புழல், பாளை, கோவை மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி வளாகங்களில் ரூ.14.57 கோடியில் 100 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தது. விவாதத்துக்கு இடையே, பேரவை விதி110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார். அவர் கூறியதாவது:
கைதிகளை சீர்திருத்தும் இடமாக விளங்கும் சிறைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சிறைப் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதிலும் நாட்டுக்கே வழிகாட்டியாக தமிழகம் விளங்குகிறது.
தமிழக சிறைத்துறையின் கீழ் செயல்படும் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், வளர் இளம் பருவத்தினர் சீர்திருத்தப்பள்ளி (பார்ஸ்டல் பள்ளி) மற்றும் புதுக்கோட்டையில் உள்ள மாவட்டச் சிறை ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் சிறைவாசிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளிப்பது மற்றும் சிறைகளில் உள்ள 30 அவசர கால வாகனங்களில் உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள் வைத்திருப்பது அவசியம்.
இதைக் கருத்தில்கொண்டு சிறைகளில் உள்ள 13 மருத்துவமனைகள் மற்றும் 30 அவசரகால வாகனங்களுக்கு ரூ.2.34 கோடியில் ஆக்ஸிஜன் புளோ மீட்டர், டிராலி, மல்டி சேனல் மானிட்டர், வென்டிலேட்டர் உள்ளிட்ட 13 வகை உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும்.
சிறைத்துறை பணியாளர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 100 குடியிருப்புகள் கட்ட ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 300 குடியிருப்புகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், 100 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 100 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும்,100 குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தப் புள்ளிகள் பரிசீலனையில் உள்ளது.
நடப்பாண்டில் ரூ.14.57 கோடியில் புழல், பாளையங்கோட்டை மற்றும் கோவை மத்திய சிறை வளாகங்களில் தலா 30, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்டச் சிறை வளாகத்தில் 10 குடியிருப்புகள் என மொத்தம் 100 குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்படும். இவை சிறைத்துறை மேம்படவும், சிறைப்பணியாளர்கள் செம்மையாக பணியாற்றவும் வழிவகுக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment