் பயனாளிகள் மற்றும்   60,000 பசுமை வீடுகள் திட்டப் பயனாளிகள் என மொத்தம் 1,14,000 பயனாளிகளின் இல்லங்களில், வீட்டுத் தோட்டம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கென ஒவ்வொரு பயனாளிக்கும் 4 பழக்  கன்றுகள்  அல்லது மரக் கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக் கன்றுகளை பயனாளிகளே தங்கள் தேவைக்கேற்ப தெரிவு செய்ய வாய்ப்பு அளிக்கப் படும். இதற்கென மரக் கன்றுகள் பெறுவது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மூலம் 1,14,000 இல்லத் தோட்டங் களில் மரங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் 12 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் செயல்படுத் தப்பட்டு வருகிறது.  எஞ்சியுள்ள 96 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற, வாழ் வாதார இயக்கம் மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மகளிரை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தினை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஒருங்கிணைத்து  செயல்படுத்திட நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளேன். 

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு முதல் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சில  கூறுகளான சமூக திரட்டு மற்றும் சமுதாய நிறுவன மேம்பாடு, திறன் வளர்ப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சிகள் மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள்  ஆகிய செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 178 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment