விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நாடுதழுவிய பந்த் காரணமாக கேரளா, தலைநகர் புதுடெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார்மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
பாஜக ஆதரவு தொழிற்சங்கங்களான பி.எம்.எஸ்., என்.எஃப்.ஐ.டி.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
முடங்கியது கேரளா:
24 மணி நேர பந்த் காரணமாக கேரளாவில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. டாக்ஸி, ஆட்டோரிக்ஷாக்களும் ஓடவில்லை. ஒருசில தனியார் கார்கள் மட்டுமே ஓடுகின்றன. உணவகங்கள், கடைகள், சிறு டீக்கடைகள், பெரும் வணிக நிறுவனங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
பந்த் காரணமாக கொச்சி துறைமுகத்தில் பணிகள் நிறுத்தம்
கொச்சின் துறைமுகப் பணிகள் முடங்கின. டெக்னோபார்க், இன்ஃபோபார்க் போன்ற ஐ.டி. நிறுவனங்களில்கூட குறைந்த அளவிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்திலும் பாதிப்பு:
மேற்குவங்கத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் கடைகள், சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், பொது போக்குவரத்து வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பேருந்துகள், டாக்ஸிகள் ஓடவில்லை. செல்டா போன்ற புறநகர் பகுதியில் மட்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றபடி ரயில் போக்குவரத்து இயல்பாக இருப்பதாக கிழக்கு ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைசூரில் கல்வீச்சு:
கர்நாடக மாநிலத்தில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. காலை வழக்கம் போல் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயகக்ப்பட்டன. ஆனால் மைசூரில் வால்வோ பேருந்துகள், மாநகரப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம், சாந்தி நகர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னையில் வங்கி சேவை பாதிப்பு
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், வேலைநிறுத்தப் போராட்டத்தில் சென்னை நகர் முழுவதும் 15,000 ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவித்திருந்தார். இதன் காரணமாக சென்னையில் வங்கிச் சேவை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கினாலும், ஆட்டோகள், ஷேர் ஆட்டோக்கள் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் நடைபெறுகிறது. கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மூடப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஆந்திராவில் பொதுத்துறை வங்கிச் சேவை முடக்கம்:
ஆந்திர மாநிலத்தில் பந்த் காரணமாக பொதுத்துறை வங்கிச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு கூடாது என்ற 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்து வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
முனிசிபல் நிர்வாகப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. குண்டூர் மாநிலத்தில் பேரணியில் ஈடுபட்டவர்கள் போலீஸார் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
குண்டூரில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் சாலை மறியல்:
புதுச்சேரியில் பந்த் காரணமாக தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள், ஆசிரியர்கள் வரத்து குறைவாகவே உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.
மாநிலம் முழுவதும் இடதுசாரி தொழிறசங்கத்தினர் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தி ஹிந்து
No comments:
Post a Comment